Advertisement

ஹிந்து காவலர்களுக்கு நேரமில்லையோ!

என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ராமேஸ்வரத்தில், பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிய, ராமநாதசுவாமிக்கே, ஆகமவிதி மீறலால், அந்த தோஷம் மீண்டும் பிடித்து விட்டதாம்; அதற்காக கோவில் நிர்வாக அதிகாரி மீது, நடவடிக்கை எடுத்து, பரிகாரம் செய்ய வேண்டுமாம்... இப்படி கொடி பிடித்து போராடுகின்றனர், ஹிந்து முன்னணியினர்!

உண்மையில் ஆகம விதிமீறல்கள் என்பது, என்ன தெரியுமா...

* கோவில் நடை சாத்திய பின், வலுக்கட்டாயமாக கோவிலை திறந்து, வி.ஐ.பி.,க்களை தரிசனம் செய்து வைப்பது...
* கோவில் கருவறைக்குள், பக்தர்களை அழைத்து சென்று, அவர்கள் கையால் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்ய அனுமதிப்பது!
* வசதியான குடும்பத்தினர், எந்த இடைஞ்சலும் இன்றி, நிம்மதியாக தரிசனம் செய்ய, மற்ற பக்தர்களை வலுக்கட்டாயமாக, கோவிலை விட்டு வெளியேற்றுவது!
* ராமநாத சுவாமியுடன், 'செல்பி' எடுக்க, வசதியான குடும்பத்தினரை அனுமதிப்பது...

இந்திய முதல் பணக்காரரான, முகேஷ் அம்பானியால், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், ஆகம விதிமீறல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக, உச்சிக்கால பூஜை முடிந்தவுடன், கோவில் நடை, பகல், 1:00 மணிக்கு சாத்தப்பட்டு, மீண்டும் மதியம், 3:30 மணிக்கு திறக்கப்படுமாம்; இது தான், காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும், ஆகம விதியாம்!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு, முகேஷ் அம்பானி, தன் குடும்பத்தாருடன் காலதாமதமாக வந்துள்ளார். அவருக்காக, விதி மீறி, கோவிலில் தரிசனம் செய்து வைக்கப்பட்டதாம்! இதை எல்லாம் தட்டிக் கேட்டு போராட்டம் நடத்த, ஹிந்து மத காவலர்களுக்கு நேரமில்லை போலும்!

இது மட்டுமல்ல... கோவிலில், தர்ப்பணம் செய்ய வரும், அப்பாவி பக்தர்களிடம் இருந்து, புரோகிதர்கள் மிரட்டி அதிகம் சம்பாதிக்கின்றனர். பர்வதவர்த்தனி அம்மன் சன்னதி, சாக்கடை நீரால் நாறிப் போயிருக்கிறது. அக்னி தீர்த்தத்தில், நிறைய அக்கிரமங்கள் நடக்கின்றன. ஆட்டோக்காரர்கள், லாட்ஜ் உரிமையாளர்கள் அடிக்கும் கொள்ளைகள் சொல்லி மாளாது; இவை அனைத்தும், பக்தர்களை நோகடிக்கும் செயல்கள் தானே!

கோடீஸ்வரர், அம்பானிக்காக கோவிலை மூடும் நேரத்தை, ஒரு மணி நேரம் தாமதம் செய்தது, மன்னிக்க முடியாத, ஆகம மீறல் தான். ராமநாதசுவாமி கோவிலில், ஆகம விதிகள் மீறப்படுகிறதே என, கவலைப்படும், ஹிந்து முன்னணி தலைவர்கள், ராமேஸ்வரத்தில் நடக்கும், மற்ற அத்துமீறல்களை தடுக்க, எதுவும் செய்ததாக தெரியவில்லையே!

---

தி.மலைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும்!எஸ்.வைத்தியநாதன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: திருவண்ணாமலையில் நடைபெறும், பவுர்ணமி கிரிவலத்திற்கு, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து, ஏராளமானோர் வருகின்றனர். இது தவிர, அருணாசலேஸ்வரர் கோவில், ரமணர், விசிறி சாமியார், சேஷாத்ரி ஆசிரமங்கள், செஞ்சி கோட்டை, சாத்தனுார் அணை போன்ற இடங்களுக்கு, சுற்றுலா பயணியர் வருகை அதிகமாக உள்ளது.

சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு, சிறப்பு பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. ஆனால், சென்னை எழும்பூர் - திருவண்ணாமலை நேரடி ரயில் கிடையாது. காட்பாடியில் இருந்து, விழுப்புரம், புதுச்சேரிக்கு குறைந்த பாசஞ்சர் ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தாம்பரத்தில் இருந்து, விழுப்புரம் வரை இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலை, திருவண்ணாமலை வரை நீட்டிக்க வேண்டும். விழுப்புரம் - தாம்பரம் பாசஞ்சர் ரயில், தாம்பரம் பிளாட்பாரத்தில் காலை, 9:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை காலியாக நிறுத்தப்படுகிறது. இதனால், தெற்கு ரயில்வேக்கு இழப்பு ஏற்படுகிறது. இதை, பகலில் இயக்கினால், ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து, பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா ரோடு, காட்பாடி, வேலுார், ஆரணி ரோடு, போளூர் வழியாக, திருவண்ணாமலைக்கு, தினசரி ரயில் இயக்கலாம். திண்டிவனம் - திருவண்ணாமலை இடையே செஞ்சி, கீழ்பெண்ணாத்துார் வழியாக, புதிய ரயில் பாதை அமைக்கும் பணி, 10 ஆண்டுகளில், 20 சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. இந்த அகல பாதை ரயில் திட்டத்திற்கு, கூடுதல் நிதி ஒதுக்கி, விரைவில் பணிகளை முடிக்க வேண்டும்.

சென்னை - திருவண்ணாமலை இடையே தினசரி ரயில் இயக்க, தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, அனைத்து தரப்பினரின் வேண்டுகோள்!

---

விவசாய கடனுக்கு மானியத்தை தாருங்கள்!எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: நாடு முழுவதும் உள்ள, தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகள், கடன் வழங்குவதில் மிகவும் எச்சரிக்கையாகி விட்டன. அரசு ஊழியர்களுக்கு வீட்டுக் கடன் கொடுத்து, வீட்டை அடமானமாக வாங்கிக் கொள்கின்றன. நகைகளை அடமானமாக பெற்று, கடன் கொடுக்கின்றன. இவ்விரு கடன்களை மட்டுமே, அனைத்து வங்கிகளும் பிரதானமாக வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கின்றன. நிலப்பட்டா வழங்கினால், 5 லட்சம் ரூபாய் வரை, விவசாய கடன் தரப்படுகிறது. இந்த கடனுக்கு, 7 சதவீதம் வட்டி வசூல் செய்யப்படுகிறது. இது மாதிரியான, விவசாயக் கடனுக்கு, மத்திய அரசு, 3 சதவீதம் மானியம் வழங்குகிறது.

இந்த கடனை, ஓராண்டிற்குள் அடைக்க வேண்டும். எந்த வங்கியும், மத்திய அரசு கொடுக்கும் மானியத்தை, வட்டியில் கழிப்பது கிடையாது. வாடிக்கையாளர்களின் கணக்கில் வரவு வைப்பதாக கூறுவர், ஆனால், எப்போது என, எவருக்கும் தெரியாது. வரவு வைத்த விபரத்தை, கடிதம் மூலமாக, வங்கிகள் தெரிவிப்பதில்லை. அடிக்கடி வங்கிக்கு சென்று, வரவு - செலவு, கணக்கு பரிவர்த்தனை செய்வோருக்கு மட்டும் தெரியும். பெருவாரியான மக்கள், நகையை அடகு வைப்பதற்கு மட்டுமே சேமிப்பு கணக்கே துவக்குகின்றனர்.

நகையை திருப்பியவுடன், வங்கிப் பக்கமே செல்வதில்லை. இது மாதிரியான வாடிக்கையாளர்களின் மானியம், வங்கிகளில் கோடிக் கணக்கில் தேங்கியுள்ளது. இப்பணத்தில் மோசடி நடப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, மத்திய அரசு கொடுக்கும், விவசாய கடனுக்குரிய மானியத் தொகையை, நகையை திருப்பும் போதே கழித்து கொடுக்க வேண்டும். ஏற்கனவே, மத்திய அரசால் கொடுக்கப்பட்டுள்ள, 3 சதவீத மானியத் தொகை வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என, வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • ஹரிஷ் - விழுப்புரம்,இந்தியா

    திரு.மல்லிகை மன்னன் அவர்களின் பதிவு, கருத்து என்பதை விட பல லட்சம் பாமர பக்தர்களின் ஆதங்கம் என்றே சொல்லலாம்.இன்றைக்கும் கடவுள்தான் அரசாங்கத்தை வாழ வைக்கிறாரே தவிர அரசு கடவுளுக்கும் ,கோயில்களுக்கும் தன் சொந்த நிதி எதையும் செலவிடவில்லை.கோயில்களின் வருவாய் மூலம் கோடி கோடியாய் பெரும் அரசாங்கம் அங்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தராமல், அய்யா அவர்கள் சொன்னது போல ஆகம விதிகளை மீறி சில பணக்கார மற்றும் பெரும்புள்ளிகளுக்காக செய்யும் விதி மீறல்கள் கடவுளுக்கே பொறுத்து கொள்ள இயலாத அளவில் உள்ளது. தெய்வம் நின்று கொல்லும் என்பதை எல்லோரும் வாழ்வில் ஒருநாள் உணர்வர், அன்றைக்கு வருந்தி பயன் இல்லை .

  • M. Ashokkumar - Hyderabad,இந்தியா

    திரு எஸ். வைத்தியநாதன் அவர்களின் பதிவு ,கருத்து பல லட்சம் பக்தர்களின் மற்றும் மக்களின் வேண்டுகோள். அனைவரும் பதிவு செய்ய நினைத்ததை அவர் பதிவு செய்துள்ளார். இதற்காக அவருக்கும், தினமலர் நாளிதழுக்கும் மிகவும் நன்றி. தென்னக ரயில்வே லாப நஷ்ட கணக்கு பார்க்காமல் விரைந்து இரயில் களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டிவனம் செங்கம் - திருவண்ணாமலை இரயில்பாதையை விரைவில் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு ஒரு வருடம் முன்பு ரயில்வே தெரிவித்த படி நில ஆர்ஜித பணிகள் தமிழக அரசால் முடிக்க படவில்லை என்ற தகவல். தற்போதய நிலை என்னவோ? தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மறைந்த முதல்வர் அம்மாவிற்கு நினைவிடம் அமைக்க கட்டும் வேகத்தை இந்த திட்டத்திலும் காண்பிக்க வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement