Advertisement

நெல் எல்லாம் ஜெயராமன் பெயர் சொல்லும்...

இன்று காலையில் காலமான ஜெயராமனின் மறைவிற்கு கடல் கடந்து வாழும் தமிழர்கள் உள்ளீட்டோர் கண்ணீர் அஞ்சலி செலுத்திவருகி்ன்றனர்.

சாதாரண ஜெயராமனாக இருந்தவர் தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவான நெல் விதைகளை பாதுகாத்ததால் நெல் ஜெயராமன் ஆனார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் 9ம் வகுப்பு வரை படித்தவர்.நஞ்சில்லா உணவை முன்னிறுத்தி இயற்கை வேளாண் விஞ்ஞாணி மறைந்த நம்மாழ்வார் நடத்திய ஒரு மாத கால விழிப்புணர்வு பயணத்தில் அவருடன் பங்கேற்று அவரது அன்பையும் நம்பிக்கையையும் பெற்றவர். நம்மாழ்வாரை பின்பற்றி இயற்கை விவசாயத்தை பாதுகாக்க போராடினார்.

காலம் மறந்து போன நெல் விதைகளை மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் கடந்த 22 ஆண்டுகளாக பாடுபட்டவர் இந்த நீண்ட நெடிய போராட்டம் காரணமாக தனி ஒருவராக 174 வகையான நெல் விதைகளை சேகரித்தார். திருவாரூர் மாவட்டம் ஆதிரெங்கத்தில் கடந்த 11 ஆண்டுகளாக நெல் திருவிழா நடத்தி இளைஞர்களை விவசாயத்தின் பக்கம் ஈர்த்தவர்.

இரண்டு நாள் நடைபெறும் இந்த நெல் திருவிழாவில் அகில இந்திய அளவிலான விவசாயிகள் பங்கேற்கிறார்கள்.கடந்த வருடம் 5 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்றனர்.இங்கு வரும் ஒவ்வொருவருக்கும் இரண்டு கிலோ பராம்பரிய நெல் விதை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த நெல்லைக்கொண்டு விவசாயம் செய்தபின் நான்கு கிலோவாக அடுத்த ஆண்டு திருப்பித் தரவேண்டும் அது மட்டுமே வேண்டுகோள்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் தஞ்சை டெல்டா பகுதியில் போதிய தண்ணீரின்றி நெல் விவசாயம் பாதிக்கப்பட்ட போது ஜெயராமன் தோட்டத்து நெல் பண்ணையில் மட்டும் கதிர்கள் ஜோராக வளர்ந்திருந்தன காரணம் அதுதான் நம் பாரம்பரிய நெல்லின் சிறப்பு. கிடைக்கிற தண்ணீரில் இருக்கிற சூழ்நிலையில் தன்னையும் பாதுகாத்து மக்களையும் பாதுகாக்க வல்லதுதான் நமது பராமபரிய நெல் என்பதை தக்க சான்றுகளோடு உலகிற்கு உரைத்தவர்.

12 ஆண்டுகளாக அவற்றை மறு உற்பத்தி செய்து 37 ஆயிரம் விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற செய்தார். இதனை கேரளா, மேற்கு வங்கம், ஒரிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கும் இந்த விவசாயத்தை கொண்டு சென்றவர்.


இதன் பின்னரை மத்திய மாநில அரசுகள் இவருக்கு விருதுகளை வழங்கி இவரது கண்டுபிடிப்புகள் முக்கியமானது அதைவிட முக்கியமாக இவர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இவர் மீது கவனம் செலுத்தியது.

எப்போது இவர் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் எழுந்ததோ அப்போதுதான் புற்றுநோய் இவரை கடுமையாக பாதித்தது.

இவரை மருத்துவமனையில் சந்தித்து பேசிய போது, நண்பரே என்னைப்பற்றி என் நோய் பற்றி அதன் கஷ்டம் பற்றி எல்லாம் சொல்ல வேண்டாம், இந்த பாரம்பரிய நெல் விவசாயத்தை சிக்கிம்,ஒரிசா உள்ளீட்ட மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டன நம் தமிழகமும் ஏற்றுக்கொள்ளவேண்டும் அதற்காக உழைக்க இளைஞர்கள் முன்வரவேண்டும் அவர்கள் கையில்தான் பாரம்பரிய நெல் விவசாயம் இருக்கிறது என்ற செய்தியை விதையுங்கள் அது போதும் என்றவர்

இதற்காகவே தமிழக இயற்கை உழவர் இயக்கம், நமது நெல்லை காப்போம் ஆகிய அமைப்புகளை நடத்தி வந்தார்.

அவரது கனவு நனவாக வேண்டும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் அவர் பெயர் சொல்லிக்கொண்டு இருக்கும் நெல் ரகங்களை பாதுகாத்திட வேண்டும் இதற்கு அவர் நடத்திய இயக்கங்களை தொடர்ந்து நடத்திட வேண்டும் இதுவே நெல் ஜெயராமன் ஐயாவிற்கு நாம் செலுத்தும் சரியான அஞ்சலியாகும்.

எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • sivakumar - Qin Huang Dao,சீனா

    தமிழ் நாடு மற்றும் இந்தியா பெற்ற மாமனிதர் , கடும் உழைப்பாளி . விவசாயிகளின் நல் (நெல் ) வழிகாட்டி . இதய பூர்வமான அஞ்சலிகள் . நெல் இருக்கும் வரை தெய்வ திருவாளர்கள் ஜெயராமன் மற்றும் நம்மாழ்வார் பெயர்கள் நிலைத்து இருக்கும் என்பது உறுதி

  • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

    வணங்குதலுக்கு உரியவர்,

  • Darmavan - Chennai,இந்தியா

    நெல் ஜெயராமன் பரம்பரை இதை தொடருமா/ தொடரவேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement