Advertisement

'ஊருக்கு உழைத்திடல் யோகம் - இன்று தன்னார்வ தொண்டர்கள் தினம்

'ஊருக்கு உழைத்திடல் யோகம்நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்போருக்கு நின்றிடும் போதும்-மனம்பொங்கலிலாத அமைதி மெய்ஞானம்'என்பான் பாரதி.
தனக்கென உழைப்பவர்கள் இந்தஉலகிலே அதிகம் உண்டு. ஆனால் சுயநலமின்றி அனைவரும் வாழ்வதற்காக தனது உடலையும், மனதையும் வருத்தி ஒரு வேள்வியைப்போல தனது பணியினை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி செய்பவர்களே தன்னார்வத் தொண்டர்கள். அந்த வேள்வியை நாள்தோறும் நடத்திக் கொண்டிருக்கும் அவர்களை நினைவுபடுத்தும் நாள் இன்று.''தன்னலமற்ற, துடிப்பான, தேசபற்றுமிக்க 100 இளைஞர்களைத் தாருங்கள். இந்த நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன்'' என கேட்ட சுவாமி விவேகானந்தரின் அற்புதமான இளைய சமுதாயத்தை இந்த தன்னார்வ தொண்டர்கள் வாயிலாக பார்க்கிறோம்.'சேவையே இறைவழிபாடு' என்பார் மகாத்மா. உண்மையில் இந்த உலகம் இன்னமும் நம்பிக்கையோடு இயங்கிக் கொண்டிருக்க காரணம் தன்னார்வம் மிக்க தொண்டர்கள்தான் என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும்கூட தன்னலமற்ற நண்பர்களை நாம் கவனிக்கிறோம் என்றாவது ஒருநாள் அவர்களை பாராட்டி இருக்கிறோமோ என்று நினைத்துப்பாருங்கள். கோவில் திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், இயற்கைச் சீற்றங்கள், மாநாடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நமக்கு சிரமம் இல்லாமல் துன்பங்களை அவர்கள் தாங்கிக் கொண்டு நம்மை தாங்கிப்பிடிக்கும் தன்னார்வ தொண்டர்களை நாம் அனுதினமும் நினைத்துப் பார்க்க வேண்டும்.ஓட்டுக்காக வரவில்லைசமீபத்தில் நம்மை உலுக்கிப் போட்ட 'கஜா' புயலாக இருந்தாலும், கடல்கொண்ட சுனாமியாக இருந்தாலும், குஜராத் பூகம்பம், கேரள வெள்ளம், சென்னை வெள்ளம் ஆகிய அனைத்திலும் களத்திலே நிற்கும் அந்த தன்னலமற்ற தொண்டர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட பலரும் உங்களிடம் ஓட்டுக்காக வரவில்லை என்பதே நிதர்சனம். நல்ல மனங்களைத் தேடி சக மனித துன்பத்தை தனது துன்பமாக ஏற்றுக் கொண்டு அவர்களின் துன்பங்களை எவ்வகையிலாவது துடைத்திட நம்மால், இயன்ற ஏதாவது ஒன்றை செய்திட வேண்டும் என்ற எண்ணத்தில் சுழன்று வரும் அவர்களை எத்தனை முறை பாராட்டி இருப்போம். நிச்சயமாக அவர்கள் அந்த பாராட்டினை ஏற்றுக் கொள்ளகூட நேரமில்லாமல் அடுத்த சேவைக்கு சென்றுவிடுவார்கள்.1969ல் காந்தி நுாற்றாண்டு விழாவில் ஏற்படுத்தப்பட்ட ஒன்றே பள்ளி, கல்லுாரிகளில் இருக்கும் நாட்டு நலப்பணித்திட்டம் என்ற மாணவர் சேவை அமைப்பு. மாணவர்களுக்கு சமூக பொறுப்பு இல்லை என்பவர்கள் ஒருமுறையாவது அந்த நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் அவர்களுடன் 7 நாட்கள் தங்கியிருந்து பாருங்கள். எத்தகைய பொறுப்புணர்வும்,தன்னம்பிக்கையும் உடைய தன்னார்வ தொண்டர்களை வருங்காலத்திற்கு நாம் உருவாக்கி வருகிறோம் என்பது புரியும். இன்று களத்திலே நிற்கும் அந்த தன்னார்வ தொண்டர்கள் பள்ளி, கல்லுாரி காலங்களில் நிச்சயமாக இதுபோன்ற ஏதோவொரு சேவை அமைப்பிலே இருந்திருப்பார்கள்.தொண்டுள்ளம்'உனது கடைசி ஆசை என்ன?' என துாக்கிலிடுவதற்கு முன்பு பகத்சிங்கிடம் கேட்ட போது, 'சிறைச்சாலையில் மலம்அள்ளும் அந்த பெண்ணின் கைகளால் ரொட்டி சாப்பிட வேண்டும்' என்றாராம். அங்கு பணியாற்றிய தன்னலமில்லாத ஒரு பெண் அப்போதும் அவரின் கண்களுக்கு தெரிந்திருக்கிறார். தொழுநோயாளிகளையும் ஆதரவற்றோர்களையும் ஆதரித்து அவர்களுக்காக நிதி வசூல் செய்கையில், எச்சில் உமிழ்ந்த ஒருவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே, 'எனக்கு எச்சிலைத் தந்தீர்கள். இந்த குழந்தைகளுக்கு என்ன தரப்போகிறீர்கள்?' என கேட்டு எச்சில் உமிழ்ந்தவனையும் தனது அன்பால் மாற்றிய அன்னைத் தெரசா. பசியோடு இருப்பவர்கள் எப்படி படிக்க வருவார்கள் என்றபடியே அனைவருக்கும் மதிய உணவு வழங்கிட்ட காமராஜர், வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த கக்கன், தனதுகுடும்பம் வறுமையில் தவித்திட்டாலும் எங்கோ இருக்கும் பீஜி தீவிலே தோட்டத் தொழிலாளிகள் பட்ட துன்பத்தை நினைத்துக் கண்ணீர் விட்ட பாரதி, சீமானாக வாழ்ந்திருக்க வேண்டியவர் தேச விடுதலை விரும்பி தனது சொத்துக்களை இழந்து செக்கிழுத்து கல் உடைத்து விடுதலைக்கு அர்ப்பணித்திட்ட வ.உ.சி., சிறைக்குச் சென்று தொழுநோயாளியாக திரும்பிய சுப்ரமணிய சிவா, 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் என் உள்ளம் வாடுகிறதே' என உள்ளன்போடு அனைவரின் பசிப்பிணி போக்க வந்த வள்ளலார் உள்ளிட்ட பலரும் வாழ்ந்த புண்ணிய பூமி. அவர்களைப்பற்றி படிக்கும்போது நமக்கு ஞாபகம் வருவது அவர்கள் வகித்த பதவிகளையும் தாண்டி அவர்களின் தன்னலமற்ற தொண்டுள்ளம் தான்.நல்ல மனிதர்கள்இந்த உலகத்தை மாற்றி அமைத்தவர்களின் வரலாறுகள் அவர்களை நமக்கு தன்னலமில்லாத மனிதர்களாகவே அறிமுகம் செய்துள்ளன. நல்ல செயல்களைச் செய்பவர்களையே இந்த உலகம் மிகச்சிறந்த தலைவர்களாகவும் நல்ல மனிதர்களாகவும் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும், தெருவிலும், ஊருக்காக உழைத்தவர்கள் செய்திட்ட சேவைகள் ஏதேனும் ஒரு அடையாளமாக இருக்கிறது.ஒரு பாலமாகவோ, கோயிலாகவோ, கிணறாகவோ, பேருந்து நிறுத்தமாகவோ எஞ்சியிருக்கும்.அவர்கள் யாரும் தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டதும் கிடையாது. சிறந்த விளம்பரமாக இன்றளவும் நமக்கு ஞாபகம் செய்து வருவது அவர்கள் செய்திட்ட நல்ல செயல்களே ஆகும்.ஒவ்வொரு முறையும் நம்மோடு இருக்கும் நல்லவர்களை நாம் ஊக்குவிக்க தவறிவிடுகிறோம் என்பது கசப்பான உண்மை. குழந்தைகளாக இருக்கும்போதே அடுத்தவர்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்பதை அவர்களுக்குசொல்லிக்கொடுக்க வேண்டும்.பள்ளி, கல்லுாரிகளில் தன்னார்வ தொண்டர்களாக பணியாற்ற விரும்பினால் அவர்களை இணைந்து பணியாற்ற அங்கீகரிக்க வேண்டும்.'இமயச்சாரலில் ஒருவன் இருமினால்குமரி வாழ்பவன் மருந்துகொண்டு ஓடுவான்'என்பது பாரதிதாசனின் வரிகள்.எங்கெல்லாம் மனித இனம் துன்பப்படுகிறதோ அங்கெல்லாம் சென்று துயர்துடைத்து நம்பிக்கை அளிக்கும் நல்லவர்களாக வலம் வரும் தன்னார்வ தொண்டர்களை நாம் நினைத்துப் பார்த்து ஊக்குவிக்க வேண்டும். முடிந்தளவு நம்மால் செய்ய இயன்ற சேவைகளை செய்ய வேண்டும். இந்த உலகம் வளமாக வேண்டும் என்றால், நாம் நிச்சயமாக ஊருக்கும் உழைக்கும் உன்னதமான பணியினைச் செய்வதை கடமையாக கொள்ள வேண்டும்.--பேராசிரியர் நா.சங்கரராமன்எஸ்.எஸ்.எம்., கலைஅறிவியல் கல்லுாரிகுமாரபாளையம்நாமக்கல் மாவட்டம்99941 71074

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் செய்திகள் :

Advertisement