Advertisement

பணப்பெட்டி நிரம்புமா?

எத்தனையோ விஷயங்கள் மத்திய அரசால் பேசப்பட்டாலும், இப்போது, மொத்த வளர்ச்சி சதவீதம் சிறிது குறைந்தது என்பதும், கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், அரசின் கூடுதல் வரி வருவாய் மூலம் பணப்பெட்டி நிரம்பும், என்ற பேச்சு எழுந்திருக்கிறது.அதைவிட, டில்லியில் நடந்த விவசாயிகள் பேரணி, அதிக முக்கியத்துவம் பெற்ற தலைப்பாகும். பொதுவாக தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி, அடுத்த பட்ஜெட் தாக்கலுடன் முடிவடைந்து, லோக்சபா தேர்தலை சந்திக்கப் போகிறது.இன்றைய சூழ்நிலையில், வடகிழக்கு உட்பட பல மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி இருப்பதால், அக்கட்சி இதுவரை அதிக வேலைவாய்ப்பை உருவாக்கியதா... என்பதை காங்கிரஸ் உட்பட பல்வேறு சிறிய கட்சிகள் அதிகம் பேசுகின்றன.ஆனால், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் உட்பட பொருளாதாரம் அறிந்த சிலர் அதிகம் விவாதிக்கலாம். காரணம், தற்போது புள்ளியியல் துறை வெளியிட்ட புதிய தகவலால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் இரண்டு ஆண்டுகள் தவிர மற்றைய ஆண்டுகளில், அதன் மொத்த வளர்ச்சிக் குறியீடு, ஏற்கனவே குறிப்பிட்டது போல அல்ல என்ற தகவல் வெளியானதே, இந்தப் பிரச்னை பேசப்படுவதன் காரணமாகி விட்டது.'நிடி ஆயோக்' தலைவர் ராஜிவ் குமார், இதுகுறித்து விவாதிக்க தயார் என்கிறார். இந்த சர்ச்சையால், சாதாரண மனிதனுக்கு என்ன புரியப் போகிறது?புள்ளியியல் துறை என்பது, அரசுடன் தொடர்பில்லாத தனி அணுகுமுறை கொண்டது. மேலும், தற்போது திட்டக் கமிஷன் என்பதற்கு பதிலாக, 'நிடி ஆயோக்' நான்காண்டுகளாக செயல்படுகிறது. முந்தைய திட்டக் கமிஷன் அணுகுமுறை மேற்கொண்ட தரவுகள், ஓரு ஆண்டு காலத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு பயன்தராது என்பதால், அரசின் செயலாக்க முறைகள், பல விஷயங்களில் மாறியிருக்கின்றன.தற்போது, மூன்றாவது காலாண்டு வளர்ச்சி என்பது, 7.1 சதவீதம் என்று காட்டப்படுகின்றன. இதற்காக, மத்திய அரசு முற்றிலும் செயல்படவில்லை என்பது வாதமாகி விட்டது. அது மட்டுமல்ல, நிதிப்பற்றாக்குறை என்ற வரையறை மாறும் அளவிற்கு, செலவினம் அதிகம் என்பதும் மற்றொரு தகவல்.ஆகவே, காங்கிரஸ் தலைவர் ராகுல், இப்பொருளாதாரத்தை வளர்ச்சி பெற்றதாக்கி, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடியை அதிகரித்து, மக்களை வாழவைக்கும் திட்டங்கள் காங்கிரசிடம் உள்ளது என்கிறார். ஆனால், ம.பி., போன்ற மாநிலங்களில், அதிக அளவு விவசாய வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அவர்களுடைய விளைவிக்கும் உணவு தானியங்களை, அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும்.அரசு தற்போது, அதிகபட்ச விலையைத் தந்தபோதும், தரகர்கள் மற்றவர்களுக்கு குறைந்த விலையில் விற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இப்போது. நிலத்தடி நீர் பாதிப்பு, இயற்கைப் பேரிடர்கள், இலவச மின்சாரம் தந்தும், அதனால் விளைவிக்கும் செலவு குறையாத போக்கு, விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காத பரிதாபம் என்று, பல அம்சங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.முந்தைய பிரதமர் ராஜிவ் காலத்தில் இருந்து தொடரும், விவசாயிகளுக்கு நிவாரண உதவி அதிகரித்து கொண்டே போகிறது. ஆனால், விவசாயத்துறை சீர்திருத்தம் என்பது, வந்தாலொழிய பிரச்னை தீர வாய்ப்பு இல்லை என்ற கருத்து எழுந்திருக்கிறது.தமிழகத்திலும் டெல்டா விவசாயிகள், நெல் விளைவிக்கும் அளவை இத்தடவை குறைத்துள்ளனர். அதிலும், 'கஜா' புயல் அவர்களை மேலும் சிதைத்துவிட்டது. அப்படிப்பார்க்கும் போது, விவசாயத்தை வளமாக்க புதிய அணுகுமுறை, அந்தந்த சூழ்நிலைகளை மையமாக்கி உருவாக்க வேண்டும். அதில் சந்தைப்படுத்துதலும், முக்கியத்துவம் பெறுகிறது.இவற்றுடன், சில முக்கிய தொழில்கள் உற்பத்தியும் அதிகரிக்காததற்கு காரணம், உலகப் பொருளாதார பாதிப்புகளுடன் அவை இணைந்திருக்கிறது. இதற்கு மாற்று வழியாக, ஒவ்வொரு நாட்டுடன், தனித்தனியே பொருளாதார உறவுகளைப் பேணுவதுடன், பொதுவான அணுகுமுறையும் தேவையாகிறது.நல்ல வேளையாக, கச்சா எண்ணெய் விலை எகிறாதபடி, நம் தேவைக்கு ஏற்ப சவுதி தர முன்வந்திருப்பது நல்ல அம்சம். இதை, பிரதமரிடம் அவர் உறுதியளித்தது, நடைமுறையாக வேண்டும். தவிரவும், மத்திய கிழக்கில் உள்ள சிறிய நாடான குவெட்டார், அதிக அளவு எண்ணெய் வளம் கொண்டது. அந்த நாடு, சவுதியின் ஆளுமை கொண்ட, 'ஒபெக்' என்ற எண்ணெய் வள கூட்டமைப்பு நாடுகளுடைய தொடர்பில் இருந்து விலகி, தனியாக உலகத் தேவைக்கு ஏற்ப கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய முன்வந்தது, நமக்கு சாதகமான செய்தி.நேரடி வரி விதிப்பில் அதிக நிதி, வரிகட்டும் எண்ணிக்கை அதிகரிப்பு, அரசு திட்டங்களில் ஊழல் குறைப்பு இவை, மத்திய அரசு நிதி நெருக்கடியில் சிக்காதிருக்க வழிவகுக்கலாம். ஆனால், இவை எல்லாம் யுகங்களில் முடிவு காண்பதல்ல.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement