Advertisement

கவனத்தை ஈர்க்கும் பதவி நீட்டிப்பு

தமிழகத்தில் நடந்து வரும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளில், இரு விஷயங்கள் அனைவரது கருத்தையும் கவரலாம். ஒன்று, 'லோக் ஆயுக்தா' பணிகள் துவங்கியதாக, தமிழக அரசின் புதிய அரசாணை வெளியிட்டது, மற்றது சிலை திருட்டு வழக்குகளை கையாண்ட, பொன். மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக பதவி நீட்டிப்பு என்ற செய்தி.பொதுவாக ஊழல் என்பது, இந்தியாவில் புரையோடியது என்றால், தமிழகம் மட்டும் விதிவிலக்காக இருந்ததாக அர்த்தமல்ல. அரசு பணத்தை வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவழிக்கும் போது, அதில் கட்சி அரசியல் என்பது, ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் நடத்தும் பிரசாரத்திற்கு உதவும்.ஆனால், உள்ளாட்சி அமைப்புகள் வரை உள்ள, முக்கிய கட்சித் தலைவர்களில் பலர், தங்களது வளத்தை அதிகரித்து, பெரிய அளவில், கோடீஸ்வரர்கள் ஆனது, மக்கள் அனைவரும் அலசும் விஷயமாக உள்ளது.இது, திடீரென ஏற்பட்ட புயல் அல்ல; மத்திய தர மக்கள், வரி கட்டுபவர்கள், பல்வேறு விஷயங்களைப் பார்த்து, அலுப்பு தட்டி ஊழலை அங்கீகரிக்க விரும்பவில்லை. ஆனால், அரசு பதவியில் அல்லது வேறு பெரிய பொறுப்புகளில் உள்ள பலர், 'பணக்கார அந்தஸ்து' பெற்றதால், இதை மவுனமாக ஆதரித்தனர்.இப்போது, தெரிந்தோ தெரியாமலோ, வளர்ச்சி என்பது ஊழலின் அடிப்படையில் அல்ல; எதிர்க் கருத்துகள் பேசுவது ஜனநாயகத்தின் ஒரு அம்சம் என்ற கருத்துக்கு மக்கள் மாறி விட்டனர். அப்படி எனில், ஊழலை ஒழிக்க, அன்னாஹசாரே வரவேண்டும் என்பதை விட, ஊழலை ஒழிக்க மாநிலங்களில், 'லோக் ஆயுக்தா' தேவை என்ற கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க உதவும், இந்த அமைப்பை உருவாக்க, சட்டசபை கடந்த ஜூலையில் ஒப்புதல் தந்தது. ஊழல் தடுப்பு சட்டம், 1988ன் கீழ் அமல்படுத்தப்படும் இந்த அமைப்பு, அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் ஆகியோரது ஊழல்களை விசாரிக்கும் திறன் கொண்டது.இதற்கு தலைமை தாங்கும், தகுதியான ஓய்வு பெற்ற நீதிபதி, அதற்குரிய உறுப்பினர்களுக்கு, சில வரன்முறைகள் உள்ளன. இந்த அமைப்பில் உள்ள, 26 பணியிடங்களுக்கும், யாரும் குறைகூற முடியாத தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்ய, அரசு நடவடிக்கை எடுக்கலாம்.இது ஒருபுறம் இருக்க, ஏற்கனவே, சுப்ரீம் கோர்ட் அறிவிப்பின்படி உருவான இந்த அரசாணை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் போது, அது ரகசியமாக இருக்கும் என்ற விதி சற்று நெருடலானது.இனி, 'ஊழல் செய்த பிரமுகர்கள் பற்றிய முழுத் தகவல் வரும் என்ற ஆசை போய்விட்டது' என்ற கருத்து இப்போது எழுந்து விட்டது. முதலில் இதை சட்ட நிபுணர் சந்தோஷ் ஹெக்டே கூறியிருப்பது கவனத்திற்குரியது. ஆனால், இந்த அரசாணைமுற்றிலும் முடிந்த முடிவல்ல.ஏனெனில், இந்த ஆணையத்தில் புகார் தெரிவிக்கும் போது, பொத்தாம் பொதுவாக புகார் கூற முடியாது. சில ஆதாரங்கள் தேவை. ஆகவே நடைமுறைப்படுத்தப்படும் போது, அதிக பிரச்னைகள் எழும் விஷயங்களுக்கு ஏற்ப, சில மாற்றங்களை, அரசு கொண்டு வர நேரிடும்.ஆனால், தமிழகத்தில் இம்மாதிரி ஒரு அமைப்பு வருவதை வரவேற்றாக வேண்டும். பல ஆண்டுகளாக இருந்த பெரிய குறையை நீக்கும் அமைப்பு, முதலில் உருவாகி செயல்படத் துவங்கும் நாள், நமக்கு நன்னாள்.இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் நடந்த சிலை திருட்டு பெரிய அவமான சம்பவம். இன்று நேற்றல்ல, தொடர்ந்து, 40 ஆண்டுகளாக நடைபெறும் இக்கலாசார அழிவை, பக்தி இலக்கியம் பேணிய, தமிழர்கள் அறியவில்லை.ஆனால், சிலை கடத்தல் ஒரு தொழிலாக நடந்திருப்பதை, முறையாக கண்டறிந்த போலீஸ் உயர் அதிகாரி பொன். மாணிக்கவேல் மற்றும் அவ்வழக்குகளை, விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள், நம் பாரம்பரியத்தை அழித்த கயமையை, உலகிற்கு காட்டினர். அதில், பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்றதாக வந்த தகவலை, ஐகோர்ட் தலையிட்டு, அவர் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு விஷயத்தை கையாளும் சிறப்பு அதிகாரியாக நீடிப்பார் என அறிவித்தது, வரவேற்கத்தக்கது.காலத்தால் பழமைமிக்க கருவூலமான கோவில்களை, ஹிந்து அறநிலையத் துறை பாதுகாக்க தவறியது. இந்த அமைப்பு தோன்றிய சில ஆண்டுகளில், கோவில் நிலங்களை கையகப்படுத்தி, பின் விற்கப்பட்ட அவலங்கள் நடந்தன. ஆகவே, அந்த அமைப்பும், அரசியல் பார்வையில் மட்டுமே இயங்கி வந்ததா... என்பது இனி அலசப்படும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement