Advertisement

நவீன இந்தியா எந்த விதமான கட்டிடக்கலையை உருவாக்கவேண்டும்?

Share

மேற்கத்திய பாணியின் மறுபதிப்பாகவே இன்றைக்கு இந்தியக் கட்டிடக்கலை இருந்துவருவதைப் பற்றியும் மற்றும் நவீன இந்தியாவின் கட்டிடங்கள் உண்மையில் எப்படித் தோற்றமளிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பிய மும்பையின் ஜேஜே ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் மாணவருக்கு சத்குரு பதிலளிக்கிறார்.

கேள்வி: இந்தியர்களாக நாம், இந்தியாவின் நவீன கட்டிடக்கலை என்ன என்பதை இன்னமும் புரிந்துகொள்ளவில்லை. மேற்கத்திய பாணியை அப்படியே மறுபதிப்பு செய்கிறோம். இந்தியாவின் நவீன கட்டிடக்கலை எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?

சத்குரு: கட்டிடகலையில் மட்டுமா நாம் மேற்கத்திய நாடுகளை பின்பற்றுகிறோம்? கிட்டத்தட்ட மேற்கிலிருந்து வரும் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறோம்! இப்போது நம் இந்தியாவிலும் நிறைய பெண்களின் கூந்தல் பொன்னிறத்திற்கு மாறி இருப்பதை பார்க்கிறோம். உங்கள் தலைமுடி எந்த நிறத்தில் இருந்தாலும் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்கள் எத்தனை வண்ணங்களை வேண்டுமானாலும் பூசிக் கொள்ளுங்கள். ஆனால் மற்றவர்களை போல மாறும் முயற்சியாக அது இருக்கக்கூடாதுதானே. எழுபது ஆண்டுகளுக்கு முன்பே நம் தேசத்தில் இருந்து வெளியேறி விட்டாலும், அவர்கள் இன்னும் நம் மனங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். உங்கள் தலைமுடியின் நிறம் பற்றி நாம் இப்போது பேசவில்லை. உங்கள் இயல்பான நிறத்தைவிட வேறு ஏதோ ஒரு நிறம் மேலானது என்பதற்காக நீங்கள் அதைச் செய்யக்கூடாது, அது நிறபேதம்!

இந்த நிர்ப்பந்தமான நிலைதான் கட்டிடக்கலைக்கும் நிச்சயமாக ஏற்பட்டுள்ளது. பண்டைக்கால இந்தியாவை நீங்கள் திரும்பிப்பார்த்தால், என்ன ஒரு கலை நயம்! வடிவியல்கணிதம் இதன் ஒரு அம்சமாக இருக்கிறது. பொருள் உலகத்தில், வடிவியலின் கச்சிதம் மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது. கிரகங்கள், சூரியனைச் சுற்றிக் கொண்டிருப்பதன் காரணம், அவைகள் ஒரு இரும்புக் கம்பியினால் ஒன்றாக இணைந்திருப்பதனால் அல்ல. வடிவியலின் கச்சிதம் அதை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. இந்த சூரியக் குடும்பத்தில் வடிவியல் கணிதம் பிசகிவிட்டால், அதுதான் அதற்கான முடிவு! அவை அனைத்தும் காணாமல் பறந்துபோகும்.
உடலளவிலான யோக அறிவியல் முழுவதும், உங்களது தனிப்பட்ட வடிவியலை, பிரபஞ்ச வடிவியலுக்கு ஒரே நேர்கோட்டில் இணைப்பதற்கான முயற்சியாகவே இருக்கிறது. அதனால், ஏதோ ஒரு புள்ளியில் உங்களுக்கும், பிரபஞ்சத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போகிறது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வடிவியல் முழுமை அடைந்துவிடும் காரணத்தினால், அனைத்தும் நீங்களாகவே இருப்பதை உங்களால் உணரமுடிகிறது. இது உங்களது உடலளவிலான கட்டமைப்பில் மட்டும் நிகழ்வதல்ல. உங்களுடைய இரசாயனம் மற்றும் சக்தியின் கட்டமைப்பிலும்கூட பேரண்டத்தின் வடிவியலுடன் நீங்கள் நேர்கோட்டில் இடம்பெறுவதால், நீங்களும் பேரண்ட நிகழ்வும் ஒன்றாக உணர்கிறீர்கள், ஏனென்றால் அவைகள் மிகச்சரியாக நேர்கோட்டில் இணைகின்றன.

கட்டிடக்கலையானது, நாம் உருவாக்கும் வாழிடங்களையும், பயன்படுத்தக்கூடிய கட்டமைப்புகளையும் குறித்தது. ஏதோ ஒரு வழியில், அவைகள் மற்ற படைப்புடன் ஒத்திசைவு காணவேண்டும். கட்டமைப்புக்கான பொருட்களில் நமக்கு ஒருவித சுதந்திரம் இருப்பதால், இந்த ஒத்திசைவை நாம் முற்றிலுமாகத் தொலைத்துவிட்டோம் என்று எண்ணுகிறேன். இரும்பும், கான்க்ரீட் கட்டமைப்பும் வந்தவுடன் பொருட்களின் வலிமை காரணமாக, நமது விருப்பப்படி எந்தவிதமாகவும் நாம் கட்ட முடியும் என்று நினைத்துவிட்டோம்.

பயன்பாடு கருதி வலிமையை உபயோகம் செய்வது சில நேரங்களில் சரியானது. ஆனால் எல்லாவற்றையும் அதே விதத்தில் நீங்கள் செய்தால், உங்கள் வாழ்க்கை அவலட்சணமாகிவிடும். இது கட்டிடத்தைப்பற்றி மட்டுமல்ல, வலிமையைப் பிரயோகித்து நீங்கள் செயல்படும் காரணத்தால் உங்கள் வாழ்க்கைகூட அவலட்சணமாகிவிடும். குறைந்தபட்ச வலிமையுடனும், அதிகபட்ச தாக்கத்துடனும் நம்மால் செயல்படமுடியும்போது வாழ்க்கை அழகாக இருக்கிறது. அதிகபட்ச வலிமையுடன் குறைந்தபட்ச தாக்கத்தினை நீங்கள் வெளிப்படுத்தினால், அது கொடூரமான முறையில் வாழ்வதாகும்.

நமது கட்டிடக்கலை இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது ஏனென்றால், நாம் முட்டாள்தனமான வடிவங்களைச் செய்தாலும் அவை நீடித்து நிற்குமளவுக்கான பொருட்களை நாம் கண்டுபிடித்துள்ளோம். கட்டுமானப் பொருட்களுடைய வலிமையின் காரணத்தினாலேயே, வடிவியலின்படி நிற்கத் தகுதியற்ற ஒன்று உயரமாக எழுந்து நிற்கிறது.

புதிது புதிதாக கட்டுமான பொருட்களை கண்டுபிடிக்க முயற்சிசெய்யும் ஆர்வத்திலிருந்து விடுபட்டு, விவேகமான வடிவியல் கட்டுமானங்களை உலகில் உருவாக்குவதை நோக்கி நாம் நகர்ந்தால், மக்கள் சௌகரியமாக உணர்வதை நீங்கள் பார்க்கலாம். இப்படிப்பட்ட கட்டிடங்களில் வாழும்போது, மக்களின் உடல் மற்றும் மனஆரோக்கியம் மேம்படுவதுடன் மேலும் பல நன்மைகளும் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, உங்களைச்சுற்றி இருக்கும் அனைத்திற்கும் நீங்கள் குறைந்தபட்ச தொந்தரவையே ஏற்படுத்துவீர்கள்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement