Advertisement

ஈத்துவக்கும் இன்பம்

சோழ மண்டலம் சோறுடைத்து என்பர். ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட புயல் வெள்ளத்தால் உணவின்றித் தவிக்கின்றனடெல்டா மாவட்டங்கள். 'கைம்மாறு வேண்டா கடப்பாடு' என்று மழையைக் குறிப்பிட்டது வள்ளுவம். ஆனால் மழையே இப்போது கைம்மாறு வேண்டி நிற்கிறது அளவில்லாமல் பொழிந்து விட்ட காரணத்தால்.உலகிலேயே கொடிய நோய் எது தெரியுமா? பசி தான். அதனால் தான் மணிமேகலை காப்பியம் பசியைப் பிணி என்று கூறுகிறது.வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலாரோ "பசியினால் இளைத்தே வீடுதோற் இரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்...என்கிறார். இன்று பயிர் விளைவித்த விவசாயிகளின் பயிரும், வயிறும் வாடி இருக்கின்றது. உணவு விளைவித்தவனுக்கு உண்ண உணவில்லை. கடவுள் எல்லா அரிசியிலும் பெயர் ழுதி இருக்கிறார் என்று கேட்டு இருக்கிறோம்.இதோ நம் விவசாயிகளின் பெயர் நம் வீட்டு அரிசியில் கூட இருக்கலாம். ஒரு பிடி அரிசியாகவோ, ஒரு படி அரிசியாகவோ நம் பங்களிப்பை கொடுக்கலாம்.ஊருக்கெல்லாம் படி அளந்தவன் இன்று கலங்கிப் போய் இருக்கிறான்.ஈர பூமிக்கு உதவும் ஈர மனங்களே இப்போது தேவை. வெள்ளம் பாதித்தவர்களுக்கு நாம் செய்யும் சிறு உதவியும் வெல்லம் தான்.துன்பத்தில் இரவல் கேட்பது இழிவானது அல்ல. கேட்பவனுக்கு இல்லையென்று கூறுவதே இழிவானதாகும்.இதைத் தான்புற நானுாறு'ஈயென இரத்தல் இழிந்தன்று.ஈயேனென்றல் அதனினும் இழிந்தன்று' எனக் குறிப்பிடுகிறது.வாழ்வாதாரமின்றித் தவிக்கும் நம் மக்களுக்கு வாழ வழி செய்து தருவது நம் கடமை அல்லவா?

பொதுநல மனிதன்கர்ணன் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவனின் கொடைத் தன்மை தான். இறக்கும் தருவாயிலும் இரந்தவனுக்கு உதவியன் என்பதாலேயே அவன் இறந்த பின்பும் கூட வாழ்கிறான்.இறந்த பின்பும் இருந்து பார்ப்பது எப்படி என்றால் நம் நல்ல செயல்கள், புண்ணியங்களாலே மட்டுமே. தாத்தா வைத்து விட்டுப் போன தென்னையோ இளநீர் தருகிறது. மாமா வைத்து விட்டுச் சென்ற மாதுளையோ காய்க்கிறது.வாழையோ தன்னைத் தந்து தியாகியாகிறது.வாழும் போதே வாழ்ந்து விட வேண்டியது தான் வாழ்க்கை. இனியொரு பிறப்பு சாத்தியமில்லை.தனக்குள்ளேயே காற்றை அடக்கி வைத்திருக்கும் கால்பந்து உதை படுவதும், காற்றை வெளியிடும் புல்லாங்குழல் இசையாக முத்தமிடப் படுவதிலுமே இருக்கிறது வாழ்வியல்.சுய நலம் உள்ள மனிதனும் புறக்கணிக்கப்படுகிறான்.பொதுநலம் உள்ள மனிதனே போற்றப்படுகிறான்.இதையே வள்ளுவர் ஈத்துவப்பதை இன்பம் என்று குறிப்பிடுகிறார். ஈகையில் தான் இருக்கிறது இன்பம். விருந்தோம்பல் பண்பாடு என்பது கூட ஈகையினால் வந்த பண்பு அல்லவா? இறப்பு நிகழ்ந்த வீட்டில் மொய் எழுதும் பழக்கம் உண்டு.அதை வெறும் சம்பிரதாயங்களாக கடந்து விடாதீர்கள். உன் துக்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன் என்பதான ஆறுதல் அது. இக்கட்டான நேரங்களில் மனிதர்களால் தரக் கூடிய ஆறுதல் அது.

உதவிக்கரங்கள்ஒவ்வொரு மனிதனின் இறப்பின் போது அவனைச் சுமந்து செல்ல நான்கு பேரின் உதவிக் கரங்கள் தேவை தானே. இருக்கும் போது நம் கைகள் நீள வேண்டாமா? வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியகூடாது என்கிறது விவிலியம்.ஆனால் இந்த கால கட்டத்தில் அதனை தெரிவிக்கலாம். ஏனெனில் மற்றவர்களுக்கும் அந்த உதவும் எண்ணம் சிறு புள்ளியாகத் தோன்றட்டுமே. ஒட்டு மொத்த வாழ்வையும் வாழ்வதாக நினைத்துக் கொண்டு சேமிக்கத் தொடங்குகிறோம்.அடுத்த நொடி நிரந்தரமில்லை என்ற உண்மையை அறிந்தும், அறியாமலே கடக்கிறோம். நடக்கிறோம்.நம் பரணில் என்றாவது தேவைப்படும் என்று நாம் வைத்திருக்கும் பொருட்கள் இன்று யாருக்காவது உதவக் கூடுமே.'தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டேன்போன்சின்னதொரு கடுகு போல் உள்ளங் கொண்டோன்' எனப் பாரதிதாசன் சாடுகிறார்.இட்டிலியை எப்படி சாப்பிட்டால் சுவையானதாக இருக்கும் என்ற ஆசிரியரின் கேள்விக்கு, சட்னியுடன் சாப்பிட்டால் என ஒருவனும், சாம்பாருடனும் என ஒருவனும் கூற ஒரு மாணவன் மட்டும் எழுந்து இட்லியை பசியுடன் இருக்கும் ஒருவனுடன் பகிர்ந்து சாப்பிடும் போது அது ருசியாக இருக்கும் எனப் பதிலளித்த மாணவனைப் பாராட்டினாராம் ஆசிரியர்.தனக்கென யோசிக்கும் போது சக்தி குறைகிறது.பிறரைப் பற்றி யோசிக்கும் போதே கூடுதல் சக்தி பெறுகிறோம். நம் வீடுகளில் அம்மாவால் மட்டுமே எப்போதும் இயங்க முடிவதற்கான காரணம் அவள் எப்போதும் கணவர் மற்றும் பிள்ளைகளின் நலனுக்காக இயங்குவதால் தான்.நம் வாழ்வின் பயன்நல்லாவின் பால் முழுவதும் கன்றுக்கில்லைநறும்பூவின் மணமுழுதும் சோலைக்கில்லைநெல்லாகும் கதிர் முழுதும் நிலத்துக்கில்லைநிறைகின்ற நீர் முழுதும் குளத்துக்கில்லைபல்லாரும் கனி முழுதும் மரத்துக்கில்லைஎல்லாமே பிறர்க்குழைக்கக் காணுகின்றேன்..இது மறைந்த தமிழறிஞர் வ.சு.ப.மாணிக்கத்தின் கவிதை.நம் வாழ்வு கூட பிறருக்கு உழைக்க வேண்டுமல்லவா?இயன்றதைக் கொடுக்கலாம் இல்லாதோர்க்கு.முகம் தெரியாத ஒருவனுக்கு செய்யும் உதவி என்பதாலேயே தானம் என்கிறோம்.அன்னமிட்ட கைகளுக்கு அன்ன தானம் அளிப்போமே. உறவினர்களுக்கு செய்யும் உதவிகள் அவர்களுக்கு எப்போதும் திருப்தி தருவதில்லை. சில சமயம்சற்று பொறாமை கூட காரணமாக இருக்கலாம். உதவுபவர்களுக்கோ எவ்வளவு செஞ்சாலும் நம்மைப் புரிஞ்சுக்க மாட்றாங்களே என்ற ஆதங்கமுமே மேலோங்கும். அப்படியானால் யாருக்கு உதவலாம்? ஆதரவற்றோருக்கு உதவுங்கள். அவர்கள் வாழ்வில் நம்பிக்கை விளக்கினை ஏற்றுங்கள்.பிள்ளைகளால் கைவிடப்பட்டு கண்களில் ஏக்கத்தைச் சுமந்து கொண்டு இருக்கும் முதிய வயது பெற்றோருக்கு பிள்ளைகளாக உதவி அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்துங்கள்.பொருளாதார சூழல் காரணமாக கல்லுாரிப் படிப்பை படிக்க இயலாமல் கனவுகளைச் சுமந்து கொண்டு இருக்கும் இளைஞர்களில் சிலருக்காவது கல்லுாரிக் கட்டணத்தை வழங்கி அவர்களின் எதிர்காலத்தை ஒளி பெறச் செய்யுங்கள். நீங்கள் படித்த அரசுப் பள்ளிகளுக்கு சென்று உதவுங்கள். உயிரோடு இருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் அல்ல.உயிர்ப்புடன் இருப்பவர்களே மனிதர்கள். மனிதம் தழைக்க மனித நேயம் செழிக்கச் செய்வோம்.நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!நிதி குறைந்தவர் காசு தாரீர்!மனமுடையோர் வாய்ச்சொல் அருளீர்!தன்னார்வலர் உழைப்பினை நல்கீர்!இப்படி கேட்கும் பாரதியின் வேண்டுகோளை மனதில் நிறுத்தி அவரவரால் முடிந்த அறங்களை செய்வோம். அறம் செய விரும்பு என்பதை விட அறம் செய்யப் பழகுவோம்.ம.ஜெயமேரி, ஆசிரியைஊ.ஒ.தொ. பள்ளிக.மடத்துப்பட்டிbharathisanthiya10 @gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement