dinamalar telegram
Advertisement

தமிழக அரசின் ராஜ தந்திரமா இது?

Share

சமூக ஆர்வலர்ன்று மாணவியரை, கொடூரமாக கொலை செய்தவர்களை, 'கஜா' புயல் பாதிப்பால், தமிழகம் தடுமாறிக் கொண்டிருந்த நேரம், விடுதலை செய்திருப்பதன் மூலம், மிகவும் மோசமான முன்னுதாரணத்தை, அணுகுமுறையை, தமிழக அரசு பின்பற்றி உள்ளதாக, பரவலாக பேசப்படுகிறது.

'எரியும் வீட்டில் பறித்தது வரை லாபம்' என்ற சொலவடைக்கு ஏற்ப, பேரழிவிற்காக, தமிழக அரசு காத்திருந்து, இந்த செயலை, ஓசையில்லாமல் முடித்திருக்கிறது.சமீபத்தில் வீசிய, கஜா புயலால், டெல்டா மாவட்டங்கள் சிதைந்து போயிருக்கின்றன; மக்களின் இயல்பு வாழ்க்கை, முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. உணவு, குடிநீர், தங்குமிடம், மின்சாரம், போக்குவரத்து என, எதுவும் இன்றி, நரக துயரத்தில், மக்கள் சிக்கி தவிக்கின்றனர். எங்கு பார்த்தாலும், மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து, சாலைகள் துண்டிக்கப்பட்டு கிடக்கின்றன; ஏழு மாவட்டங்கள் இருளில் மிதக்கின்றன.

பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க, தனியார் நிறுவனங்கள், திரையுலகினர், அரசியல் கட்சியினர், தொண்டு நிறுவனங்கள் என, பல தரப்பில் இருந்தும், நிவாரண உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன.பாதிப்புகளை சரி செய்ய, அரசு இயந்திரம் முடுக்கம்; நிவாரணம் கிடைக்காத மக்களின் போராட்டம் என, பரபரப்பான சூழ்நிலையில், நாட்டையே உலுக்கிய, தர்மபுரி மாணவியர் கொலை வழக்கில், சிறையில் இருந்த மூவரை, தமிழக அரசு ரகசியமாக விடுதலை செய்திருக்கிறது. இது, அநாகரிகம்.

கடந்த, 1991- - 96ல், ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள, 'பிளசன்ட் ஸ்டே' ஓட்டலுக்கு விதி முறைகளை மீறி, ஏழு தளங்கள் கட்டிக்கொள்ள, அரசு அனுமதி வழங்கப்பட்டது.ஆட்சி மாறி, தி.மு.க., பொறுப்பேற்றதும், இதை எதிர்த்து, வழக்குத் தொடரப்பட்டது. அதில், ஜெயலலிதா, அப்போதைய, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த, செல்வகணபதி, நகராட்சி நிர்வாகத் துறை செயலர், எச்.எம்.பாண்டே, உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில், சிறப்பு நீதிமன்றம், 2000 பிப்., 2ல் தீர்ப்பு வழங்கியது. இதில், ஜெயலலிதாவுக்கு, ஓராண்டு சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப் பட்டது. தங்கள் விசுவாசத்தை எப்போது காட்டுவது என காத்திருந்த, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சிலருக்கு, இந்த தீர்ப்பு வழிகாட்டியது. தமிழகத்தில், ஆங்காங்கே அவர்கள், வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில், 50க்கும் மேற்பட்ட பேருந்துகள், அடித்து நொறுக்கப்பட்டன; ஐந்து பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று தான், தர்மபுரியில் எரிக்கப்பட்ட பேருந்து! தர்மபுரி அருகே, இலக்கியம்பட்டியில், கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, மாணவ -- மாணவியர் சென்ற அந்த பேருந்து மீது, அ.தி.மு.க.,வினர் பெட்ரோல் குண்டு வீசினர். கொழுந்து விட்டு எரிந்த பேருந்திற்குள் இருந்து, அலறியடித்தபடி, மாணவ - மாணவியரும், ஆசிரியைகளும் வெளியேறினர்.

ஆனால், வெளியேற முடியாமல், பேருந்திற்குள் சிக்கிய, 19 வயது மாணவியரான கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகியோர், உடல் கருகி இறந்தனர்; மேலும், 18 மாணவியர், நான்கு ஆசிரியைகள் படுகாயமடைந்தனர்.

தமிழகம் மட்டுமில்லாமல், நாட்டையே உலுக்கிய இந்த கொடூரம், மாநில சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த, 2007ல், இந்த வழக்கில், சேலம் செஷன்ஸ் நீதிமன்றம், அ.தி.மு.க., தர்மபுரி ஒன்றிய செயலர், நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர், ரவீந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர், முனியப்பன் ஆகியோருக்கு, துாக்கு தண்டனை விதித்தது.

கடந்த, 2016ல், மேல் முறையீட்டு மனு விசாரணையில், உச்ச நீதிமன்றம், மூவருக்கும், ஆயுள் தண்டனையாக குறைத்தது. இவர்கள், வேலுார் மத்திய ஆண்கள் சிறையில், 17 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வந்தனர். மாணவியரை கொலை செய்ததை விட, தங்கள் கட்சியினர் சிறையில் இருப்பதை, அ.தி.மு.க.,வால் தாங்க முடியவில்லை போலும். அவர்களை விடுதலை செய்ய, அ.தி.மு.க., அரசு துடித்திருக்கிறது.

அவர்களை விடுதலை செய்ய, தமிழக அரசு, மூன்று முறை, கவர்னருக்கு பரிந்துரை கடிதம் கொடுத்துள்ளது. தேசத்திற்காக போராடியோருக்கு கூட, இத்தகைய விடா முயற்சியை, அரசு எடுத்திருக்குமா என்பது சந்தேகம் தான்!

இது குறித்து, கவர்னர் மாளிகை, சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 'தர்மபுரியில் பேருந்து எரிப்பு குற்றவாளிகளை, விடுதலை செய்ய, கவர்னர் சம்மதம் தெரிவிக்கவில்லை. 'பரிந்துரை கடிதத்தை, இரண்டு முறை திருப்பி அனுப்பி, விளக்கமும் கோரினார். கொலை செய்யும் நோக்கத்தில், அவர்கள் வன்முறையில் ஈடுபட வில்லை என, தலைமை செயலரும், தலைமை வழக்கறிஞரும் நேரில் விளக்கமளித்துள்ளனர்' என, கூறப்பட்டுள்ளது.

அவர்களை விடுதலை செய்ய, தலைமை செயலரும், தலைமை வழக்கறிஞரும், கவர்னரை நேரில் சந்தித்து, விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் என்ன?முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை யொட்டி, 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறைகளில் உள்ள, நன்னடத்தை கைதிகளை, தமிழக அரசு விடுதலை செய்து வருகிறது. அதனால், தர்மபுரி பேருந்து எரிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்வதில், உள் நோக்கம் ஏதுமில்லை என்றால், மூன்று பேரும், ரகசியமாக விடுதலை செய்யப்பட்டது ஏன்?

இதற்கு முன், கைதிகள் விடுதலை செய்யப்பட்ட போது, ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதே... இவர்கள் விஷயத்தில் மட்டும் ஏன் மவுனம்?'மூன்று உயிர்களைக் கொன்றவர்களுக்கு, தமிழக அரசு பக்க பலமாக இருப்பதால், அவர்கள் நிரபராதிகள் ஆகிவிட்டனர்' என, அ.தி.மு.க.,வினரால் கொடூரமாக எரித்து கொல்லப்பட்ட, காயத்ரி யின் தந்தை கொதித்துள்ளாரே... அவரின் கருத்து, எவ்விதத்தில் தவறு?

தமிழக அரசு, 'வேளாண் கல்லுாரி மாணவியர், மூன்று பேரையும் கொலை செய்வது, அவர்களின் நோக்கமில்லை' என, உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது. 'திட்டமிட்டு, கொலை குற்றத்தில் ஈடுபடவில்லை. பொது சொத்துகளுக்கு சேதம் விளைப்பதே, அவர்களின் நோக்கமாக இருந்தது' எனவும், தெரிவித்துள்ளது. 'பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்க வேண்டும்' என்பது, அவர்கள் திட்டமிட்ட செயல் தானே... கொலை செய்யும் நோக்கம் இல்லையென்றால், பேருந்தில் இருக்கும் பயணியரை, அவர்கள் இறங்க சொல்லி இருக்கலாமே... பேருந்தில் மாணவியர் இருப்பது கூட தெரியாமலா, தீ வைத்தனர்?

தர்மபுரி மாணவியர் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என, முடிவு செய்த பின், மக்களை திசை திருப்ப, சரியான நாளுக்காக, தமிழக அரசு காத்திருந்திருக்கிறது என்பது, சந்தேகம் இல்லாமல் தெளிவாகிறது என்பது தான் வெகுஜன மக்களின் கருத்து. கஜா புயலில், ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கதறிக் கொண்டிருக்க, அதனால், மாநில மக்களே ரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த போது, அ.தி.மு.க., அரசு, கொலை குற்றவாளிகளை காப்பாற்ற, இது தான் தக்க சமயம் என, திட்ட மிட்டே, அவர்களை விடுதலை செய்துள்ளது.

இது தான், ஆளும் அரசின் ராஜ தந்திரம் என்றால், தேர்தலுக்காக மக்கள் காத்திருப்பர் என்பதை, அரசு நினைவில் கொள்ளவும் வேண்டும்!

இ - மெயில்: sureshmavin@gmail.com

மொபைல் போன்: 9524278792

- சி.கலாதம்பி --

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • raja - Kanchipuram,இந்தியா

    இந்த நாட்டில் நீதிமன்றங்கள் தேவையா எனும் கேள்வி தான் எழுகிறது

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement