Advertisement

ஜாக்கி என்றொரு நான்கு கால் மகள்...

Share


சோகமேகம் சூழ்ந்திருக்கும் வீடு அது


வீட்டின் நடுக்கூடத்தில் இறந்தவர்களின் உடலை கெடாமல் பாதுகாக்கும் குளிர்சாதன பெட்டி மெல்லிய அதிர்வுடன் ஒடிக்கொண்டு இருக்கிறது.அந்த

குளிர்சாதன பெட்டிக்குள் இறந்து போன நாய் ஒன்று கிடத்தப்பட்டு இருக்கிறது

பெட்டியின் விளிம்பை பிடித்தபடி ஒரு பெண்மணி கதறி அழுது கொண்டிருக்கிறார்.அக்கம் பக்கம் இருப்பவர்கள் சொல்லும் ஆறுதல் எதையும் காதில் ஏற்றிக்கொள்ளாததன் காரணமாக கண்கள் கண்ணீரை அருவியாக பொழிகிறது

அவரது அழுகையைப் பார்த்து அக்கம் பக்கம் இருப்பவர்களின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.

நாய் இறந்ததற்கு இவ்வளவு அழுகையா? என்று கேட்பவர்களுக்கு, நாமக்குத்தான் அது நாய் அவர்களுக்கு அது மகள்.

பெயர் ஜாக்கி

புதுச்சேரி கோரிமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் தேவராஜன்-சுஜாதா.தேவராஜன் டெம்போ வாகனம் ஒட்டுபவர்.இரண்டு மகன்கள்.

கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக இவர்கள் வீட்டின் பக்கத்தி்ல் உள்ள குப்பை மேட்டில் ஒரு பெண் நாய்குட்டி பசியால் கத்திக்கொண்டு இருந்தது.பாவமாக இருக்கவே சுஜாதா அந்த நாய்க்கு பிஸ்கட்டும் பாலும் கொடுத்துவிட்டு திரும்பினார் இவரது பின்னாடியே நாய் குட்டியும் வந்துவிட்டது.சுஜாதாவின் காலைச் சுற்றி சுற்றி வந்து வாலை ஆட்டி பசியாற்றியதற்கும், பாசம் காட்டியதற்கும் நன்றி தெரிவித்தது.

நாயைப் பரிய மனமில்லாமல் சுஜாதா ஆசையுடன் துாக்கிவைத்து கொஞ்சியவர் அன்று முதல் அதனை பெறாத மகளாக பாசம் காட்டி வளர்க்க ஆரம்பித்தார்.ஜாக்கி என பெயரிடப்பட்ட அந்த நாய்க்கு சுஜாதாவின் கணவர் தேவராஜனும் அவர்களது பிள்ளைகளும் தத்தம் பங்கிற்கு பாசம் காட்ட ஜாக்கி செல்லப்பிள்ளையாக அந்த வீட்டில் வலம் வந்தது.

கடந்த 12 வருடங்களில் ஜாக்கி யாரையுமே கடித்தது இல்லை அவ்வளவு ஏன்? ஆக்ரோஷமாக குறைத்தது கூட இல்லை. இதன் காரணமாக அது குடியிருக்கும் தெருவில் ‛ ஜாக்கி ரொம்ப நல்ல பிள்ளைப்பா' என்று வளர்ப்பவர்களுக்கு பெயர் எடு்த்தும் கொடுத்துவிட்டது.

ஜாக்கி படு சமர்த்து சுஜாதா எங்கே போனாலும் காவலுக்கு கூடவே போய் வரும், தேவராஜன் எத்தனை மணிக்கு வீட்டிற்கு வந்தாலும் வாசலில் நின்று வரவேற்று கொஞ்சிவிட்டே வீட்டிற்குள் அனுமதிக்கும், பிள்ளைகள் இருவரும் அப்பா அம்மாவிடம் சத்தமாக பேசினால், அம்மா அப்பாவிடம் சத்தம் கூடாது என்பது போல உடனே குறைத்து அண்ணன்களை சமாதானப்படுத்தும், கொஞ்ச நேரத்திலும் அனைவரையும் சந்தோஷப்படுத்தும்.

இப்படிப்பட்ட ஜாக்கிக்கு கடந்த ஒரு மாதமாக உடம்புக்கு முடியவில்லை,ஒரு நாளும் முடியாமல் படுத்தது இல்லையே என்று துடித்துப் போன தேவராஜன் -சுஜாதா தம்பதியினர் ஜாக்கியை சம்பந்தப்பட்ட டாக்டர்களிடம் கொண்டு போய் காண்பித்தனர்.

நாய்க்கு பொதுவாக அவ்வளவுதான் ஆயுசு அதற்கு முதுமை நோய் என்று மருத்துவர்கள் சொன்னாலும் மனசு ஆறாமல் வேறு வேறு டாக்டர்களிடம் காண்பித்து அதனை காப்பாற்ற முனைந்தனர்.

தேவராஜன் ஒரு படி மேலே போய் திருப்பதி பெருமாளிடம் வேண்டுகோள் வைக்கச் சேன்றார்.அவர் திருப்பதி சென்ற நேரம் ஜாக்கி இறந்துவிட்டது.

தகவல் தேவராஜனுக்கு சென்றது

துடிதுடித்துப் போன தேவராஜன் ஜாக்கியை பத்திரமாக ‛ப்ரீஜரில்' (குளிர்சாதன பெட்டி) வைத்திருங்கள் நான் வந்து கொண்டே இருக்கிறேன் என்றார்

அவர் சொன்னபடி ‛ப்ரீஜரில்' ஜாக்கி வைக்கப்பட்டது சுற்றிலும் தெருக்காரர்கள் நிற்க சுஜாதா மட்டும் அழுது கொண்டே இருந்தார்.

கிடைத்த வண்டி வாகனத்தை பிடித்து தேவராஜன் வந்து சேர்ந்தார் இறந்த ஜாக்கியைப் பார்த்து ஓ என்று அலறி அழுதார் அவரை சமாதானப்படுத்திய பிறகு வீ்ட்டில் இறந்தவர்களுக்கு செய்யப்படும் சடங்குகள் செய்யப்பட்டது.

ஜாக்கி குளிப்பாட்டப்பட்டு நெற்றியில் குங்குமம் வைக்கப்பட்டு மஞ்சள் துணியால் சுற்றப்பட்டு மாலைகள் அணிவி்க்கப்பட்டது. ஒவ்வொரு சடங்கின் போதும் சுஜாதாவையும் தேவராஜனையும் அழாமல் கட்டுப்படுத்த முடியாமல் தெருவில் உள்ளோர் திணறினர்.

கடைசியில் இந்த தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான மனையில் குழி தோண்டி ஜாக்கியை புதைத்துவிட்டு வீடு திரும்பினர்.

ஜாக்கி என்கின்ற மகளை புதைத்துவிட்டோம் ஆனால் அவளது நினைவுகளை புதைக்க முடியவில்லையே என்று அழும் தம்பதிக்கு காலம்தான் ஆறுதல் சொல்லமுடியும்.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (8)

 • munusamyganesan - CHENNAI,இந்தியா

  ஹாய், நன்றி உள்ள ஜீவன் ஜாக்கி உன் ஆத்ம சாந்தி அடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். அந்த குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

 • munusamyganesan - CHENNAI,இந்தியா

  ஹாய், ஜாக்கி மிகவும் நன்றி மிக்க ஜீவன் என்பதை இந்த உலகிற்க்கு உணர்த்தி விட்டது. இந்த காலத்தில் பிள்ளைகள் பெற்ற தாய், தந்தையரை வீதியில் அனாதையாக சுற்றி வருகின்றனர், சமூக விரோதிகள் அவர்களை வைத்து பிட்சை எடுக்கும் படி அடித்து துன்புறுத்துகின்றனர். மிகவும் வேதனையாக இருக்கிறது. பிள்ளைகள் பெற்றோரை வயதான காலத்தில் காப்பாற்ற வேண்டியது. ஒவொரு பிள்ளை, பெண்ணுக்கும் கடமையாகும். அரசு குடும்ப நன்மை சட்டம் கண்டிப்பாக கொண்டுவரவேண்டும். என்னோடைய வேண்டுகோள்.

 • sivakumar - Qin Huang Dao,சீனா

  ஜாக்கி , மீண்டும் ஒரு குட்டி ஜாக்கியாக தேவராஜன் வீட்டிற்கு ஆறுதல் அளிக்க வா

 • karutthu - nainital,இந்தியா

  நாயே என்று பிடிக்காதவர்களை திட்டினால், அது அவர்களை நன்றியுள்ளவர்கள் என்று பாராட்டுவதாகத்தான் எடுத்து கொள்ளவேண்டும். நாய்க்கு நம்பிக்கை துரோகம் என்பது சுட்டாலும் வராது. சிங்கம் என்றால் பலம், மானென்றால் அழகு, காக்கை என்றால் சேர்க்கை, நாயென்றால் நன்றி, எறும்பு என்றால் சுறுசுறுப்பு, தேனீ என்றால் உழைப்பு, டால்பின் என்றால் விளையாட்டு என்றெல்லாம் படைத்த இறைவன், எல்லா கெட்டகுணங்களையும் ஒன்று திரட்டி மனிதன் என்று படைத்துவிட்டான்.-> சரியாக சொன்னீர்கள்

 • சேரன் செங்குட்டுவன் - Coimbatore,இந்தியா

  செல்லப் பிராணிகள் போல் நம் மனதை இலகுவாக ஆக்கு பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது (குழந்தைகள் தவிர).

 • MaRan - chennai,இந்தியா

  இதே பாசம் சகமனிதர்களிடம் இருக்கும்பச்சத்தில் உலகமே ஒரு சொர்கம்,,காலம் ஒரு அற்புத மருந்து,, எல்லா சோகத்துக்கு அதனிடம் மருந்து உண்டு,, கவலை வேண்டாம்,, மேலும் சில ஜீவன்களுக்கு தொடர்ந்து பசியாற்றுதலை தொடருங்கள்,

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  நாயே என்று பிடிக்காதவர்களை திட்டினால், அது அவர்களை நன்றியுள்ளவர்கள் என்று பாராட்டுவதாகத்தான் எடுத்து கொள்ளவேண்டும். நாய்க்கு நம்பிக்கை துரோகம் என்பது சுட்டாலும் வராது. சிங்கம் என்றால் பலம், மானென்றால் அழகு, காக்கை என்றால் சேர்க்கை, நாயென்றால் நன்றி, எறும்பு என்றால் சுறுசுறுப்பு, தேனீ என்றால் உழைப்பு, டால்பின் என்றால் விளையாட்டு என்றெல்லாம் படைத்த இறைவன், எல்லா கெட்டகுணங்களையும் ஒன்று திரட்டி மனிதன் என்று படைத்துவிட்டான்.

 • Svs yaadum oore - chennai,இந்தியா

  சக மனிதர்களிடம் பேசுவது குறைந்துபோன போது , பிராணிகளிடம் அன்பு செலுத்துவது மன நிம்மதியை தரும் . பிராணிகளிடம் அன்பு செலுத்தினால் சக மனிதர்களிடம் கோபம் வராது . இதைத்தான் இந்த நிஜக்கதையில் கூறியுள்ளார்கள்

 • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

  வேதனையா இருக்கு சார்

 • Muruganandam Palanisamy - Udumalpet,இந்தியா

  ஜாக்கியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement