Advertisement

டவுட் தனபாலு

தி.மு.க., மாநில மகளிர் அணி செயலர் கனிமொழி: கட்சி பொறுப்புகளில், அதிக அளவில் பெண்கள் வர வேண்டும். பெண்களுக்கு, தி.மு.க.,வில் கருத்துக்களை தெரிவிக்கும் உரிமை உள்ளது.
டவுட் தனபாலு: 'பொறுப்புக்கு வர, யாருக்குங்க ஆசை இல்லை... ஆனா, எவ்வளவு பாடுபட்டாலும், ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தானே, நம்ம கட்சியில், தலைவர் மற்றும் செயலர் பதவி கிடைக்குது... அந்தப் பதவிக்கு, எங்களுக்கு தகுதி இல்லையா'ன்னு, யாரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...
இ.கம்யூ., மாநில செயலர் முத்தரசன்: மக்கள் நலனில் அக்கறை கொண்ட எதிர்க்கட்சிகள், பா.ஜ.,வை எதிர்க்க, 2019 தேர்தலுக்காக ஒன்று கூடி வருகிறோம்.
டவுட் தனபாலு: இவ்வளவு காலம் ஆட்சியில் இருந்தவர்கள், மக்கள் நலனில் அக்கறை காட்டியிருந்தால், பா.ஜ.,வால், அறுதிப்பெரும்பான்மை பலத்துடன், ஆட்சிக்கு வந்திருக்கவே முடியாதே... இப்போ, ஆட்சியை துாக்கி எறியும் அளவுக்கு, பா.ஜ., மீது மக்களுக்கு எதிர்ப்பு இல்லை என்பதால், சிதறிக் கிடந்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேருறீங்க... இதை, வெளிப் படையாகச் சொல்ல என்ன வெட்கம் என்பதுதான், மக்களின், 'டவுட்!'

பிரதமர் நரேந்திர மோடி: அதிகாரத்தை இழந்துள்ள காங்கிரசால், ஓர் ஏழைத் தாயின் மகன், டீ விற்கும் தொழிலாளி, நாட்டின் பிரதமராக ஆனதை சகித்துக்கொள்ள முடியவில்லை.
டவுட் தனபாலு: செய்ததைச் சொல்லி ஓட்டுக் கேட்காமல், தேர்தல் பிரசாரத்தில், 'சென்டிமென்ட்' பேசுவது சரியா... சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலுக்கும், உங்களின் இந்தக் கருத்துக்கும் என்னங்க சம்பந்தம் இருக்கு... ஏழைத்தாயின் மகன் என்ற காரணத்துக்காக மக்கள் உங்களை ஆதரித்தாங்களா... இல்லை, முதல்வராக குஜராத்தில் சிறந்த நிர்வாகத்தைக் கொடுத்த காரணத்துக்காக தேர்வு செய்தாங்களா என்ற, 'டவுட்'டைக் கொஞ்சம் விளக்குங்களேன்...!

தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன்: மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று சேர்ந்து இருக்கிறது. அது தேர்தலுக்காக அல்ல. மத சார்பற்ற நாடாக இந்த நாடு நீடிக்க வேண்டும். நாட்டின் ஒருமைப்பாடு கெட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திற்காக மட்டுமே.
டவுட் தனபாலு: இவ்வளவு உயரிய நோக்கம் இருப்பது உண்மை என்றால், 'பிரதமர் துவங்கி அமைச்சர்கள் வரை, எந்தப் பதவியின் மீதும், காங்கிரசாருக்கு ஆர்வம் இல்லை... பா.ஜ.,வுக்கு எதிரான அணியை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள, பிராந்தியக் கட்சி தலைவர்களை, பிரதமர் வேட்பாளராக முன்மொழியத் தயார்'னு, உங்களால் சொல்ல முடியுமா என்பது தான், மக்களின், 'டவுட்!'

பத்திரிகை செய்தி: ம.பி., சட்டசபை தேர்தலுக்கான, பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில், 'ஆட்சிக்கு வந்த, 10 நாட்களில் விவசாய கடனை தள்ளுபடி செய்வோம்' என, வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
டவுட் தனபாலு: ம.பி.,யில், 2003ல் இருந்து, பா.ஜ., ஆட்சி தான் நடக்குது... கடந்த, 13 வருஷமா, சிவராஜ் சிங் சவுகான் தான், முதல்வராக இருந்து வர்றாரு... இப்போ திடீர், இந்த அறிவிப்பை வெளியிட என்ன காரணம்... 'கடன் தள்ளுபடி என்பது, விவசாயிகளுக்கு எந்த பலனையும் அளிக்காது'ன்னு, இவ்வளவு நாளும் வியாக்கியானம் பேசி வந்த, பா.ஜ., தலைவர்கள், இதற்கு என்ன சப்பைக்கட்டு கட்டுவாங்க என்பது தான், பெரும், 'டவுட்'டாக இருக்கு...!
வெளியுறவு துறை இணை அமைச்சர் வி.கே.சிங்: ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், பிரதமர் மோடி அரசை விமர்சிப்போர், எழுத படிக்கத் தெரியாதவர்களாக இருப்பர். அவர்களுக்கு, இது குறித்து துளி கூட தெரியாததால், வாய்க்கு வந்தபடி உளறுகின்றனர்.
டவுட் தனபாலு: எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால், உடனே, 'கைநாட்டான்'னு, வாயடைக்க நினைப்பது சரியா... 'ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான, அறிக்கைகளை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும்' என, சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய கணக்கு தணிக்கை அதிகாரிக்கு, 60 முன்னாள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கடிதம் எழுதி இருக்காங்களே... படிக்காமல் தான், அத்தனை பேரும், ஐ.ஏ.எஸ்., ஆனாங்களா என்ற, 'டவுட்'டைக் கொஞ்சம் விளக்குங்களேன்...!lll

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement