Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'சர்கார் படத்தை எல்லாரும் பார்க்க, நீங்களே வழி வகுக்குறீங்க... நல்லது...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், தமிழக சட்டத் துறை அமைச்சர் சண்முகம் பேட்டி: அரசை விமர்சனம் செய்ய, அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், அரசு வழங்கிய விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள், சர்கார் படத்தில் அமைக்கப்பட்டு உள்ளது, மக்களிடையே வன்முறையை துாண்டுவதாக உள்ளது. யாருடைய துாண்டுதலின் பேரிலோ, இதுபோன்ற காட்சிகளை அமைத்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர், நடிகர் விஜய் மற்றும் படத்தை திரையிட்ட அரங்குகள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

'வாக்குறுதி தானே கொடுக்கின்றனர்... இதனால், உங்களுக்கு ஒன்றும் பயமில்லையே...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், 'டுவிட்டரில்' கருத்து பதிவு: ஆட்சியில் அமர்ந்து, மோடி தலைமையிலான அரசு எதையுமே சாதிக்கவில்லை. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட, அவர்களால் முழுமையாக நிறைவேற்றித் தர முடியவில்லை. இந்நிலையில், இப்போது மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில், பல்வேறு புதிய வாக்குறுதிகளை அளிக்கின்றனர்.

அ.தி.மு.க., மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி பேச்சு: அ.தி.மு.க.,வில், 60 வயது நிரம்பியவர்கள், எம்.ஜி.ஆர்., விதைத்த விதைகள். இவர்கள் இருக்கும் வரை, எந்த கொம்பனாலும், நம்மை அசைக்க முடியாது. அ.தி.மு.க.,வுக்கு ஒரே எதிரி, தி.மு.க., தான். அதை, வேரோடு அழிக்க வேண்டும். ஜெயலலிதாவிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்த சசிகலாவுக்கும், அ.தி.மு.க.,வுக்கும், எந்த தொடர்பும் இல்லை.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேச்சு: இடைத்தேர்தலுக்கு காரணம், தினகரன் தான். ஜெ.,வால் புறக்கணிக்கப்பட்ட அவர், 11 ஆண்டு எங்கிருந்தார்? தினகரனுடன் சேர்ந்து, பழனியப்பன் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறார். பழனியப்பன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா? கருங்காலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்.

மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: 'ரிசர்வ் வங்கி தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை' என, கூறுகின்றனர். ஓர் அரசு, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக தான் செயல்படுகிறது. ரிசர்வ் வங்கியும் அதில் அடக்கம். எனவே, மத்திய அரசு அவர்களை கட்டுப்படுத்துவதாகக் கூறுவதை, ஏற்க முடியாது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement