Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'அமைச்சர்கள் என்ன லுாசா, பதவியை ராஜினாமா செய்ய... நீங்க எப்படி, 'எதையோ எதிர்பார்த்து' தினகரனைத் தாண்டி வெளியில வரப் பிரியப்படலையோ, அதே போல தானே அவங்க...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலர் தங்க தமிழ்செல்வன் பேட்டி: 'இடைத்தேர்தலில், அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறுவோம்' எனக் கூறாமல், 'குறைந்தது எட்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான், ஆட்சி நீடிக்கும்' என, முதல்வர் பழனிசாமி கூறியிருப்பது, அ.ம.மு.க.,வைக் கண்டு பயப்படுவதைக் காட்டுகிறது. வாய்ச்சவடால் பேசும் அமைச்சர்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இடைத்தேர்தலில் போட்டியிட தயாரா?

தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி பேட்டி: 'இடைத்தேர்தலில், எட்டு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்' என, முதல்வர் கூறியதாக, ஊடகங்களில் வெளியான செய்தி, முற்றிலும் தவறானது. 20 தொகுதிகளிலும் தேர்தல் பணியை துவங்க, தேர்தல் பொறுப்பாளர்களுக்கு, முதல்வர் அறிவுறுத்தினார். இடைத்தேர்தலில், 20 தொகுதிகளிலும், அ.தி.மு.க., வெற்றி பெறும்.

அ.தி.மு.க., அவை தலைவர் மதுசூதனன் பேட்டி: தினகரனும், ஸ்டாலினும், ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பை வழங்கி, 'ஸ்லீப்பர் செல்'களாக செயல்படுகின்றனர். அ.தி.மு.க.,வில் இனி, தினகரனால், 'ஸ்லீப்பர் செல்'களை உருவாக்க முடியாது. தங்க தமிழ்செல்வன் எங்களுடன் வந்தால், ஆச்சர்யப்படுவதற்கில்லை.

லோக்சபா தொகுதி, தி.மு.க., பொறுப்பாளர் பொங்கலுார் பழனிசாமி பேச்சு: ஜெயலலிதா தேர்தலை எதிர்கொண்டது போல், தற்போதுள்ள, அ.தி.மு.க., தலைமைக்கு பலம் இல்லை. ஆட்சியில் இருப்பதால் தான், அ.தி.மு.க.,வினர் தொடர்ந்து, அக்கட்சியில் இருக்கின்றனர். ஊழல் குற்றச்சாட்டுகள், மக்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் கவனம் செலுத்தாதது ஆகியவற்றால், தமிழக ஆட்சியாளர்கள் மீது, மக்கள் வெறுப்பில் உள்ளனர். அதனால், வரும் லோக்சபா தேர்தலை, தி.மு.க.,வினர் மிகவும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம்.

அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவதில், முஸ்லிம் மக்களே ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில், காங்., மூத்த தலைவர் சசி தரூர் பேட்டி: ஹிந்து மதம், வன்முறையை ஆதரிக்கவில்லை. எனவே, வன்முறையையும், கலவரத்தையும் விலையாக கொடுத்து, அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என, உண்மையான ஹிந்து மக்கள் விரும்ப மாட்டார்கள்.

காங்., மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு: கடந்த நான்கு ஆண்டு ஆட்சியில், பார்லிமென்ட் ஜனநாயகத்தை நோக்கி, பா.ஜ.,வால் நான்கு அடி கூட, எடுத்து வைக்க முடியவில்லை. அப்படிப்பட்ட, பா.ஜ.,வுக்கு, காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கவோ, கேள்வி கேட்கவோ உரிமை இல்லை. நாட்டில் சர்வாதிகாரத்தை கொண்டு வர, பா.ஜ., முயற்சிக்கிறது. ஜெர்மனியில் முன்பு ஹிட்லர் என்ன செய்தாரோ, அதை இந்தியாவில் செய்ய வேண்டும் என, மோடி நினைக்கிறார்.

தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி:டெங்கு, பன்றிக் காய்ச்சலால், தமிழகத்திற்கு பாதிப்பு இருப்பது குறித்து, மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. மத்திய அரசின் சுகாதார நிறுவனங்கள், தமிழகத்தில் ஆங்காங்கே, மருத்துவ முகாம் அமைக்கலாம். டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை ஒழிக்க, போர்க்கால அடிப்படையில், தமிழக அரசு செயல்பட வேண்டும்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement