Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'நீங்க எந்த ரகம்ங்க...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், அண்ணா திராவிடர் கழக பொது செயலர் திவாகரன் பேட்டி: ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., - தினகரன் மூவரும், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். திடீரென தனக்கு அடித்த லாட்டரி பதவியை தக்க வைத்துக் கொள்ள, பழனிசாமி படாதபாடு படுகிறார். திரைமறைவில் ஏதாவது ஒரு வேலையைச் செய்துவிட்டு, அது வெளியுலகத்திறகு தெரியவரும்போது, ஓ.பி.எஸ்., அசிங்கப்பட்டு நிற்கிறார். இவர்கள் இருவரைக் காட்டிலும், தன் சுயநலத்திற்காக மிகவும் மோசமாக, அரசியலை அசிங்கப்படுத்துகிறார் தினகரன்.
பார்வர்டு பிளாக் மாநில பொது செயலர் கதிரவன் பேட்டி: பார்வர்டு பிளாக் எப்போதும், அ.தி.மு.க.,வுடன் இணக்கமாக இருந்தது. ஜெ.,வுக்குப்பின், அ.தி.மு.க.,வின் செயல்பாடு மோசமாகி விட்டது. ஊழல், முறைகேடு மலிந்துவிட்டது. அ.தி.மு.க., மீதும், அரசின் மீதும், மக்கள் கோபமடைந்துள்ளனர். அ.தி.மு.க.,வை ஒப்பிடுகையில், தி.மு.க., சிறந்தது என்ற எண்ணத்தில், தி.மு.க.,வுடன் இணைந்து செயல்படுகிறோம்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பேச்சு: அரசு நிர்வாக பொறுப்பில் இருந்து கொண்டு, நேர்மையாக இருப்பது, எளிதான காரியமல்ல. நிராகரிப்பு, புறக்கணிப்பு, இடமாற்றம் உள்ளிட்ட, பல எதிர்மறை விளைவுகளுக்கு, நேர்மையானவர்கள் தயாராகவே இருக்க வேண்டும். அரசு துறையில், நேர்மையானவர்களே இல்லை எனக் கூறிவிட முடியாது; பலர் இருக்கின்றனர். அவர்கள் இதுவரை, அடையாளம் காணப்படவில்லை.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி: 'மத்திய அரசு வழங்க வேண்டிய, 18 ஆயிரம் கோடி ரூபாயை, தமிழகத்திற்கு வழங்கவில்லை' என, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகிறார். அவர், எது குறித்து கூறுகிறார் எனத் தெரியவில்லை. தமிழக அரசு கேட்கும் நிதியை, மத்திய அரசு வழங்கி, அதற்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
'ரொம்ப பேசுறீங்க... பதருங்க பின்னாடி, அ.தி.மு.க.,வைத் தாங்கிப் பிடிக்க வேண்டிய காலம் ஏற்பட்டா, இப்ப நீங்க போடுற வார்த்தையை அள்ள முடியுமா...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பேச்சு: அ.தி.மு.க.,வில் இருந்த, பதர் நெல் எல்லாம் போய்விட்டன. நல்ல நெல் மணிகள் மட்டுமே இருக்கின்றன. பதர் நெல் போனால், நாம் எப்படி கவலைப்பட மாட்டோமோ, அதேபோல், அ.தி.மு.க.,வில் இருந்து போனவர்களை பற்றி, நாம் கவலைப்படக்கூடாது.
த.மா.கா., கட்சி தலைவர் வாசன் அறிக்கை: பட்டாசு வெடிப்பதால், மாசு அதிகரிக்கும் என்பது உண்மை தான். அதற்காக, திடீரென புதிய விதிமுறைகளைத் திணித்து, காலம் காலமாக வழக்கில் உள்ள கலாசாரத்தை மாற்ற நினைப்பதை, மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே, கூடுதலான நேரங்களில் பட்டாசு வெடிக்க, அனுமதி வழங்கப்பட வேண்டும்.
'நீங்களே சொல்லி, 100 ரூபாய் டோக்கன் கொடுக்க வச்சிருவீங்க போலிருக்கே...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: ஆர்.கே.நகரில், ௨௦ ரூபாய் டோக்கன் கொடுத்து தான் வெற்றி பெற்றனர். இனி, ௧௦ ரூபாய் டோக்கன் கொடுக்கலாம் என, தினகரன் நினைக்கிறார். தமிழக மக்கள் அவரை, நன்றாக புரிந்து வைத்து உள்ளனர். அவர், ௧௦௦ ரூபாய் டோக்கன் கொடுத்தாலும், ஆர்.கே.நகர் தொகுதி மக்களைப் போல், எந்தத் தொகுதி மக்களும் ஏமாற மாட்டார்கள்.
மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி பேச்சு: ஆதார் திட்டம் கொண்டு வரப்பட்டபோது, அதை எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்தன. ஆனால், ஆதார் அட்டைகளை பயன்படுத்துவதால் ஆண்டுக்கு, ௯௦ ஆயிரம் கோடி ரூபாய் வரை சேமிக்கப்படுகிறது. இந்தத் தொகை, தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டம் உட்பட நான்கு திட்டங்களுக்கு போதுமானதாக இருக்கும்.
ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சி தலைவருமான நவீன் பட்நாயக் பேச்சு: ௨௦௧௪, லோக்சபா தேர்தலின்போது, 'ஒடிசா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும்' என்பதே, பா.ஜ.,வின் தேர்தல் வாக்குறுதியில் முதலாவதாக இருந்தது. ஆனால், தேர்தலில் வெற்றி பெற்ற பின், தன் வாக்குறுதியை, பா.ஜ., நிறைவேற்றவில்லை. மக்களின் நம்பிக்கைகளை நிறைவேற்ற, பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு தவறிவிட்டது.
அ.ம.மு.க., துணை பொதுச் செயலர் தினகரன், 'டுவிட்டரில்' கருத்து பதிவு: நியூட்ரினோ திட்டத்திற்கு அளித்துள்ள சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்படாதது, வருத்தம் அளிக்கிறது. நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான பலமான வாதங்களை, தமிழக அரசு முன்வைக்கவில்லை. இந்த வழக்கின் மேல் முறையீட்டிலாவது, சுற்றுச்சூழலுக்கு எதிரான நியூட்ரினோ திட்டத்தை, தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.
ஹிந்தி நடிகை சோனாக் ஷி சின்ஹா பேட்டி: பெண்களிடம், ஆண்கள் தவறாக நடந்தால், அதைத் தட்டிக் கேட்க வேண்டும். தவறு செய்யும் ஆண்களுக்கு, ௧௦௦ சதவீதம் தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில், நான் உறுதியாக இருக்கிறேன். என்னிடம் தவறாக நடப்பவர்களை, நான் சும்மா விட மாட்டேன். அதேபோல், பெண்களால் எந்த ஆணாவது பாதிக்கப்பட்டால், அந்த பெண்களுக்கும், ௧௦௦ சதவீதம் தண்டனை கொடுக்க வேண்டும். நீதி கிடைப்பதில், இருபாலருக்கும் வித்தியாசம் கூடாது.
வருமான வரித்துறை தலைமை ஆணையர், என்.சங்கரன் பேச்சு: ஊழலை தவிர்க்க முடியும் என்ற மன உறுதி, அனைவருக்கும் வர வேண்டும். அனைத்து துறையிலும் நேர்மை இருந்தால் தான், நாடு முன்னேறும். வளமான இந்தியாவை உருவாக்க, மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். 'ஊழலில் ஈடுபட மாட்டேன்; உடந்தையாக இருக்க மாட்டேன்' என, தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் உறுதிமொழி எடுக்கும்படி, மாணவர்கள் வலியுறுத்த வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement