Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'ஒரு கட்சியை குறை சொல்வதற்காக, கட்சிக்கு அப்பாற்பட்ட மாபெரும் தலைவரையே இழுக்கா பேசுறோமேன்னு, உங்களுக்குத் தோணவே இல்லையா...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., மூத்த தலைவர், பீட்டர் அல்போன்ஸ் பேச்சு: தங்கள் கட்சியின் முன்னோடிகளை விட்டுவிட்டு, காங்., தலைவரான, சர்தார் வல்லபாய் படேலுக்கு, உலக அளவில் பெரிய சிலையை, பிரதமர் மோடி அமைத்ததற்கு காரணம் என்ன? புகழப்படக்கூடிய அளவுக்கு தகுதி வாய்ந்த தலைவர்கள் ஒருவர் கூட, பா.ஜ.,விலோ, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிலோ இல்லையா? பிரதமர் மோடியே, சிலை அமைத்து புகழும் அளவுக்கு வரலாற்று பெருமை, காங்கிரசுக்கு தான் உண்டு.

'நினைப்பதை நிறைவேற்றினா நல்லா தான் இருக்கும்... முன்னாள் முதல்வர், காமராஜர் அளவுக்கு பேர் எடுத்துருவீங்க...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., தலைவர், ஸ்டாலின் பேச்சு: நான் சார்ந்துள்ள இயக்கத்திற்கு, என்ன பெருமை தேடி தந்திருக்கிறேனோ, அதைவிட பல மடங்கு பெருமையை, என் கொளத்துார் தொகுதி மக்களுக்கு தேடித்தர வேண்டும். கட்சிப் பணிகள் இருந்தாலும், ஒரு அரை நாள் கிடைத்தால் கூட, உடனே கொளத்துார் சென்று விடுவேன். கட்சி, அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும் என்பதே, என் விருப்பம்.

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர், கமல் அறிக்கை: குழந்தைகளின் பசியை தீர்க்கப் போராடும் சத்துணவு ஊழியர்கள், வாழ்வாதாரத்திற்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ௩௫ ஆண்டுகள் உழைத்து, ஓய்வு பெறும்போது, மாத ஓய்வூதியம் வெறும், ௨,௦௦௦ ரூபாய் மட்டும் தான் என்பதே, கொடூரமான உண்மை. சத்துணவு ஊழியர்களின் இன்னலை தீர்க்கும் நடவடிக்கையில், அரசு உடனடியாக ஈடுபட வேண்டும்.

மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர், ராஜ்ய வர்தன் சிங் ரத்தோர் பேச்சு: நாட்டில் ஏராளமான ஊடக நிறுவனங்கள் உள்ளன. ஆனால், தேசத்தின் செய்தி வெளியீட்டாளர்களாக செயல்படுவது, 'துார்தர்ஷன்' மற்றும் 'டிடி நியூஸ்' நிறுவனங்கள் தான். ராணுவ வீரர்களைப் போல், நாட்டுக்காக அவர்கள் சேவையாற்றுகின்றனர். நாமும் கூட, சேவையாற்றிக் கொண்டிருக்கிறோம். நமது கேமரா அல்லது பேனாவின் மூலமாக, ஏராளமான இக்கட்டான நிகழ்வுகளை, நாம் படம் பிடிக்க வேண்டியிருக்கும்.

சிவசேனா தலைவர், உத்தவ் தாக்கரே பேச்சு: அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக சேகரிக்கப்பட்ட செங்கற்கள், கோவிலுக்கான கற்கள் அல்ல; அவை அனைத்தும், பா.ஜ., ஆட்சி யில் அமருவதற்கான படிக்கற்கள். 'ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக, வாக்குறுதி அளிக்கவில்லை; அது பொய்' என, ஒருமுறை மட்டும், பா.ஜ., தெரிவிக்கட்டும். வரும், ௨௦௧௯, லோக்சபா தேர்தலில், பா.ஜ., - எம்.பி.,க் களின் பலம், தற்போதுள்ள ௨௮௦லிருந்து, இரண்டாக குறைந்துவிடும்.

'சேவையா... இடியாப்பத்தைச் சொல்றீங்களா என, அரசியல்வாதிகள் கேட்பரே...' என எண்ணத் தோன்றும் வகையில், த.மா.கா., துணை தலைவர் கோவை தங்கம் பேட்டி: எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், அமைச்சர்கள் பதவி ஏற்றதும், மக்களுக்கு பொது சேவை செய்ய வேண்டும் என்ற உன்னதமான நோக்கம் மட்டும் இருக்க வேண்டும். இதுதான், ஓட்டு அளித்த மக்களுக்கு, அவர்கள் செய்யும் விசுவாசமான செயல். ஆனால், பதவி சுகம் கிடைத்த பின், மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதை மறந்து விடுகின்றனர். இது, அரசியல்வாதிகளின் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல; அவர்களின் சந்ததியினருக்கே, அவமரியாதையை பரிசாக தரும்.

'ஏங்க ராகுல்ங்கிறீங்க... உங்களுக்கு பிரதமர் பதவி மேலே ஆசை இல்லையா... அவர்கிட்டே, 'பெட்டிஷன்' போட்டுப் பாருங்களேன்...' எனக் கூறிச் சிரிக்கத் தோன்றும் வகையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேச்சு: 'காங்., இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும்' என, பிரதமர் மோடி கூறுகிறார். காங்., கட்சி, ஒரு பீனிக்ஸ் பறவை. அதை யாராலும், வீழ்த்த முடியாது. ௨௦௧௯ல் நடக்கும் லோக்சபா தேர்தல், ராகுலின் தேர்தல். அவரைப் பிரதமராக்க, இரவு, பகல் பாராமல், கட்சியினர் உழைக்க வேண்டும்.

காங்., தலைவர் ராகுல் பேட்டி: சபரிமலை விவகாரத்தில், ஆணும், பெண்ணும் சமம் என்பதே, என் தனிப்பட்ட கருத்து. அனைத்து பெண்களையும், கோவிலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும். என் கருத்திற்கு வேறுபட்ட கருத்தை, கேரள, காங்., கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில், கேரள மக்களின் உணர்வையே, கேரள காங்., பிரதிபலிக்கிறது.

'அ.தி.மு.க.,வின், தம்பிதுரை உங்களை எதிர்க்கிறதால, அவருக்கு எதிரா மாஞ்சா போட்டுப் பாக்குறீங்களோ...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: தி.மு.க.,வுடன் எங்களுக்கு, பங்காளி சண்டை இல்லை. தமிழகத்தின் நலனுக்காகவே, அதிமுக., - தி.மு.க., போன்ற கட்சிகளை விமர்சிக்கிறோம்.

அ.ம.மு.க., கர்நாடகா மாநில செயலர் புகழேந்தி பேட்டி: 'இடைத்தேர்தலில், 62 சதவீதம், அ.ம.மு.க., வெற்றி பெறும்' என, தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவரிமான் போல், அ.ம.மு.க.,வில் உள்ள, 23 எம்.எல்.ஏ.,க்களில் ஒருவர் கூட, அ.தி.மு.க.,வுக்கு செல்ல மாட்டார்கள். 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தாவிட்டால், நீதிமன்றம் சென்று, தேர்தலை நடத்த வலியுறுத்துவோம். கூட்டணி குறித்து, தலைமை முடிவு செய்யும்.

'அ.தி.மு.க.,வில், எல்லாருமே, வாய்ச் சொல் வீரராக மட்டும் இருந்து, ஒரு பலனும் கிடைக்கப் போறதில்லே...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி: 'கோர்ட் நிறைய அனுபவம் தந்துள்ளது' என, தினகரன் சொல்கிறார். இன்னும் நிறைய அனுபவம், தினகரனுக்குக் கிடைக்கப் போகிறது. 'இந்த ஆட்சி, இரு அமாவாசைக்குள் முடிந்துவிடும்' என்கிறார் செந்தில் பாலாஜி. அமாவாசையைப் பற்றி, அமாவாசையே பேசுவது, விசித்தரம் தான். ஆயிரம் அமாவாசைகள் கடந்தும், அ.தி.மு.க., ஆட்சி நிலைத்திருக்கும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement