Advertisement

விதி விட்ட வழியில் செல்வது சரியா?

Share

சுவாமி, 'உன் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று முன்கூட்டியே கடவுளால் தீர்மானிக்கப்பட்டுவிட்டது' என்று எங்கள் ஜோசியர் சொல்கிறார். அப்படியானால், தெய்வ சித்தத்தை எதிர்த்து நேரத்தை வீணடிப்பதைவிட, வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிடுவதுதான் புத்திசாலித்தனம்?

சத்குரு: கடவுள் வில்லனா?
நீங்கள் ஒழுங்காகச் செயலாற்றினால், உங்களுக்குக் கிடைக்க வேண்டியதைக் கிடைக்காமல் செய்து பழிவாங்கிக் கொண்டு இருக்க, கடவுள் ஒன்றும் சினிமா வில்லன் அல்ல!
விதியை மட்டுமே நம்பி உங்களை ஒப்படைத்து விட்டால், விரைவிலேயே அது உங்களைப் புதைத்து மண் மூடிவிடும்.
மூச்சுவிட்டுக் கொண்டு இருக்கத் தேவையானது கிடைத்தால் போதும் என்று செயலற்று இருப்பவர்கள்தான், விதியின் முதுகில் ஏறி சவாரி செய்யப் பார்ப்பார்கள்.
விதியா? பசியா?
சும்மா வறட்டுச் சித்தாந்தம் பேசிக் கொண்டிராமல், அதை நடைமுறைப்படுத்திப் பாருங்களேன். உங்களுக்குச் சாப்பாடு கிடைக்க வேண்டும் என்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக வைத்துக் கொள்வோம். உங்களைக் கவனிக்க ஆட்களே இல்லாத வனத்தில் போய் உட்காருங்கள். பக்கத்தில் ஒரு கனி விழுந்தால்கூட தொடாதீர்கள். கடவுள் விரும்பினால், அவரே வந்து உங்கள் வாய்க்குள் அதைப் போடட்டும் என்று காத்திருந்து பாருங்களேன். வெல்வது விதியா, உங்கள் பசியா என்று தெரிந்துவிடும்.
விதியை நம்பாத சங்கரன்பிள்ளை!
சங்கரன்பிள்ளை தன் மகனுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துத்தர விரும்பினார்.
மத்திய நிதி அமைச்சரைச் சந்திப்பதற்கு எப்படியோ நேரம் வாங்கிச் சந்தித்தார்.
"உங்கள் மகளை என் மகன் மணக்க விரும்புகிறான்" என்றார்.
நீதி அமைச்சர் திகைத்தார். "உங்கள் மகன் யாரென்றே எனக்குத் தெரியாதே?"
சங்கரன்பிள்ளை இந்தியாவின் முதன்மையான கம்பெனியின் பெயரைச் சொல்லி, "அந்த கம்பெனியில் என் மகன்தான் மேனேஜிங் டைரக்டர்!" என்றார்.
அமைச்சரின் முகத்தில் மகிழ்ச்சி வந்தது. "அப்படியானால் சரி... திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்" என்றார்.
சங்கரன்பிள்ளை அடுத்து அந்த கம்பெனியின் தலைவரைச் சென்று சந்தித்தார்.
"என் மகனுக்கு உங்கள் கம்பெனியில் மேனேஜிங் டைரக்டர் பதவி தர வேண்டும்" என்று கேட்டார்.
"அப்படியென்ன சிறப்புத் தகுதி இருக்கிறது உங்கள் மகனிடம்?"
"மத்திய நிதி அமைச்சரின் மாப்பிள்ளையாகப் போகிறவன் அவன்" என்றார் சங்கரன்பிள்ளை.
தொழிலதிபரின் முகம் மலர்ந்தது.
"அப்படியானால் சரி!"
சங்கரன்பிள்ளை விதியை நம்பிக் காத்திருக்கவில்லை. நினைத்ததை சாதித்துக் கொள்வதற்குத் தேவையான காய்களைப் புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டு நகர்த்தினார்.
அவரைப்போல நீங்கள் குறுக்கு வழியில் யோசிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. எல்லாவற்றையும் விதியின் கையில் ஒப்படைத்துவிடாதீர்கள் என்றுதான் சொல்கிறேன்.

உங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல, உங்கள் மரணத்தைத் தீர்மானிப்பதுகூட நீங்கள்தான். கடவுள் அல்ல!
விதியை நீங்களே தீர்மானியுங்கள்!
உங்களுக்கு நேர்வது ஒவ்வொன்றும் உங்களால் வரவழைக்கப்பட்டதே! பிரச்சனை என்னவென்றால், பல சமயம் சற்றும் கவனமில்லாமல் அவற்றுக்கு வழி செய்து கொடுக்கிறோம் என்பதை நீங்கள் உணர்வது இல்லை.
விழிப்பு உணர்வு இல்லாமல் நீங்கள் தூவும் பல விதைகள்தான் விஷச் செடிகளாக உங்களை சுற்றி வளர்ந்து நிற்கின்றன. அவற்றைக் கடவுள் கொண்டுவந்து உங்கள் தோட்டத்தில் நட்டுவிட்டதாகப் பெருமூச்சு விடுவதில் அர்த்தம் இல்லை.
முழுக் கவனத்துடன் உங்கள் பாதையை நீங்களே விரும்பி அமைக்கும் திறமை உங்களுக்கு இருந்தும், அதைப் பயன்படுத்தாமல், இருப்பது மாபெரும் குற்றம்.
உங்கள் உடலின் மீது உங்களுக்கு ஆளுமை இருந்தால், உங்கள் வாழ்க்கையின் இருபது சதவிகித விதி உங்கள் கைக்கு வந்துவிடும். மனதை ஆளத் தெரிந்து கொண்டுவிட்டால், ஐம்பதிலிருந்து அறுபது சதவிகிதம் வரை விதி உங்கள் சொல்படி கேட்கும். உங்கள் உயிர்ச் சக்தியை முழுமையாக ஆளக் கற்றுக் கொண்டுவிட்டீர்கள் என்றால்..
எந்தக் கருப்பையில் உதிக்க வேண்டும், எப்படி வாழ வேண்டும், எப்படி இறக்க வேண்டும் என்று எல்லாவற்றையும் நீங்கள் விரும்பிய வண்ணம் அமைத்துக் கொள்ள முடியும்.
உயிர் சக்தி என்றால் என்ன? உங்களுடைய ஒவ்வோர் அசைவுக்கும் ஏதோ ஒரு சக்தி தேவைப்படுகிறதே, அதுதான் உயிர்ச் சக்தி. அதில் மிகச் சொற்பப் பகுதியை வைத்துக் கொண்டு நீங்கள் அன்றாட வேலைகளைச் செய்துவிட முடிகிறது. அதை முழுவதுமாகக் கிளர்ந்து எழுப்பினால், நினைத்துப் பார்க்க முடியாததை எல்லாம் நீங்கள் சாதிக்க முடியும்.
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும், ஏன் உங்கள் மரணத்தின் தருணத்தைக்கூட முற்றிலுமாக நூறு சதவிகிதம் தீர்மானிப்பது நீங்கள்தான். இது புரியாமல், வேறு யாரோ எல்லாவற்றையும் கொண்டு வந்து உங்கள் தலையில் கொட்டிவிட்டதாக நினைப்பதை முதலில் நிறுத்துங்கள்.

விதி உங்களைச் செலுத்தட்டும் என்று வெட்டியாக இருந்தால், எது எதுவோ உங்களை இப்படியும் அப்படியுமாகப் பந்தாடி விட்டுத்தான் போகும்.
இது நீங்கள் அறியவேண்டிய ரகசியம்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Durai Jeyachandran - Madurai,இந்தியா

    விதியை வெல்ல யாராலும் முடியாது. உங்கள் கதையிலே இரண்டு பொய் சொல்லித்தான் அவன் நினைத்ததை சாதிக்கிறான். இரண்டு பொய்யுமே எளிதில் கண்டுபிடிக்கக் கூடியது. அதைக்கூட தெளிவு படுத்திக்கொள்ளாமல் அவ்வளவு பெரிய முடிவை எடுப்பவர்கள் நீங்கள் சொன்ன இடத்தை முதலில் அடைந்திருக்க முடியாது. கதைக்கு சுவாரசியமாக இருக்கலாம், நடைமுறையில் சாத்தியமில்லை. இதை நம்பி உங்களுடைய அறிவுரையை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒரு வேளை நடந்தது என்றால் அதுவும் கடவுளால் தான் நடந்திருக்கும். உங்கள் கருத்தை ஏற்க முடியாது மன்னிக்கவும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement