Advertisement

வலைதளங்களில் முடங்கிய மனித ஆற்றல்

அக்கால சமுதாய சூழ்நிலைகள் வேறு விதமாக இருந்தது. ஒரு ஆண், ஒரு பெண்ணை காண்பதே மிகவும் அரிதான செயலாகும். ஒரு ஆண், ஒரு பெண்ணை பார்த்தாலும், அவரிடம் பேசுவது மற்றும் பழகுவது என்பது மிகவும் அரிதான விஷயமாக இருந்தது. காலம் செல்ல செல்ல நாகரீக வளர்ச்சி மற்றும் கல்வித்துறையில் ஏற்பட்ட பல மாற்றங்கள் பெண் விடுதலை, பெண் கல்வி, பெண்களுக்கான வேலை வாய்ப்பு போன்ற சமுதாய மாற்றங்கள் ஆண், பெண் இடைவெளியை வெகுவாக குறைத்தது. இன்று அனைத்து துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்கள் பங்கேற்று சிறப்பிக்கின்ற சூழ்நிலையில் கல்வி அறிவு மற்றும் சமுதாய விழிப்புணர்வு அதிகம் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் நம்முடைய சமுதாயத்தின் அடிப்படை கட்டுப்பாட்டை தகர்க்கும் வகையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற பதற வைக்கும் பாலியல் குற்றங்கள் நம்மை திடுக்கிட வைக்கின்றன.
புனிதமான உறவு எது : பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் படிக்காத பாமரரோ, கல்வி அறிவற்ற கடைநிலை மக்களோ அல்ல. படிப்பாற்றல் மிக்கவர், அறிஞர், மத குருமாரர், பேராசிரியர், மருத்துவர், விஞ்ஞானி, ஆட்சியாளர் என பாகுபாடின்றி சகலரும் ஈடுபட்டு வருவது நம்மை திகைக்க வைக்கக்கூடிய விஷயம். இந்த சமுதாய முரண்பாடுகளை பற்றி அறிய வேண்டிய காலம் வந்து விட்டது. இந்த மனித இனம் இத்தகைய அபாரமான விஞ்ஞானம் மற்றும் கலாசார வளர்ச்சிக்கு பின் ஏன் மீண்டும் மிருக நிலைக்கு செல்கிறது என்பதை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். ஆண், பெண் உறவு என்பது மிகவும் புனிதமானது என்று அனைவரும் அறிந்ததே. ஆனாலும் இந்த விஞ்ஞான யுகத்தில் வெகு விரைவாக பரவி வரும் பாலியல் குற்றக் கலாசாரத்திற்கு ஒரே காரணமாக ஒன்றை கூறலாம். அது சமூக வலைதளங்களில் கொட்டிக்கிடக்கும் லட்சக்கணக்கான ஆபாச வலைதளங்கள் என்றால் அது மிகையாகாது. இந்த உலகத்தையே சுருக்கி ஒரு அலைபேசி வடிவத்தில் நம் கையில் கொடுத்து விட்டது விஞ்ஞானம். அதில் மனித வளத்தை ஊக்குவிக்கும் நல்ல விஷயங்கள் ஏராளம் உண்டு.
மனித மனம் ஆர்வம் : ''மனிதனின் வக்கிர மனது எதிர்மறையான விஷயங்களையே எப்போதும் நாடிச்செல்லும்,'' என்றார் உளவியல் தந்தை சிக்மென்ட் பிராய்டு. அவரது கூற்று போல் வலைதளங்களில் பல்வேறு நல்ல விஷயங்களை ஒதுக்கி தள்ளி விட்டு வக்கிர உணர்வுகளை துாண்டும் விஷயங்களையே அதிகமாக நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை இலைமறைக் காயாக இருந்த பாலியல் பற்றிய அடிப்படை விஷயங்கள் இன்று விழிப்புணர்வு என்ற பெயரில் முற்றிலும் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. பாலியல் கல்வி தேவையா, தேவையில்லையா என்று தேசிய அளவில் பல விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்விவாதங்களுக்கான பல ஆதாரங்களையும், எதிரான பல கருத்துக்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. வெளிப்படையாக பேசும் பல கருத்துக்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. வெளிப்படையாக பேசும் போது அந்த விஷயம் என்ன என்பதை அறிய மனித மனம் ஆர்வம் கொள்ளும்.
'குட் டச்; பேட் டச்' : குழந்தைகளுக்கு 'குட் டச்' 'பேட் டச்' பற்றி அதிகமாக சொல்லிக் கொடுக்க வேண்டும். தெளிந்த நீரோடை போல உள்ள குழந்தைகளின் மனதில் இது பற்றி சொல்லும் போது, அந்த பிஞ்சு மனம் சற்று கலங்க ஆரம்பிக்கிறது. இந்த இரண்டு விஷயங்கள் எப்படி இருக்கும் என்று அது சிந்திக்க ஆரம்பிக்கிறது. எனவே, இயற்கையாக மனிதன் வளர்ந்து கொண்டிருக்கின்ற போது விழிப்புணர்வு என்ற பெயரில் நாம் தான் அந்த தேன் கூட்டை கிளறுகிறோம். பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு சிகரெட் விற்கக்கூடாது, மது விற்கக்கூடாது, 'ஏ' சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை பார்க்கக்கூடாது என்ற பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் இதுபோன்ற கட்டுப்பாடுகள் வலைதளங்களுக்கு கிடையாது. பலர் ஒருநாளைக்கு 5 முதல் 8 மணி நேரம் வரை வலைதளங்களில் நேரத்தை செலவழிக்கிறார்கள். 'ஐந்து வயது குழந்தையை சிதைத்த 70 வயது முதியவர் கைது,' 'பாலியல் வன்முறைக்கு உட்பட்ட 15 வயது பெண்ணின் கருவை கலைக்கக்கோரி நீதிமன்றத்தில் மனு,' என்ற அதிர்ச்சிகரமான செய்திகள் சில மனிதர்களின் கீழ்தரமான செயல்பாடுகளுக்கு உதாரணம்.
வலைதள ஆட்டங்கள் : இன்றைய சூழ்நிலையில் வயது வித்தியாசம் இன்றி, ஆபாச தளங்கள் எத்தகைய வல்லமை படைத்த மனிதர்களையும் ஆட்டி படைத்து விடும். இது போன்ற விஷயங்களில் இதுவரை கண்ணியம் காத்த மனிதர்களும் தடுமாற தொடங்குவார்கள். ஆகவே, தொடர்ந்து ஒருவனின் மனதில் இந்த ஆபாச தளங்கள் ஆக்கிரமிக்கும் போது, அதை நடைமுறையில் செய்ய வேண்டும், என்ற அசட்டு தைரியம் உண்டாகிறது. அதற்கான சூழ்நிலை அமையும் போது, அம்மனிதன் தன்னிலை மறந்து இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபடுகிறான். பெண் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி என்று தாய்மார்களுக்கு விழிப்புணர்வு தர வேண்டிய அளவுக்கு நமது சமுதாயம் கடுமையான கலாசார சீரழிவுக்கு ஆளாகி உள்ளது. ஆகவே, இக்கலாசார சீரழிவை தடுப்பதற்கு ஒரேவழி நம்முடைய அலைபேசியில் உள்ள ஆபாச தளங்களை உடனடியாக தடை செய்வதுதான். நம் நாட்டில் உள்ள வலைதளங்கள், முகநுால் போன்றவற்றின் தரத்தை கண்காணிப்பது மற்றும் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு விசாரணையின் போது சமூக வலைதளங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியாது, என்று மத்திய அரசு தெரிவித்தது ஆச்சரியமாக உள்ளது. ஒரு முக்கிய நிகழ்ச்சி மற்றும் தலைவர்கள் வருகையின் போது 'ஜாமர்' கருவிகள் பயன்படுத்தி அப்பகுதிகளின் வலைதளங்களின் செயல்பாட்டை முடக்குவது போல இந்த கட்டுப்பாட்டை உருவாக்க வேண்டும். அதே போன்று அலைபேசிகளை விற்கும் போதும், இந்த சமூக வலைதளங்களில் கணக்குகள் ஆரம்பிக்கும் போதும் வயது கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும். பெற்றோர் தங்களது குழந்தையின் வயது மற்றும் தேவைக்கு ஏற்ப அலைபேசி மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். 'ஒழுக்கமில்லாத சுதந்திரம் சமுதாயக்கேடு' என்ற காந்தியடிகளின் வரிகள் இக்கருத்திற்கு வலு சேர்க்கும் என்று நம்புகிறேன்.
- முனைவர் மு.கண்ணன்முதல்வர், சரஸ்வதி நாராயணன் கல்லுாரி மதுரை. 99427 12261.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement