Advertisement

மனநலமே நாட்டின் பலம் இன்று உலக மனநல நாள்

தூங்கும்போது கதை சொல்ல ஒரு சொந்தம், எந்தப் பொருள் எடுத்தாலும் எனக்கும் வேண்டும் என்று அடம் பிடிக்கும் ஒரு சொந்தம், தவறு செய்து அடி வாங்கினால் அடிபடாமல் காக்கும் ஒரு சொந்தம், தோற்று துவண்டு இருக்கும்போது தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கும் ஒரு சொந்தம் என இருந்த கூட்டுக் குடும்ப வகுப்பறைகள் சொல்லிக் கொடுத்த பாடங்கள் ஏராளம். அவை மனப்பாடம் செய்யும் ஏட்டுப்பாடங்கள் அல்ல. மனதைப் பண்படுத்தும் மனப்பாடங்கள். திருவிழாக்கள் என்றாலே இரட்டிப்பாகும் இல்லற மகிழ்ச்சி. எல்லையில்லா பாடங்கள் சொல்லி தந்த வீட்டுக் கூடங்களில் இன்று நிறைந்திருப்பவை சொந்தங்கள் அல்ல; சொகுசு வாழ்க்கைக்காக நாம் சொந்தமாக்கிக்கொண்ட தொலைக்காட்சியும், கைபேசியும்கம்யூட்டரும் தான். விளைவு உலகம் முழுவதும் 10 முதல் 20 குழந்தைகளும் இளைஞர்களும் மனநோயின் அறிகுறியுடன் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் 350 கோடி மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் ஒவ்வொரு வருடமும் நான்கில் ஒருபங்கு இளம்பருவத்தினரும் பத்தில் ஒரு குழந்தையும் மனது சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வின்படி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களால் உலக பொருளாதாரம் ஒவ்வொரு ஆண்டும் 1 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் அளவு உற்பத்தியில் குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
மனதின் சக்தி : மனிதனை மாமனிதனாக்குவது மனதின் சக்தியே. மனநலம் இல்லையெனில் வெற்றிபெற்றவனுக்கும் மகிழ்ச்சி துாரமே. எவ்வளவு பயிற்சி இருந்தாலும் முயற்சி இருந்தாலும் மனபலம்இல்லாதவருக்கு வெற்றி எட்டாக்கனியே. உடலின் ஆரோக்கியத்தைபற்றி மட்டுமே பேசி வந்த நிலையில் உள்ளத்தின் ஆரோக்கியத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் 1992ல் உலக மனநல அமைப்பு அக்டோபர் 10ம் நாளை உலக மனநல நாள் என்று அறிவித்துள்ளது. இந் நாளில் மனநலம் மற்றும் மனது சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கான தீர்வு பற்றிய விழிப்புணர்வுப் பிரசாரங்கள் நடத்தப்படுகின்றன. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஒரு வாரம் முழுவதும் மனநல வாரமாககொண்டாடப்படுகிறது. இந்த வருடம் மாறிவரும் உலகில் ''இளைஞர்களுக்கான மனநலம்”பற்றிய விழிப்புணர்வை வலியுறுத்தி இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.“ஊனுடம்பு ஆலயம் உள்ளம் ஒரு கோயில்” என்ற தத்துவத்தை உலகிற்கு எடுத்துச் சொன்ன இந்தியாவில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனையான பதிவு.உடலில் ஏற்படும் காயங்களுக்கு மருந்துகளின் பெரும்பான்மையான கண்டுபிடிப்புகளை வேண்டுமென்றால் மேற்கத்திய நாடுகள் தந்திருக்கலாம். ஆனால் மனதைசெம்மைப்படுத்தும் மருந்துகளின் பிறப்பிடம் இந்தியாவே. மனதை அடக்கும் கலை அறிந்த பல்வேறு ரிஷிகளையும் முனிவர்களையும் கொண்டது நம் நாடு. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல மேலை நாட்டவரும் தீர்வுக்காக நாடி வருவது இந்தியக் கலையான யோகாவை நாடித்தான்.மன அழுத்த காரணம்இசை, பாட்டு, நடனம் இவையனைத்துமே இந்தியாவின் பாரம்பரியமாக இருந்து பின்னாளில் மறைந்து போய் மீண்டும் உருப்பெற்று நம்மை நாடி வந்துள்ளன. குழந்தைக்குப் பாடும் தாலாட்டு முதல் இறப்புக்கு பாடும் ஒப்பாரிப்பாட்டு வரை நம் வாழ்வியலுடன் இணைந்தது வாய்ப்பாட்டு.வேலையின் களைப்பை நீக்க வாய்ப்பாட்டு ஒன்றே துணை நிற்கும். அந்நாளில் குழந்தை என்றாலும் சரி குமரியானாலும் சரி கிழவியானாலும் சரி கும்மியடிக்காத பெண்கள் இல்லை. இன்றைய நாளில் பெண்களின் பெரும்பான்மையான பொழுதுபோக்கு தொலைக்காட்சித் தொடர்களே. நிழல் கதாப்பாத்திரங்கள் நிஜமாக மனதில் நுழைவதுதான் மனஅழுத்தத்தின் முழுமுதற் காரணி.ஆய்வின்படி இந்தியாவில் ஆண்களை விட பெண்களே அதிக மன அழுத்தத்தில் உள்ளனர். ஒரு பெண்ணின் ஆரோக்கியம் தான் ஒரு குடும்பத்தின் அஸ்திவாரம். பெண்ணின் மனநிலையைப் பொறுத்து தான் குடும்பத்தின் வளமும் அமையும்.உலக நல அமைப்பு 2020 ஆண்டில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 20 சதம் பேர் மனநலக் குறைவால் அவதிப்படுவர் என்று எச்சரித்துள்ளது. இனிவரும் காலங்களில் 13--18 வயதிற்குட்பட்ட குழுந்தைகளில் ஐந்தில் ஒருவர் முற்றிய மனநலக் குறைவால் பாதிக்கப்படுவர் என்று தேசிய மனநல மையம் எச்சரித்துள்ளது. பெரும்பாலான நோய்களுக்கு மருத்துவர்கள் கூறும் முதல் காரணம் மன அழுத்தமே. மன அழுத்தத்தின் முற்றிய நிலை தற்கொலை வரை இழுத்துச் செல்லும். மனதின் வலிமையால் உடலின் நோய்களைக் கூட தீர்க்க முடியும் என்பதற்கு சான்றுகள் பல உள்ளன.
உள்ளத்திற்கு உரம் : மன அழுத்தத்திற்கான காரணம் தனிமனிதனாகவோ வேலைபார்க்கும் இடமாகவோ அல்லது சூழ்நிலையாகவோ இருக்கலாம். அறுசுவை உணவு உண்டால் உடலுக்கு ஆரோக்கியம். அதேபோல் உள்ளத்திற்கு தேவை ஆரோக்கியம். பகவன் ஸ்ரீகிருஷ்ணர் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வில் கடந்து செல்ல வேண்டிய நிலைகளை மான அவமானங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், நிலைகுலைந்து போக செய்யும் காலச் சூழ்நிலைகள், நம்பிக்கை துரோகங்கள், செய்யும் காரியத்தில் நஷ்டங்கள், வஞ்சக சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், உறவினர் நண்பர்களின் சூதுகள்,அன்பின் இழப்புகள் இவையெல்லம் மானிட வாழ்க்கையில் அன்றாட நிகழ்வுகள். இதுபோன்ற போரட்டங்களையெல்லாம் மன உறுதியுடனும் துணிச்சலுடனும் எதிர்கொள்கின்ற மானிடன் எவனோ, அவனே மிகச்சிறந்த பராக்கிரமம் பொருந்திய வெற்றியாளனாக பரிணாமிக்கிறான் என்று எடுத்துரைக்கிறார். மனோபலத்தை அதிகரிக்கும் அற்புத வரிகள் இவை.இயற்கையில் ஓரிடத்தில் காற்றில் ஏற்படும் அழுத்தம் இன்னொரு இடத்தில் சீற்றமாக வெளிப்படுவதைப் போல, ஒருவரால் ஏற்பட்ட மன அழுத்தம் தான் மற்றவர்களிடம் நம்மை சீற்றமடையச் செய்யும். நாளடைவில் அதுவே பழக்கமாகி மனநோயாளியாகக் கூட மாற்றிவிடுகிறது. மன நலத்தைக் காக்க வண்ண வண்ண மாத்திரைகள் தேவையில்லை. மனதை என்றும் புத்துணர்வோடு வைத்திருக்கும் செயல்பாடுகள் தேவை. மகிழ்ச்சி என்பது பணத்தாலோ பொருளாலோ நிர்ணயிக்கப்படுவதில்லை; அது எண்ணங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு மனிதன் சந்தோஷமாக இருக்க மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை. நம்முடைய சந்தோஷம் நம்முடைய நேர்மறை எண்ணங்களில் உள்ளது. வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சோதனைகளும் நம்மை பலப்படுத்தும் சவால்கள் என்று எதிர்கொள்ளும் போது அங்கே தன்னம்பிக்கை வெளிப்படுகிறது.'மனநலமே நாட்டின் பலம்' என்ற வள்ளுவரின் வாக்கிற்குஇணங்க மனநலம் காப்போம்! மண்ணின் மைந்தனாவோம்!
--லாவண்யா ஷோபனாதிருநாவுக்கரசுஎழுத்தாளர்சென்னைshobana.thiruna@gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement