Advertisement

லவங்க எண்ணெய் கொசு முட்டையை அழிக்கும்!

கொசுக்களை கட்டுப்படுத்த வழிக்கூறும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின், முதன்மை பூச்சியியல், ஓய்வுபெற்ற வல்லுனர், எம்.எஸ்.முகைதீன் அப்துல்காதர்: தேவையற்ற இடங்களில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஒரு வாரத்துக்கும் மேல் தண்ணீர் தேக்கி வைக்கும் பாத்திரங்கள், தண்ணீர் தொட்டி, 'செப்டிக் டேங்க்'குகளில் கொசு நுழையாமல் இருக்க, அவற்றை, மூடி வைக்க வேண்டும். கிணறுகள், பெரிய சிமென்ட் தொட்டிகள், அலங்காரத் தொட்டிகளில், கம்பூசியா மற்றும் கப்பி வகை மீன்களை வளர்த்து, 'ஏடிஸ், அனோபிலெஸ்' கொசுக்களைக் கட்டுப்படுத்தலாம். முதிர்கொசுக்களை அழிக்க, வீட்டின் சுவர்கள் மற்றும் கூரைகளில் பூச்சிக்கொல்லி மருத்துகளை தெளிக்க லாம். அதேபோல், காற்றில் பரவும், 'மாலத்தியான்' வகை மருந்துகளை மருந்தாகத் தெளித்தோ அல்லது புகை மருந்தாகப் பயன்படுத்தியோ, திறந்த வெளியில் உள்ள கொசுக்களைக் கட்டுப்படுத்தலாம்!
யோகா மற்றும் இயற்கை நல மருத்துவர், ஒய்.தீபா: இரவில், களிம்புகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கை எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். எண்ணெயை அப்படியே சருமத்தில் தேய்க்கக் கூடாது. தேங்காய் எண்ணெய் அல்லது தண்ணீருடன் கலந்து தான் தேய்க்க வேண்டும். யூக்காலிப்டஸ் ஆயில் தேய்ப்பதால், கொசு கடிப்பதை, 90 சதவீதம் தவிர்க்கலாம். அரோமா ஆயிலில் இருந்து வரும் மணம், கொசுக்களை நம் அருகில் அண்ட விடாது; தவிர, இது சரும ஆரோக்கியத்துக்கும் நல்லது.லேவண்டர் ஆயில், வலி நிவாரணியாகவும், பூஞ்சை மற்றும் நோய் எதிர்ப்பானாகவும் செயல்படும். இதன் வாசனை, கொசுவை மயங்கச் செய்யும்; நம் சருமத்தையும் மிருதுவாக்கும்.லவங்கப்பட்டை எண்ணெயை, உடல் முழுவதும் தேய்த்துக் கொள்ளலாம் அல்லது நாம் உடுத்தும் உடைகளில் தெளிக்கலாம்; இதற்கு, கொசுக்களின் முட்டைகளை அழிக்கும் தன்மை உண்டு. வேப்பெண்ணெயை, தேங்காய் எண்ணெயுடன் கலந்தும், தைம் ஆயிலை, தேங்காய் எண்ணெயுடன் சேர்த்தும் தேய்த்துக் கொள்ளலாம். மலேரியாவை பரப்பும் கொசுக்களிடமிருந்து, தைம் ஆயில் நம்மைக் காக்கும். கொசு கடித்த இடத்தை சொறியாமல், நறுக்கிய வெங்காயம் அல்லது பூண்டு, கற்றாழை, தேன் அல்லது ஈரத்துணியை வைக்கலாம்.வீட்டைச் சுற்றிலும் துளசி, கற்றாழை, புதினா, லெமன் கிராஸ், ரோஸ்மெரி செடி, மேரி கோல்டு உள்ளிட்ட மூலிகைச் செடிகளை வளர்க்கலாம். இதன் மணத்தால் கொசு மட்டுமில்லாது, அனைத்து வகையான பூச்சிகளும், வீட்டுக்குள் வராமல் தடுக்கப் படும்.
ஒரு நாளில் 100 'மாப்' தைக்கலாம்!
பாத்திரங்களை மெருகேற்றும், 'மாப்' எனும் துடைப்பான் தயாரித்து வரும், சென்னை, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சவுந்தர்யா: 10ம் வகுப்பு வரை படித்து உள்ளேன். எங்கள் பகுதியில், பாத்திரங்களுக்கு மெருகேற்றும், 'மாப்' தயாரிப்பவர்கள் இருந்தனர். பள்ளி சென்று வந்ததும், பகுதி நேர வேலையாக, இதை செய்ய கற்று, செய்து வந்தேன். ஒரு கட்டத்தில், அதையே முழு நேரமாக செய்யும் அளவுக்கு வளர்ந்ததோடு, நிறைய பேருக்கு வேலையும் கொடுத்து வருகிறேன். படிப்பு, அனுபவம் என, எதுவுமின்றி, கணிசமான வருமானம் பார்க்கும் இந்த தொழில், வேலைக்குப் போக முடியாத பெண்களுக்கான சரியான வாய்ப்பு! ஆயத்த ஆடை நிறுவனங்களில், தைத்தது போக, வீணாகும் பருத்தி துணி துண்டுகள் மட்டும் தான் இதற்கு பயன்படும். இவை, ஆயத்த ஆடை நிறுவனங்களிலும் அல்லது சென்னை, பாரிஸ் கார்னர் கிடங்குகளிலும் கிடைக்கும். அதை, கிலோ கணக்கில் வாங்கி, அளவுக்கேற்ப அடுக்கி, தைத்து, ஆணி வைத்து அடிக்க வேண்டும்.துணியின் தரத்துக் கேற்ப கிலோ, 5 ரூபாய் முதல் கிடைக்கும். ஒரு மாப் தயாரிக்க, 2 கிலோ துணி தேவைப்படும். ஆரம்பத்தில் குறைந்தது, 100 கிலோ வரை தேவைப்படும். மின்சாரத்தில் இயங்கும் தையல் இயந்திரத்தோடு சேர்த்து, மொத்த மூலதனம், 25 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். வேகமும், நுணுக்கமும் பிடிபட்டு விட்டால், ஒரு நாளுக்கு, 100 வரை தைக்கலாம். ஆரம்பத்தில், நாள் ஒன்றுக்கு, 30 மாப் வரை செய்யலாம்.அடுக்க, தைக்க என, ஒவ்வொன்றுக்கும் உதவிக்கு ஆள் வைத்திருந்தால், இன்னும் எண்ணிக்கையை கூட்டலாம்.ஒரு மாப் செய்ய அடக்க விலை, 40 ரூபாய். அதை, 60 ரூபாய்க்கு விற்கலாம். ஆணி அடிக்க உதவியாளர்கள் வைத்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு மாப்புக்கு, 8 ரூபாய் கொடுக்கலாம். 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், 20 ஆயிரம் வரை லாபம் பார்க்கலாம்.தனியாக துவங்குவதை விட, இரண்டு, மூன்று பேர் சேர்ந்து துவங்குவது லாபகரமாக இருக்கும். 300 ரூபாய் கட்டணத்தில், ஒரே நாள் பயிற்சியில், பாத்திரங்களை மெருகேற்றும் மாப் செய்ய கற்றுக் கொள்ளலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement