Advertisement

மூத்தோர் சொல் அமிர்தம்

மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்கனியும் முதலில் கசக்கும்; பின்னர் இனிக்கும்'என்பார்கள். உண்மையில் அனுபவபூர்வமாக உணர்ந்துகொள்ள வேண்டியது இது. அனுபவம்பெற்ற பழுத்த மரங்களாக இருக்கும் மூத்தவர்களை வணங்குதலும் அவர்களைப் போற்றலுமே நம்முடைய பண்பாடு. நேற்று சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டது. வயது முதிர்ந்தோர் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்கள் சவால்களை கருத்தில்கொண்டு 1991 அக்டோபர் 1ம் தேதி முதல் ஐ.நா.,வால் உலக முதியோர் தின கொண்டாட்டம் தொடங்கியது.

அன்பு மிகுந்தவர்கள்நவீன உலகத்தில் நாம் இழந்தவைகளை பட்டியல் போட்டால் அதில் உணர்வும் நெகிழ்வும் மிக்க முதியவர்கள் என்ற உறவுகள்தான் நமது பெரியவர்கள். கடந்த தலைமுறைகளில் வாழ்ந்து அதற்கு முந்தைய தலைமுறைகளின் வரலாறு அறிந்தவர்கள். தாத்தாவின் கதைகள் கேட்டுக் கொண்டே உறங்கிப்போன நமது இளமைக் காலங்களை சற்று அசைபோட்டுப் பாருங்கள்.இன்றைய குழந்தைகளுக்கு அந்த அழகிய தருணங்களை நாம் வழங்கி இருக்கிறோமா ? பரமார்த்த குரு, தெனாலி ராமன், மரியாதை ராமன், பஞ்ச தந்திரக் கதைகள் என்று எத்தனையோ கதைகளை நமக்கு அறிமுகம் செய்திட்ட அம்புலி மாமாக்கள் அவர்கள். நன்னெறிக் கதைகள் எல்லாம் நம்மை நல்வழிப்படுத்திய காலமது. அறம் என்றால் என்ன என்பதை நமக்கு போதித்து நமக்கு வழிகாட்டும் வாழ்ந்துகாட்டிகள்.தனக்காக எதுவும் சேர்த்துக் கொள்ளாமல் நமது கண்களில் இருந்து கண்ணீர் வரக்கூடாது என்பதற்காகவே செந்நீர் சிந்தி உழைத்தவர்கள். இன்றைய தினத்தில்நாம் எத்தனை வீடுகளில் அந்த நினைவுகளை சேமித்து வைத்திருக்கும் தாத்தா பாட்டிகளைப் பார்க்கிறோம் என்பதை சற்றே யோசித்துப் பாருங்கள். அவர்களை அருகிலே இருந்து ரசிக்கும் பாக்கியம் பெற்றவர்களே எதிர்காலத்தில் அன்பு மிகுந்தவர்களாக உருவாகிறார்கள்.

தாத்தா, பாட்டிகள்தாத்தாக்களையும் பாட்டிகளையும் முதியோர் இல்லங்களில் விட்டு விட்டு நமது வீட்டுக் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லும் 'சிடி'க்களை வாங்கி வைத்திருக்கிறோம். அந்த குறுந்தகடுகள் சொல்லும் நன்னெறிக்கதைகளை குழந்தைகள் கேட்கிறதா என்றெல்லாம் அது பார்ப்பதில்லை. செயற்கையான முறையில் கதைகள் பேசும் அந்த கணினிகள், உணர்வுகள் அறிந்து பேசும் தாத்தா பாட்டிகள் இல்லை என்பதை உணர வேண்டும். வீட்டுப் பெரியவர்களோடு குழந்தைகளை பேச விடுங்கள். அவர்களே நம்மை அன்போடு அரவணைத்தவர்கள்; நமது குழந்தைகளையும் அரவணைப்பார்கள் .மனிதர்களை என்று நமது சுயநலத்திற்காக பயன்படுத்தும் பொருளாக மாற்றிவிட்டோமோ அன்றிலிருந்து நாமும் சுயநலம் நிரம்பியவர்களாக மாறிவிட்டோம். இளைஞர்கள் நிரம்பிய தேசம் என்ற பெருமிதம் மிக்கது இந்தியா என்பதில் பெருமை இருந்தாலும் முதியோர் இல்லங்களும் ஆதரவற்றோர் இல்லங்களும் பெருகி வரும் தேசமாக மாறி வருகிறது. வயது ஏற ஏற முதியவர்கள் குழந்தைகள் போலவே அடம்பிடிப்பார்கள். தங்களின் உடல்நலிவுற்றது என்பதை உணர்ந்தாலும் அதை வெளிக்காட்டுவதில் ஒரு தயக்கம் இருக்கும். அவர்களிடம் நாமோ குழந்தைகளோ ஒரு நாளின் சில நிமிடங்களை செலவு செய்தாலே அவர்கள் உடலும் உள்ளமும் ஆரோக்கியம் பெருகி வாழ்வார்கள்.

பிறந்த நாளில்எனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் முதியோர் இல்லம் சென்று வருவது வழக்கம். எனது மாணவர்களுக்கும் இதை சொல்லி வருகிறேன். அங்கு சென்று பார்க்கும்போது, சில மணி நேரங்கள்அவர்களிடம் செலவு செய்யும்போது, அவர்களின் கண்களில் தெரியும் அந்த மகிழ்வை வார்த்தைகளில் கொண்டு வந்திட முடியாது. எந்த முதியோரும் பெரும்பாலும் தங்களின் குழந்தைகளை குறை சொல்வதில்லை. அலுவல் புரியும் இடங்களில் நிகழும் பிரச்னைகளை வீட்டில் வந்து, அன்பிற்கு ஏங்கித் தவிக்கும் அந்த முதியவர்கள்மீது காட்டி விடுகிறோம். நமது குழந்தைகளைக் கூட பெரும்பாலும் அவர்களிடம் விளையாட விடுவதில்லை. அதைவிட கொடுமை சிலர் அவர்களை வேலைவாங்குகிறார்கள்.'என்ன இருந்தாலும் அவர் இருக்கும் வரை ஒரு தெம்பு இருந்தது'. பல வீடுகளில் அந்த வீட்டின் தலைமகன் அல்லது தலைமகள் இறந்தவுடன் அனைவரும் உச்சரிக்கும் சொல். உண்மைதான். சில உறவுகளை இழக்கும் வரை அவர்களின் அருமை புரிவதில்லை. அப்படிப்பட்ட ஒரு உன்னதமான உறவே வீட்டில் இருக்கும் பெரியவர்கள். அவர்களின் அனுபவங்கள் நமக்கு மிகப்பெரிய சொத்து. தாத்தா ஏதாவது தின்பண்டம் வாங்கி வருவார். எல்லோருக்கும் கொடுத்துவிட்டு பாட்டிக்கு ரகசியமாக கொடுப்பார். அதை பாட்டி உடனே உண்ணாமல் கொஞ்சம் மிச்சம் வைத்து தன்னுடைய பேரனுக்கும் பேத்திக்கும் பகிர்ந்து உண்ணும் அழகை நாம் எத்தனை பேர் ரசித்திருப்போம். அவர்களின் பெயரையும் அவர்கள் சேர்த்து வைத்த சொத்துகளையும் நாம் கைப்பற்றுவதை விட அவர்களின் பரிசுத்தமான அன்பையும் ஆசிகளையும் வாங்குவது உன்னதம் மிக்கது.

ஓய்வு இல்லாதவர்கள்இன்றளவும் வள்ளுவனையும் ஒளவையாரையும் வயதானவர்கள் என்ற தோற்றத்திலே காண்பிப்பதே நல்லவற்றை நல்ல ஆலோசனைகளை வயதான முதியவர்களே தருவார்கள் என்ற நம்பிக்கைதான். வயதானவர்கள் ஓய்வு எடுக்க இயலாத நிலையில் பல்வேறு இடங்களில் உழைத்துக் கொண்டிருப்பதை பார்க்கும் போது மனதிலே சற்று இனம் புரியாத சோகம் மேலிடும்.நமது குழந்தைகளை நேசிப்பது போல, நாம் குழந்தைகளாக இருக்கும்போதும், தற்போதும் நம்மை நேசிக்கும் நமது வீட்டின் ஆணிவேர்களான முதியவர்களை நேசிக்க வேண்டும். அவர்கள் ஆசைப்படுவது நாம் அவர்களிடம் அன்பு காட்ட வேண்டும் என்பதைதவிர வேறு ஏதும் இல்லை. அவர்களுக்கான சிறு சிறு தேவைகளை அறிந்து முடிந்தவரை அவர்களிடம் இருந்து கண்ணீர் வராத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.கூட்டுக்குடும்பம் தனிக்குடும்பம் ஆனது. இன்று தனிக் குடும்பம் தனித்தனி குடும்பங்களாக மாறிவருவது வேதனைக்குஉரியது. இப்படிப்பட்ட சூழலைத் தவிர்க்க வேண்டும் என்றால் மூத்தவர்கள் நம்மோடு இருக்க வேண்டும். அவர்களின் அன்பும் அனுபவமும் நமக்கு வழிகாட்ட வேண்டும். அவர்கள் தோள்மேல் ஏற்றி இந்த உலகத்தை காண்பித்த அவர்களை நாம் கைபிடித்து நடை பழகும் குழந்தையைப் போல பார்த்து பார்த்து மகிழ்ந்து உறவாட வேண்டும்.'ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே' என்பார் பொன்முடியார். அவர்களின் கடமைகளை சரியாக முடித்துவிட்டு ஓய்வு தேடும் நேரத்தில் அவர்களை விட ஒரு படி மேல சென்று அன்பு செலுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமை. கோயில் இல்லா ஊரில் மட்டுமல்ல தாத்தா பாட்டி இல்லா வீட்டில் கூட குடியிருக்க வேண்டாம்.-முனைவர். நா.சங்கரராமன்பேராசிரியர்எஸ்.எஸ்.எம்.கலைஅறிவியல் கல்லுாரிகுமாரபாளையம்99941 71074

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இன்றய சூழ்நிலையில் கூட்டுக்குடும்பம் மிகவும் அவசியம் தாத்தா பாட்டி அரவணைப்பு இக்கால குழந்தைகளுக்கு இல்லாமல் பிற்காலத்தில் நல்லொழுக்கம் தயை என்பதே அருகிப்போய்விடும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement