Advertisement

உச்ச நீதிமன்றத்தை கர்நாடகா மதிப்பதேயில்லை!

அ.சரவணன், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: ஒகேனக்கல்லில் அணை கட்டி, புனல் மின் நிலையம் அமைக்க, 1961ல், தமிழக அரசு திட்டமிட்டது; கர்நாடக அரசு எதிர்ப்பால், திட்டத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை. 1982ல், கர்நாடக மக்களுக்கு புத்தாண்டு பரிசாக, மேகதாது திட்டத்தை அறிவிப்பதாக, அப்போதைய முதல்வர், குண்டுராவ் தெரிவித்தார்.

தமிழக முதல்வராக இருந்த, எம்.ஜி.ஆர்., தன் சாதுர்யத்தால், அதை தடுத்து நிறுத்தினார். தமிழக சட்டசபையை கூட்டி, ஒட்டுமொத்த எதிர்ப்பையும், மத்திய அரசுக்கு தெரிவித்தார். கர்நாடகாவில், கிருஷ்ணா, துங்கபத்ரா, அதன் கிளை ஆறுகள் உட்பட, வற்றாத ஆறுகள் பல உள்ளன. இவற்றின் மூலம், 6,500 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.அங்கு அமைக்காமல், தமிழக எல்லை அருகில், மேகதாது எனுமிடத்தில், காவிரியின் குறுக்கே, 5,912 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புனல் மின் திட்டம் அமைக்க, கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

இத்திட்டம் நிறைவேறினால், மேட்டூருக்கு வரும் நீர் முழுவதுமாக தடுக்கப்பட்டு விடும்.மேகதாது திட்டத்தை நிறைவேற்ற, கர்நாடக அரசு இப்போதும் முயற்சி செய்கிறது. தமிழக முதல்வர் பழனிசாமி, தன் எதிர்ப்பை கடிதம் மூலம் பிரதமருக்கு தெரிவித்துள்ளார். கர்நாடக அரசோ, முதல்வர் மற்றும் சில முக்கிய அமைச்சர்களுடன் டில்லி சென்று, பிரதமர் மோடியை சந்தித்து, திட்டத்தை வலியுறுத்துகிறார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையில், அனைத்து கட்சிகளின் தலைவர்கள், பிரதமரை சந்தித்து அனுமதிக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.காவிரி வடிநிலப் பகுதியைச் சேர்ந்த மாநிலம் எதுவாயிருந்தாலும், புதிய திட்டத்தை செயல்படுத்த, பிற மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் ஆணை; ஆனால், கர்நாடகா அதை மதிப்பதில்லை.மேகதாது அணை திட்டத்திற்கு, பல ஆண்டுகளுக்கு முன்பே வகுக்கப்பட்டது. ஒகேனக்கல் புனல் மின் திட்டம், தமிழகத்தை ஆண்ட, தி.மு.க., அரசு, மத்திய ஆட்சியில் பங்கெடுத்த போதும் இத்திட்டம் பற்றி வாய் திறக்கவில்லை.

காவிரியில், தமிழகத்திற்கு வரும் நீரை தடுக்கவே, மேகதாது திட்டம் என்பதை உணர்ந்து, தமிழக கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, திட்டத்தை தடுத்து நிறுத்த, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லாவிடில், காவிரி படுகை, பாலைவனமாக மாறி விடும்!lll

---

3 நகர மக்களுக்குபயன் தரும் நல்லரயில்வே திட்டம்!பா.பாலசுப்ரமணியன், லாஸ்பேட்டை, புதுச்சேரி மாநிலத்திலிருந்து எழுதுகிறார்: 'தர்மபுரி - மொரப்பூர், கிருஷ்ணகிரி - ஜோலார்பேட்டை வழிதடங்களில், புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும்' என, இதே பகுதியில், வாசகர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார்; அவரது கருத்தை வரவேற்கிறேன்.

அதே போல், திருவண்ணாமலையில் இருந்து, ஜோலார்பேட்டைக்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும்.இதனால், புதுச்சேரி, திண்டிவனம், கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய ஊர்களில் வசிப்போர், பெங்களூரு, கோவா, புனே, மும்பை ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய துாரம், பயண நேரம், கட்டணம் கணிசமாக குறையும்; ரயில்வே நிர்வாகத்துக்கும் எரிபொருள் செலவு குறையும்.

தற்போது ஓடிக்கொண்டிருக்கும், சில ரயில்களை நீட்டிப்பு செய்தால், தெற்கு ரயில்வேக்கு வசூல் கூடும். தாம்பரம் - விழுப்புரம் இடையே செல்லும், தினசரி பாசஞ்சர் ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டிக்க வேண்டும்.புதுச்சேரி - யஷ்வந்த்பூர் இடையே செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலை, மைசூரு வரை நீட்டிக்க வேண்டும்.

விழுப்புரம் - புருலியா மற்றும் விழுப்புரம் - கரக்பூர் இடையே செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்களை, புதுச்சேரியிலிருந்து இயக்க வேண்டும்.தாம்பரம், ஒரு முனையமாக மாற்றப்பட்டு விட்டதால், சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும், ரயில்களில் சிலவற்றை, தாம்பரத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த ரயில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாக, பெங்களூரு அடையும்படி வழிதடத்தை மாற்ற வேண்டும்.

இந்த, மூன்று நகரங்களில் வசிக்கும் லட் சக்கணக்கான மக்கள், பெங்களூரு செல்ல தேவையில்லாமல், சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் செல்ல வேண்டியதில்லை. தாம்பரத்தை, முக்கிய ரயில்வே, 'டெர்மினலாக' ரயில்வே நிர்வாகம் மாற்றலாம்!


---

காந்தி கனவைநிறைவேற்றஉறுதி ஏற்போம்!சொ.கவிச்செல்வம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தேச பிதா மகாத்மா காந்தியின், 150ம் ஆண்டு பிறந்த நாளை இந்தாண்டு கொண்டாட உள்ளோம். ஆனால், அவர் வலியுறுத்திய, மது அருந்தாமை, மாமிசம் உண்ணாமை, பெண்களின் பாதுகாப்பு என்பதை எல்லாம் புறக்கணித்துள்ளோம்!

தமிழகத்தில், தனி நபர் அருந்தும் மதுவின் அளவு, ஆண்டிற்கு ஆண்டு கூடியபடி உள்ளது. இன்னும் கூடுதல் மதுக்கடைகளை, தமிழக அரசு திறந்து, விற்பனையில் ஈடுபட்டால், ஆண்டொன்றிற்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்குமாம்!தமிழகத்தில், புலால் உண்போர் எண்ணிக்கை, பன்மடங்கு பெருகி வருகிறது. மது அருந்தியவுடன், போதை ஏறி, மாமிச உணவை நாடுவோர் மிக அதிகம். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில், கறிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

'தந்தையே, மகளை பாலியல் வன்புணர்ச்சி ஆளாக்கினார், மாணவியரிடம் தவறாக நடந்து கொண்டார் ஆசிரியர்' போன்ற செய்திகள் அடிக்கடி வருகின்றன.நாடு சுதந்திரம் அடைந்து, 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், காந்தி கண்ட, பெண்கள் பாதுகாப்பு என்பது கானல் நீராகத் தான் உள்ளது.இதை எல்லாம் பார்க்கும் போது, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய, 'காலொடிந்த ஆட்டுக்காக கண்ணீர் விட்ட புத்தர்...' என்ற பாடல் வரிகள், தற்காலிக சூழ்நிலைக்கு கச்சிதமாக பொருந்துகிறது.

பாலியல் வன்செயல்களில் ஈடுபடுவோர் மீது, தயவு தாட்சண்யம் காட்டாமல், 'போக்சோ' சட்டத்தின்படி, கடும் தண்டனை வழங்க வேண்டும்.மதுக் கடைகளை படிப்படியாக குறைத்து, மது இல்லா மாநிலமாக, தமிழகத்தை மாற்ற வேண்டும்.புலால் உண்ணுவதை தவிர்த்து, காய்கறி உணவுகளை சாப்பிடுவோம் என, காந்தியின், 150வது பிறந்த நாளில், ஒவ்வொரு தமிழனும், உறுதி பூண்டு, அதை செயலிலும் காட்ட வேண்டும்!lll

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement