Advertisement

ஆதார் முதல் அயோத்தி வரை...

'ஆதார் அடையாள அட்டை அவசியம்' என்ற, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பு, அரசின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு, வரும் காலங்களில் பயன் தரும். ஆதார் எண் என்பது, அத்தியாவசியமாக எல்லா விஷயத்திற்கும் பயன்படுத்த முடியாது என்ற நிபந்தனைகளை, இத்தீர்ப்பு வழங்கிய போதும், ஆதார் எண், தனிமனித ரகசியங்களை ெவளிப்படுத்தும் கருவியாக இல்லாமல், இதன் நடைமுறைகளில் பாதுகாப்பு உள்ளது என்று கூறியிருக்கிறது.பள்ளிக்கல்வித் துறை தேர்வு, வங்கி கணக்கு துவக்குதல், தனியார் கம்பெனிக்கு ஆதாரமாக தரவேண்டிய அவசியம் இல்லை என்பது, மக்கள் எளிதாக தங்கள் தினசரிப் பணிகளை நடத்த உதவிடும். அதேசமயம், 'பான்கார்டு' உடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்பது, இவ்வளவு பெரிய நாட்டில் வரிகட்டும் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்க உதவும்.எல்லாவற்றையும் விட, அரசு மானியங்கள், அந்த மானியத்தில் வெவ்வேறு வகையில் தரப்படும் சில சலுகைகள் ஆகிய அனைத்தையும் கட்டுப்படுத்தும் இந்த முடிவானது, இனி அரசு, ஆதார் என்பதை அடிப்படை அளவுகோலாக, எவ்வித நிர்ப்பந்தத்திற்கும் இல்லாத வகையில் பயன்படுத்த உதவிடும்.இதை, 'நிதி மசோதா' என்ற அடிப்படையில் அறிவித்த, அரசு முடிவை எதிர்த்த, காங்கிரஸ் கருத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.ஒரு காலத்தில், சிறந்த, ஐ.டி., நிபுணரான, நந்தன் நிலேகனி ஆலோசனையுடன் துவங்கப்பட்ட இந்த ஆதார் எண் பயன்பாடு, காங்கிரஸ் அரசின் முடிவு என்றாலும், அதை அமல்படுத்திய, பா.ஜ., தலைமையிலான கூட்டணிக்கு, ஆதார் நிச்சயமாக தொடர்கிறது என்பது வெற்றியாகும். தவிரவும், ஆதார் எண் தருவதில், 'டூப்ளிகேட்' என்ற மோசடி இல்லை என்பதும், கைரேகை, விழி ரேகை பதிவு என்ற, 'பயோமெட்ரிக்' சரி என்ற கருத்து, மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு உதவும். இப்போது இருக்கிற நடைமுறைகளில் ஏதாவது குறைபாடுகள் எழும் எனில், அதைத் தீர்ப்பது அரசின் கடமை என்பதும், அர்த்தமுள்ள கணிப்பாகும்.தேசிய பாதுகாப்பு விஷயங்களில் ஆதார் தகவல் தேவை என்ற சிறப்பு பிரிவை நீக்கியதின் மூலம், அரசு சக்திகள் ஆதாரை வைத்து, தனிநபர் ரகசியங்களை ெவளிப்படையாக்க முடியாது. அரசு மானிய உதவிகளில், மோசடிகளைத் தவிர்த்து, ஆண்டுக்கு, 97 ஆயிரம் கோடி சேமிப்பாகிறது என்ற தகவல், ஜனநாயகத்திற்கு பலம் தரும்.ஆதார் எண் மட்டும் அல்ல... நீண்ட நாட்களாக தேர்தல் சீர்திருத்தம் குறித்த, கோஸ்வாமி கமிஷன் அளித்த பரிந்துரைகளை, அதிக மெஜாரிட்டி உள்ள ஆட்சிக்காலத்தில், காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை. அரசியலில் ஊழல், கிரிமினல் ஆதிக்கம், காலப்போக்கில் கொடிகட்டிப் பறந்தது.இந்த நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததால் மட்டுமே, தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் நடைமுறையை, நீதிபதிகள் ஏற்கவில்லை. அரசு மேற்கொள்ள வேண்டிய சட்ட நடைமுறை களில், தாங்கள் புதிதாக நடைமுறைகளை ஏன் உருவாக்க வேண்டும் என்ற கேள்வி, பார்லிமென்டரி நடைமுறைகளுக்கு மதிப்பளிப்பதாகும்.'அரசியலில் துாய்மை ஏற்படுத்த, வலுவான சட்டங்களை இயற்ற வேண்டும்' என்ற சுப்ரீம் கோர்ட் கருத்து, ஆழமானது. இனி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், தங்கள் மீதான கிரிமினல் வழக்குகள் விபரங்களை, 'பெரிய எழுத்துக்களில்' விளக்கமாக தரவேண்டும் என்பது வரவேற்கத்தக்கது. வேட்பாளர் தேர்வு என்பது, கட்சிகளுக்கு சுமையாகலாம்.இவற்றை தேர்தல் கமிஷன் எப்படி அமல்படுத்தப் போகிறது என்பது, அடுத்த விஷயம். இதற்காக ஒரு சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வரும் பட்சத்தில், லோக்சபா, ராஜ்யசபாவில் எவ்வித எதிர்ப்பும் இன்றி, அதற்கான சட்டம் வருமா என்பதை, இன்று உறுதியாக கூற முடியாது.ஆனால், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தன் பதவிக்காலம் முடியும் முன், இம்மாதிரி முக்கியத் தீர்ப்புகள் அளித்ததால், அவர், வரலாற்றில் இடம் பெறும் நீதிபதியாகிறார்.இந்த நேரத்தில் அயோத்தி விவகாரத்தில், அவர் தலைமையிலான பெஞ்ச் அளித்த முடிவானது, இனியும் இந்த பிரச்னை இழுபறியாக நீடிக்காமல், ஒரு முடிவு வரும் வகையில் ஒத்தி வைக்கப்பட்டிருப்பது, முக்கியத்துவம் வாய்ந்தது.மேலும், தகாத உறவு விஷயத்தில், ஆண், பெண் சமமாக பாவிக்கப்பட வேண்டியதை விட்டு விட்டு, ஆண்களுக்கு சாதகமாக, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளை குறை கூறியிருக்கும் தீர்ப்பும், நாம் இன்னமும், பிரிட்டிஷ் பாதையில் சட்டங்களை வைத்திருப்பதைக் காட்டுகிறது. ஒரு வார காலத்தில், பல பிரச்னைகளுக்கு சுப்ரீம் கோர்ட் அளித்த முடிவுகள் வரவேற்கத்தக்கவை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement