Advertisement

மதுரையை சுற்றிப் பார்க்கலாம்! : இன்று உலக சுற்றுலா தினம்

உலக சுற்றுலா தினத்தை மாநில அரசு இந்த ஆண்டு மதுரையில் கொண்டாடுகிறது. தமிழகத்தில் எத்தனையோ நகரங்கள் இருக்கின்றன. அவற்றுள் மிகவும் பழமையும், பெருமையும் வாய்ந்த வரலாற்று சிறப்புடைய நகரம் நம்ம மதுரை. 'பரிபாடலில்' ஆறு பாடல்களில் இந்நகரின் மாண்பை அறியலாம். இன்றும் இது தென்னிந்தியாவின் 'ஏதென்ஸ்'.மதுரையை சுற்றிப் பார்க்க என்ன இருக்கிறது? என நினைப்பவர்களும் உண்டு. ''நான் மதுரையில வாக்கப்பட்டு இருபது வருஷம் ஆச்சு. இன்னும் மீனாட்சி கோயில் பார்த்ததில்லை''. ''பாம்பே படத்தில் கண்ணாளனே பாட்டு சீன் எடுத்தது மதுரை நாயக்கர் மகாலா? இன்னும் போனதில்லை''! ''இந்தா வீட்டு பக்கத்தில இருக்கிற சென்ட்ரல் சினிமா தியேட்டருக்கு (82 வருடம் பழமையானது) போய் ஒரு படம் கூட பார்த்தது கிடையாது''. இப்படி சொல்பவர்களும் இருக்கிறார்கள். நம்ம மதுரையை ஒரு ரவுண்ட் வருவோம்.

ராணி மங்கம்மாள் சத்திரம்மதுரை ரயில்நிலையம் எதிரே பெரிய நீளமான கட்டடம் தெரிகிறதா? அது தான் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் மரபிலே வந்த ராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சத்திரம். 1901 ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. இன்று மாநகராட்சி தங்கும் விடுதியாக செயல்படுகிறது.பெரியார் பஸ் ஸ்டாண்ட் - ஷாப்பிங் காம்பிளக்ஸ் ஒட்டிய 25 அடிக்கும் மேலான உயரம் கொண்ட கோட்டை சுவர். அன்றைய அரண்மனையின் கோட்டை கொத்தளத்தின் மேற்கு நுழைவுவாயிலாக இருந்தது. தற்போது மாநகராட்சி பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. பாண்டிய மன்னர்களின் காலம் தொட்டு வரலாற்றின் மிச்சமாக கம்பீரமாக நிற்கிறது.இங்கிருந்து நேராக நேதாஜி ரோட்டில் நடந்து சென்றால் முருகன் கோயில் தாண்டியதும் 'சாப்டூர் ஜமீன் பங்களா' வெளித்தோற்றத்தை பார்க்கலாம். எதிரே கீழ அனுமந்தராயன் கோயில் தெருவில்'இசைக்குயில்' எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்து வளர்ந்த வீடு. இசை அரசியின் குரலை இசைக் குறியீடாக அடையாளப்படுத்துகிறது அந்த வீட்டின் வாசற்சுவற்றில் உள்ள வீணை.இன்னும் கொஞ்சம் துாரத்தில் 'நகைக்கடை பஜாரில்' நடந்து சென்றால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகைக் கடைகள் ஒரே சாலையில்.

சிட்டி சினிமா தியேட்டர்மதுரை நகருக்குள் முதல் 16 எம்.எம்., திரை கொண்டது. அந்த காலத்தில் அசோக்குமார், தேவதாஸ் உள்பட பல வாரங்கள் ஓடிய கருப்பு வெள்ளை காலத்தை நினைவுபடுத்தினாலும் மூடப்பட்ட இந்த தியேட்டர் தன் (முகப்பு) முகத்தைக் கூட வண்ணப்பொலிவிழந்து காட்டிக்கொண்டிருக்கிறது.சவுராஷ்டிர சமூக மக்களால் உருவாக்கப்பட்ட தெற்கு கிருஷ்ணன் கோயில் என்கிற பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் முன்னுாறு ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலில் மந்திரங்கள்,ஸ்லோகம், பாராயணம் செய்து பிற்காலத்தில் கொடிகட்டி பறந்தார் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன்.

டி.எம்.கோர்ட்ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் டிஸ்டிட்ரிக் முனிசிபல் கோர்ட் ஆக செயல்பட்டது. இந்த பெயரில் டி.எம்.கோர்ட் பஸ் ஸ்டாப்பும் இருந்தது. தெற்கு - மேலமாசிவீதி சந்திப்பில் இருக்கும் கருங்கல் கட்டடம் தற்போது வியாபார கடைகளாக மாற்றம் பெற்றாலும் வரலாற்றின் ஏற்றமாக திகழ்கிறது.1623ம் ஆண்டுக்கு பிறகு திருமலைநாயக்கர் மன்னர் ஆட்சி பொறுப்பில் இருந்த போது, சிறிய அளவில் தொடங்கப்பட்டது நேரு ஆலால சுந்தர விநாயகர் கோயில். பிற்காலத்தில் கோயில் பணி நிறைவு பெற்றது. கலைநயத்துடன் கூடிய கல்கோயிலுக்கு நுழைவு வாயிலில் இரண்டு பக்கமும் கல் யானைகள் வரவேற்கின்றன.

ராமாயணச்சாவடிசத்திரங்கள், சாவடிகளுக்கு நெடுந்துாரத்தில் இருந்து வருபவர்கள் சமுதாய மக்களை ஒருங்கிணைப்பது மட்டுமல்லாது ஆன்மிக வழிக்கும் வித்திட்டது. அதன் ஒரு பகுதியாக இங்கு ராமாயண தொடர் சொற்பொழிவுகள் நடந்துகொண்டிருக்கின்றன.கீழமாசி பஜாரில் ஆயிரக்கணக்கான மளிகை சாமான் கடைகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். வரலாற்றின் வெளிச்சத்தை பரப்பிய விளக்குத்துாண், திருமலை நாயக்கர் மன்னரின் படை யானைகளை சங்கிலியில் கட்டிப்போடுவதற்காக பத்து துாண்கள் கட்டப்பட்டன. அந்த துாண்கள் இன்றும் பிரமிப்பை தரும். இந்த பகுதி நாயக்கரின் தம்பி வாழ்ந்த ரங்கவிலாசமாக சொல்லப்படுகிறது.மகாலின் கட்டுமான பணிக்காக மண் தோண்டப்பட்ட இடமே தெப்பக்குளமாயிற்று. மாரியம்மன் தெப்பக்குளம் என்றழைக்கப்படுகிறது. இக்குளம் 1645ல் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. இங்கு கிடைத்த பிள்ளையார் தான் 'முக்குருணி' பிள்ளையாராக மீனாட்சி அம்மன் கோயிலில் இருக்கிறார்.

முக்தீஸ்வரர் கோயில்தெப்பக்குளத்தின் மேற்கு கரையில் இக்கோயில் உள்ளது. சிவலிங்கத்தின் மீது சூரியன் தாழ் பணிந்து வணங்கி எழும் அற்புத காட்சி ஆண்டிற்கு இருமுறை நடக்கிறது. சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக மூன்று துவாரங்கள் வழியாக இறைவனின் ஆபரணமாக எழுவது வேறு எங்கும் காணக்கிடைக்காத பேரதிசயம்.மீனாட்சி அம்மன் சன்னதி வாசலுக்கு எதிரே நகரா மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபம் முழுவதும் கருங்கல்லால் ஆனது. ராணி மங்கம்மா காலத்தில் கட்டப்பட்டது. இங்கிருந்து முரசு கொட்டி கோயில் வழிபாட்டு காலங்களை மக்களுக்கு அறிவித்த காலம் இருந்தது.திருமலை நாயக்கர் மன்னர் ஆட்சியில் கட்டப்பட்ட புதிய மண்டபம்இன்றும் நமக்கு புதுமண்டபம். 333 அடி நீளம். 105 அடி அகலம். 25 அடி உயரம் கொண்டது. 124 துாண்கள். ஒவ்வொன்றிலும் சிற்பங்கள். குளிர்ச்சியான சூழலுக்காக சுற்றிலும் 3 அடி பள்ளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு, மன்னர் காலத்தில் வந்த வசந்த விழா இங்கு நடக்கும்.

மீனாட்சி அம்மன் கோயில்மதுரையின் உயிரோட்டம் இக்கோயில். 4 பெரிய கோபுரங்கள், 10 சிறிய கோபுரங்கள், 83,000 சுதைகள், சிற்பங்கள். ஆயிரங்கால் மண்டபம் உட்பட 18 மண்டபங்கள். பொற்றாமரைக்குளம், 1330 திருக்குறள்கள், 64 திருவிளையாடல் புராணங்கள் என கண்ணார காணுங்கள்... கண்ணார இறைவனை யாசியுங்கள்.மதுரையை ஆன்மிகத்திலும், கலைகளிலும் நிர்மாணித்த தீர்க்கதரிசி திருமலை நாயக்கர் ஆட்சி செய்த சிம்மாசனம் ஜொலிக்கும் மகால் பரந்துவிரிந்திருக்கும்; பிரமாண்டத்தின் மிச்சம். எங்கிருந்து பார்த்தாலும் ஒரே நேர்கோட்டில் வரிசையாக 248 துாண்கள். ஒவ்வொரு துாணையும் மூன்று பேர் சேர்ந்து கட்டிப்பிடிக்க வேண்டும். சொக்க விலாசமும் பரவசப்படுத்தும்.மதுரையை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...சுற்றி சுற்றி பார்க்கலாம். தினமும் சுற்றுலாவை அனுபவிக்கலாம்.- ஆர்.கணேசன், எழுத்தாளர்மதுரை98946 87796

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement