Advertisement

உறுதிப்பாறைகளே உள்ளம் உடையலாமா?

வெட்ட வெட்ட வளரும் நகத்தைப் போல் விலக்க விலக்க நம்முள் வளர்ந்து நம் நிம்மதியைக் கெடுத்துக்கொண்டிருக்கிறது கவலை எனும் மாயவலை. சிந்தித்துப் பாருங்கள்! எதற்கும் நீங்ள் மட்டுமே எல்லாவற்றிற்கும் காரணம் இல்லை என்று தெளிவாகத் தெரியும். கவலையற்ற மனிதர்கள் இந்த உலகில் உண்டா? எதையும் அதனதன் இயல்பில் ஏற்றுக்கொள்ளும் மனமிருந்தால் கவலைகள் ஏதுமில்லை.பொங்கிப் பிரவாகமாய் ஓடிவரும் நதி ஒருநாள் பின்நோக்கிப் பயணிப்பதில்லை. ஆனால் நாம் மட்டும்தான் கடந்த வினாடிகளில் நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து சோகத்தில் நம் நிகழ்கால நிமிடங்களையும் நினைத்துப் பார்த்து மனம் வெதும்பிக் கொண்டிருக்கிறோம். நேற்றுவரை காலை ஒன்பதுமணிக்கு வீட்டைவிட்டு அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்த அந்த மனிதருக்கு பணிநிறைவு வயது வந்துவிட்டது என்று வேகஓட்டத்தை நிறுத்தும்போது ஒருவாரம் என்ன செய்வதெனத் தெரியாமல் தவிக்கிறது. தனிமையும் வெறுமையும் வாட்டுகிறது, எல்லாச் சோகங்களையும் துார எறிந்துவிட்டு சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியே வந்தால் தெருமுனையிலுள்ள நுாலகத்தில் அழகான நட்பு வட்டம் துளிர்க்கிறது. எல்லாப் பொறுப்புகளையும் நிறைவாக முடித்துவிட்டோம், இனி நமக்கு பிடித்தவற்றை சுதந்திரமாகசெய்வதற்கான சுகநேரம் என்று மனம் நினைக்கும்போது சோகம் சுகமாகிறது. எல்லாம் எடுத்துக்கொள்ளும் விதத்தில்தான் உள்ளது.புரிந்துகொள்வோம் பிறப்பு என்ற பக்கத்திற்கும் இறப்பு என்ற பக்கத்திற்கும் இடையே மகிழ்ச்சி என்ற பக்கத்தை எழுத வந்துள்ளோம் என்று நினைத்தால் எப்போதும் எதிலும் துன்பம் வராது. துாரத்து வானவில்லைக் கண்டுகண்டு ஏங்கும் மனிதர்கள், பக்கத்தில் பூத்திருக்கும்தொட்டிச்செடிகளை ரசிப்பதில்லை. நேற்று நடந்த துயரம் வாட்டுகிறது, அல்லது நாளை இது நடந்து விடுமோ என்று துடியாய் மனம் துடிக்கிறது.எல்லாவற்றிற்கும் நுால்பிடித்து எல்லோரையும் குற்றம் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் எப்போதும் நிம்மதியிழக்கிறார்கள். சல்லடைகளால் சமுத்திரத்தைச் சலித்துவிடமுடியுமா? நம்பிக்கையே நம்மை வழிகாட்டுகிறது. இல்லாமைகளாலும் இயலாமைகளாலும் நாம் தினமும் கலங்கிக் கொண்டிருக்கிறோமே என்ன நியாயம்? நாம் உண்மையாக வாழ்ந்த நாட்கள் என்பவை வாழ்நாளில் மகிழ்ச்சியாக இருந்த நாட்கள்தான்.அடுத்தடுத்து அடுக்கிவரும் சோதனைகள் நம்மைப் பக்குவப்படுத்துகின்றன. சுடாத செங்கலால் கட்டடம் கட்ட முடியாது. சூளையில் நன்றாகச் சுடப்பட்ட கல்தான் உறுதியாகக் காலம் கடந்த கட்டடமாக உருப்பெறுகிறது. உளியால் நன்றாகச் செதுக்கப்பட்ட கல்லே அழகான சிற்பமாகிறது. வாழ்வின் மகத்துவம் புரியும்போது வாழ்க்கை நம்மை விட்டு அப்பால் நகர்கிறது.புன்னகையோடு எதிர்கொள்வோம்புன்னகை பூத்த முகம் பொன்னகை அணிந்த கழுத்தைவிட மதிப்பானது, அழகானது. எப்போதும் புன்னகையோடு இருப்பவர்கள் எல்லாத் துன்பங்களையும் வலுவோடு எதிர்கொள்கிறார்கள். வாழ்வின் நாட்களில் துன்பம் காகமாய் வந்தமரும்போது, அதை எப்படி விரட்டுவது என்பதைவிட அதை மதிநுட்பத்தோடு எவ்வாறு எதிர்கொள்வது என்று அறிந்தவர்களை துன்பம் ஏதும் செய்வதில்லை.தங்கத்துடன் ஒன்றாகக் கலந்த செம்பை, நெருப்பு எவ்வாறு எரித்து விலக்குமோ அதைப் போல் நம் பொறுமையும் எல்லாவற்றையும் விலகியிருந்து பார்க்கும் பெருந்தன்மையும் இருந்தால் வாழ்வு இனிக்கும். உணர்வுப்பூர்வமாக எதையும் எடுத்துக் கொள்ளாமல் வெகுஇயல்பாக வாழ்ந்துபாருங்கள், வாழ்வு உண்மையில் இனிக்கும்.நாம் விதைத்ததைத் தான் நாம் அறுவடை செய்வோம். நல்லதையே விதைப்பவருக்கு நல்லதையே இறைவன் அருளுகிறான். சொற்களாலும் செயல்களாலும் மனிதர்கள் தங்களை இப்பூமியில் விதைத்துக் கொள்கிறார்கள்.அவரவர் விதைத்தவையே அவரவருக்குக் கிடைக்கிறது.வாழ நினைத்தால் வாழலாம்கண்ணதாசன் வாழ்வில் எவ்வளவு துன்பமும் துயரமும் பெற்றிருந்தால் இப்படி உறுதியோடு எழுதியிருப்பார்? “பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும், பார்த்து நடந்தால் பயணம் தொடரும், பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்,கதவு திறந்தால் காட்சி கிடைக்கும், காட்சி கிடைத்தால் கவலை தீரும், கவலை தீர்ந்தால் வாழலாம்” என்று வாழ நினைத்தால் வாழலாம் என்று உறுதி தருகிறார். “நாளைப் பொழுதை இறைவனுக்களித்து, நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு” என்று அதனால்தான் கவியரசரால் சொல்ல முடிந்தது.“உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு” என்பது எத்தனை இயல்பான உண்மை!நல்ல நண்பர்கள் உங்கள் வாழ்வின் உண்மையான சொத்து என்று மறவாதீர்கள். தினமும் ஒருமணிநேரமாவது காலாற நடந்தபடி நண்பர்களோடு கலை, இலக்கியம், நாட்டுநடப்பு, என்று எதையாவது பேசுங்கள்,நிறைய கேளுங்கள். உரையாடலில் மனம் நிறைவடைகிறது.மனம் இன்புறுகிறது. அவர்கள் சொல்லும் மனிதர்கள் படும்பாடுகளுக்கு முன் நம் பாடு ஒன்றுமே இல்லை என்று எண்ணத் தோன்றும்.எப்போது பார்த்தாலும் மற்றவர்களின் குறைகளையே கூறிக்கொண்டிருப்போர் அருகில் யாரும் இருக்கமாட்டார்கள். நமக்கு எப்படி மற்றவர்களிடமிருந்து மரியாதை கிடைக்க வேண்டும் என நினைக்கிறோமோ அதே மரியாதையை அவர்களுக்கு வழங்கும்போது அவர்கள் நம்மை வாழ்த்துவார்கள், அப்போது நம் மனம் மகிழ்ச்சியில் திளைக்கும்.அன்பு செலுத்துங்கள்எந்த உயிரையும் துன்புறுத்தாமல்தினமும் ஓர் உயிருக்காவது நன்மை செய்வேன் என்று உறுதிபூணுங்கள், பறவைகளுக்கு வைக்கும் தண்ணீர்,முகவரி தெரியாமல் நின்று கொண்டிருப்பவருக்கு வழிசொல்வது, எதையாவது இழந்தவர்களுக்கு நாலுவார்த்தை ஆறுதல் சொல்வது, உயிருக்குப் போராடுவோருக்காக ரத்ததானம் செய்வது, மாதம் ஒருமுறை ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் செல்வது, அவர்களோடு ஆதரவாகப்பேசுவது. பிறந்தநாள், திருமண நாள் ஆகியவற்றை அவர்களோடு கொண்டாடுவது அவர்களுக்கும் நமக்கும் நிறைவைத் தரும்.எழுத எழுதத் தீர்ந்துபோக நம் வாழ்கையொன்றும் பால்பாயிண்ட் பேனா அன்று! அது ஆண்டாண்டு காலமாய் நிலைத்து நிற்கும் கல்வெட்டு! ஈரமில்லா இலைகள் எப்படி மரம்விட்டு உதிருமோ அதைப்போல ஈரமில்லா நெஞ்சம் மகிழ்ச்சியின்றி உதிரத்தான் செய்யும். வாழ்வில் நம்மைக் கவிழும் தோல்விகளுக்கெல்லாம் துவளத் தொடங்கினால் வெற்றியின் மீதெப்படி நாம் விருப்பம் செலுத்த முடியும்?எத்தனை முறை உடைந்தாலும் அடுத்த குமிழியாய் உருவாகும் சோப்புக் குமிழியைப் போல் உடைந்தாலும் அடுத்த வினாடியே மகிழ்வாக மறுவுருவெடுப்போம். நாமே ஒற்றி எடுப்போம் பொங்கிவழியும் நம் கண்ணீர்த் துளிகளை. விழுந்த உடன் நொறுங்குவதற்கு நாமொன்றும் கண்ணாடிகள் அல்ல! உளிபட்டாலும் சிறப்பான சிற்பமாய் மிளிரும் உறுதிப் பாறைகள் நாமென்று உணர்வோம்.--முனைவர்சௌந்தர மகாதேவன்தமிழ்த்துறைத் தலைவர்சதக்கத்துல்லாஹ் அப்பாகல்லுாரி, திருநெல்வேலி99521 40275

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement