Advertisement

நாடு போற்றும் நாட்டு நலப்பணித் திட்டம்!

மத்திய மாநில அரசுகள் நிதிஉதவியுடன் செயல்படுத்தப்படும் நாட்டு நலப் பணித் திட்டம், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும் வாழ்வியல் திட்டம் என்றால் மிகையாகாது.ஆசிரியர், பாடப் புத்தகங்கள், கரும்பலகை, தேர்வு, வகுப்பறை இப்படித்தான் மாணவர்களின் கல்விப் பயணம் பயணிக்கிறது. அதையும் தாண்டி களத்தில் நின்று சமூகத்தை உற்று நோக்கும் யதார்த்த வாழ்வியலை இத்திட்டம் முன்வைக்கிறது.'தனக்காக இல்லாமல் பிறருக்காக முடிந்ததை செய்ய வேண்டும்' என்ற கருத்தாக்கத்தை இத்திட்டம் முன்மொழிகிறது. 1969 செப்., 24 ல் துவங்கப்பட்டது.நான் அல்ல நீ, எனக்காக அல்ல உனக்காக எனும் பொதுநலன் சார்ந்த தன்னலமற்ற சேவையே இத்திட்டத்தின் மையப்புள்ளி. அடிப்படை வாழ்வியலுக்காக அன்றாடம் போராடும் எத்தனையோ முகம் தெரியாத மனிதர்களை உள்ளடக்கிய இச்சமூகத்தை இனம் காட்டி, அவர்கள் இன்னல்களை தீர்க்க வழியமைத்துக்கொடுக்கும் அன்பும் பாலமாக இத்திட்டம் தன்னை அடையாளப்படுத்தி நிற்கிறது.ரோடு அமைத்தல், குளங்களை துார்வாருதல், கல்லாதவர்களுக்கு கற்றுக்கொடுத்தல், மரம் நடுதல், ஊனமுற்றோருக்கு உதவுதல், சுற்றுப்புறத்தை துாய்மையாக்குதல், கிராமங்களை தத்தெடுத்தல், மருத்துவ உதவி செய்து கொடுத்தல், முதியோருக்கு உதவிடுதல், கோயில்களை சுத்தப்படுத்துதல், கலை நிகழ்ச்சி நடத்துதல் போன்ற பொதுநலன் சார்ந்த செயல்பாடுகளை இத்திட்டம் உள்ளடக்கியது.பொதுநலன் சார்ந்த பண்புகளை இளம் வயதில் மாணவர்களின் மனதில் பதியம் போட்டு நீர் ஊற்றி வளர்த்து அவன் கல்வி நிலையத்தை விட்டு வெளியே செல்லும்போது சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு ஆளுமையாக மாற்றம் செய்யும் உன்னத பணியை இத்திட்டம் செய்கிறது.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு பெறாத சமூகம் முன்னேற்றத்தின் முதல் படியை கூட தொட்டுப்பார்க்க இயலாது. அதனால் தான் சமூக ஆர்வலர்களும், நாட்டுப் நலப்பணித் திட்ட தன்னார்வலர்களும் விழிப்புணர்வு பிரசாரத்தை கல்வி நிலையம் தொடங்கி கடை வீதி வரைக்கும் பரப்புரை செய்கின்றனர். தான் கண்டது, கேட்டது, வகுப்பறையில் படித்தது போன்றவற்றின் கூட்டுக் கலவையை இச்சமூகத்திற்கு அர்ப்பணிக்கும் தன்னார்வத் தொண்டர்களின் பணியை பாராட்டியே ஆக வேண்டும். தனிமனித ஒழுக்கம் சிதைவுற்று போனதால் சமூகத்தின் வாழ்வியலும் திசைமாறிப் போனது.போதை, கொலை, கொள்ளை, பாலியல் வன்மம் இன்நான்கும் இன்றைய சூழலில் சமூகத்தை அச்சுறுத்தும் முக்கிய காரணிகள். இது குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மூலம் பரப்பப்படுகிறது.எய்ட்ஸ் இல்லாச் சமூகம், போக்குவரத்து விதிகள், தலைக்கவசம் அணிதல், பெண் கல்வியின் முக்கியத்துவம், பிளாஸ்டிக் ஒழிப்பு, கழிப்பறை பயன்படுத்துதல், சட்ட விதிகள், சுகாதாரம் போன்றவை குறித்து விரிவான அளவில் இத்திட்டம் மூலம் விழிப்புணர்வு செய்யப்படுகிறது.இதன் மூலம் தன்னார்வ தொண்டர்களும் விழிப்புணர்வு அடைகின்றனர். அவர்கள் சார்ந்திருக்கும் சமூகமும் விழிப்புணர்வு கொள்கிறது. கிராமம், நகரம், ஏழை, வசதி படைத்தவர் போன்ற பல்வேறு நிலைகளில் இருந்து வந்த மாணவர்களின் குழுவே நாட்டு நலப்பணித் திட்டத்தில் பயணிக்கிறது. இதன்மூலம் நடத்தப்படும் ஆண்டு சிறப்பு முகாம்கள் ஏழு அல்லது 10 நாட்கள் நடத்தப்படும்.

சூழலுக்கு ஏற்ப வாழ்தல்

இம்முகாம்கள் கிராமங்களை மையப்படுத்தியே நடைபெறுவதால் அடிப்படை வசதிகள் கூட இல்லாத இடத்தில் அனைத்து மாணவர்களும் வாழப்பழகிக் கொள்கிறார்கள். புதிய இடம், அறிமுகம் இல்லாத மனிதர்கள், அனுபவிக்காத சூழல், சாப்பிட்டுப் பழகாத உணவு வகைகள், இப்படி தன் வசதிக்கு ஏற்ப இல்லாவிட்டாலும் அந்தச் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் மந்திரத்தை இத்திட்டம் கற்றுக்கொடுக்கிறது. வசதியும், வறுமையும், கிராமமும், நகரமும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் சங்கமமே சிறப்பு முகாம்கள்.அடுக்குமாடியில் ஏசி அறையில் வசித்துப் பழகிய மாணவன் கிராமத்தில் கிடைக்கும் இடத்தில் துாங்கி எழுகிறான். தனக்கு படித்த உணவுகளை உண்டு பழகியவன் கிடைக்கும் உணவை உண்ணப் பழகிக்கொள்கிறான். உடல் உழைப்பே இல்லாத ஒரு மாணவன் உழைப்பதற்கு தன்னை தயார்படுத்திக்கொள்கிறான். இப்படியாக சூழலுக்கு ஏற்ப வாழும் வாழ்க்கையை ஒவ்வொரு மாணவனும் கற்றுக்கொள்கிறான்.

சமத்துவம் போற்றுதல்
ஜாதி மதமற்ற சமூகத்தை நாட்டு நலப் பணித்திட்டம் அடையாளப்படுத்தி நிற்கிறது. சிறப்பு முகாமிற்கும், மாதாந்திர பணிகளுக்கும் செல்லும் ஊர்ப்புற பகுதிகள் என்ன ஜாதி, மதம் என்று யாரும் பார்ப்பது கிடையாது. அனைத்து மதத்தினரும் எல்லாக் கோயில் வளாகங்களையும் சுத்தம் செய்கின்றனர். எல்லோர்களிடமும் உறவு கொண்டாடுகின்றனர்.பதவி, பணம், எதிர்பார்ப்பு என ஏதும் இல்லாமல் சேவை ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் இத்திட்டத்தினை இறைவனுக்கு செய்யும் தொண்டாகவே கருதலாம். இரக்கக் குணமும், தர்ம சிந்தனையும், சேவை மனப்பான்மையும், தன்னார்வத் தொண்டர்களின் ஆழ்மனதில் அடிநாதமாகும். உயிரைக் காப்பாற்றும் உதிரத்தை தானமாக கொடுக்கும் உயர்ந்த பண்பை உள்ளத்தில் விதைத்து செல்கிறது இத்திட்டம்.'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' என்றான் வள்ளுவன். அறநெறி தவறாது, தன்னலம் கருதாது வாழ்பவர்கள் அனைவரும் தெய்வத்திற்கு சமமானவர்கள் தான். ஏழைகளுக்கு உதவி செய்தல், ஆதரவற்றோருக்கு உணவளித்தல், எழுதப் படிக்க தெரியாதவர்களுக்கு எழுத்தறிவித்தல் இதுபோன்ற பொதுநலச் சிந்தனைகளை இளம் வயது மாணாக்கர்களுக்கு இத்திட்டம் போதிக்கிறது. எனவே பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நாட்டுநலப்பணித்திட்டத்தில் சேர்ந்து சமூகப்பணியாற்ற வேண்டும்.இரக்கம், ஈகை, பொதுநலன், தர்ம சிந்தனை, ஜாதிமதமற்ற சமத்துவம், சந்தோஷ வாழ்விற்கான மனப்பக்குவம் இப்படிப்பட்ட உயர்ந்த சிந்தனைகளையும், நோக்கங்களையும் கற்றுக்கொடுக்கும் நாட்டு நலப் பணித் திட்டத்தை நாளும் போற்றுவோம், நாடும் போற்றுகிறது.- மு.ஜெயமணிஉதவி பேராசிரியைராமசாமி தமிழ்க் கல்லுாரிகாரைக்குடி. 84899 85231

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement