Advertisement

வழிநடத்தும் வல்லமை வேண்டும்

சித்திரு, தனித்திரு, விழித்திரு” என்பார் வள்ளலார். அறிவுப்பசி கொண்டிருத்தல், எதையும் தனித்துவமாகச் செய்தல்,எப்போதும் விழிப்போடிருத்தல் இதுவெல்லாம் ஒரு தலைவனுக்குஉரிய தகுதிகள். ஆயிரம் பேரை வழிநடத்துகிற ஒரு நிர்வாகத் தலைவரும் அவர்களைப்போல் ஒரு மனிதர்தான். ஆனால் அவர்மட்டும் எப்படி முதன்மை வகிக்கிறார், முக்கியத்துவம் பெறுகிறார்? சொல்லப்போனால் அவரைவிட அனுபவம் படைத்தவர்களும், அதிகம் படித்தவர்களும்கூட அவர்களில் நிறையப்பேர் இருப்பார்கள். இருந்தும், அவரிடம் தலைமைப் பதவியை ஏன் வழங்கியிருக்கிறார்கள்? வெறும் படிப்பு போதாது. அனுபவம் வேண்டும். நாலு எம்.ஏ., படித்த ஒருவர் கிராமத்துக்கு வந்தார். அவரது மாமனார் செக்கு வைத்து எண்ணெய் ஆட்டுகிறவர். பட்டதாரி வந்து பார்த்தபோது, மாடுகள் ஆள் இன்றி செக்கில் சுற்றிக் கொண்டுஇருந்தன. வீட்டுக்குள் போன முதல் வேலையாக யாருமில்லாமல் மாடுகள் எப்படி சுற்றிவருகின்றன என்று கேட்டார். பழக்கந்தான் என்றார் மாமனார். சுத்தி வராம நின்னுகிட்டா எப்படி கண்டுபுடிப்பீங்க என்று கேட்டார் பட்டதாரி. மாடுகள் கழுத்தில் மணிகளைக் கட்டியிருக்கிறேன். அந்த சப்தத்தில் சுற்றுவதை தெரிந்துகொள்வேன் என்றார் மாமனார். பட்டதாரி விடவில்லை. மாடுகள் சுற்றுவதை நிறுத்திவிட்டு நின்றபடியே கழுத்தை ஆட்டினால் நீங்கள் ஏமாந்துவிடுவீர்களே” என்றார் பட்டதாரி. இப்படியெல்லாம் குதர்க்கமா யோசிக்கும் என்பதால்தான் மாடுகளை எம்.ஏ., படிக்க வைக்கலே மாப்பிளே! என்றார் மாமனார்.

சிறந்த தலைவர்கள்சிறந்த தலைவர்கள் பல புதிய தலைவர்களை உருவாக்கும் பணியைச் செய்கிறார்கள். அவர்கள் அடுத்தவர் உழைப்பில் கிடைக்கும் வெற்றிக்கு உரிமை கொண்டாடுவதில்லை. அதன்மூலம் கிடைக்கும் புகழைத் தம்முடையதாக்கிக் கொள்வதில்லை. தலைமைக்கான தகுதிகளும், பண்புகளும் என்னஎன்றால் தன்னம்பிக்கை, துணிவு, தவறுகளுக்குப் பொறுப்பேற்றல்,சுயக்கட்டுப்பாடு, திறமைகளைக் கண்டறிதல் ஊக்குவித்தல், வேலை ஒப்படைப்பு செய்தல், அதிகார ஒப்படைப்பு செய்தல் என சொல்லிக்கொண்டே போகலாம்.'நீங்கள் திறமைமிக்க தலைவர் என்றால்…'திறமை உள்ளவர்களைதயங்காமல் பாராட்டுவீர்கள்.நேர்வழியில் பயணம் செய்வீர்கள்.குறுக்கு வழி எளிது. நேர்வழி சிரமம் என்பது உண்மைதான். ஆனால், குறுக்கு வழி எப்போதும் பாதுகாப்பற்றது, நேர்வழியே பாதுகாப்பு என்பதை நீங்கள் அறிவீர்கள். எப்போதும் உற்சாகமாய் இருப்பீர்கள். நாம் உற்சாகமாக இருந்தால்தான் மற்றவர்களையும் உற்சாகப்படுத்த முடியும்.

தலைமைப்பண்புஉங்களுடைய பலத்தைப் போலவே பலவீனத்தையும் நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள்.இன்றே முடிக்கக்கூடிய வேலையை நாளை முடிப்போம் என்று தள்ளிப்போட மாட்டீர்கள். தொழில் தொடர்பான புதிய சிந்தனைகளை, உத்திகளை,அணுகுமுறைகளை மேற்கொள்வீர்கள். நிறுவன வளர்ச்சிக்கு வகைசெய்கிற எதையும் வரவேற்பீர்கள். குறைவாகப் பேசி, மிகுதியாய் கேட்பீர்கள்.உங்கள் நிலையில் உயர்ந்திட...தினமும் புதிதாய் ஒன்றைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள்.உங்களிடம் இல்லாத திறமைகளைபெறுங்கள். இருக்கிற திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்ளுங்கள். தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் ஒரு தலைவரிடம் இருக்கக்கூடாது.நடை, உடை, பாவனைகளில் மட்டுமின்றி உங்கள் செயல்களிலும் உங்களுடைய தனித்தன்மையை வெளிப்படுத்துங்கள். ஒரு தீவில் ஒரு பழக்கம் இருந்தது.யார் வேண்டுமானாலும் அரசராகலாம். ஐந்து ஆண்டுகள்தான் ஆட்சியில் இருக்கலாம். அதன் பிறகு அருகில் உள்ள ஒரு கொடிய தீவில் கொண்டு போய் வீசி எறிந்து விடுவார்கள். கொடிய மிருகங்களும் விஷ வண்டுகளும் உள்ள அந்தத் தீவில் மரணம்தான் மிஞ்சும். இதற்குப் பயந்து பல பேர் ஒதுங்கி விடுவார்கள். சில பேர் முன்வந்து அரசராய் அனுபவித்துவிட்டு அழிந்து போவார்கள். ஒருவன் அரசனாய் வந்தான். ஐந்தாண்டுகள் முடிந்ததும் அவனை அடுத்த தீவுக்கு அழைத்துப் போனார்கள். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அந்த பயங்கரமான தீவின் கரையில் பல மனிதர்கள் கையில் மாலைகளோடு நின்று வரவேற்றார்கள். நடந்தது இதுதான். அவன் தனக்குக் கிடைத்த தீவை ஆண்டுகொண்டிருந்தபோதே சில மனிதர்களுக்குப் பயிற்சி அளித்தான். சில கருவிகளை உருவாக்கிக் கொடுத்தான். படகின் மூலம் அந்த கொடூரத் தீவுக்கு அனுப்பி வைத்தான். அவர்கள் சென்று அங்குள்ள மிருகங்களையும் விஷ வண்டுகளையும்அழித்து வாழ்வுக்குரிய இடமாக மாற்றினார்கள். இப்போது அந்தத் தீவுக்கு அவன் ராஜா ஆனான். இதை அறிந்த பழைய தீவுக்காரர்கள் தங்கள் தீவுக்கும் அரசனாக்கிக் கொண்டார்கள். இதுதான் தனித்துவமான தலைமைப்பண்பு.

குறிக்கோள்உங்கள் குறிக்கோளை பெரிதாக்கிக் கொள்ளுங்கள்.சின்னச்சின்ன வெற்றிகளுடன் நின்றுவிடாதீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் நிதானத்தை இழந்துவிடக் கூடாது. எது நேர்ந்தாலும் நிலைகுலையக் கூடாது.பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு காணுங்கள். இன்று சிறியதாய் தெரிகிற பிரச்னை நாளை பெரியதாகிவிடக்கூடும். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எதையும் சிந்திக்கவோ, சொல்லவோ, செய்யவோ கூடாது. மனதைச் சம நிலையில் வைத்திருங்கள்.நீங்கள் எடுக்கிற முடிவு ஆற்றல்மிக்கதாய் இருந்தால் வெற்றி உங்களுடையது.போதிய ஆர்வம், சரியான அணுகுமுறையும் இருந்துவிட்டால் அந்த வெற்றியைத் துரிதமாய் பெற முடியும்.ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவரின் வேலை தம்முடைய பாதையில் மற்றவர்களை அழைத்துச் செல்வதல்ல.நிறுவனத்தின் வளர்ச்சியில் எல்லாரையும் ஈடுபடுத்துகிறவிதமாய் ஒரு பாதையை உருவாக்குவதுதான். உங்கள் சிறப்பறிவை, செய்திறனை முழு அளவில் பயன்படுத்துங்கள். நீங்கள் மனிதர்களை வார்த்தையால்வழி நடத்தாதீர்கள். அவர்கள் பார்த்துக் கற்றுக்கொள்கிற மாதிரி உங்கள் வாழ்க்கை இருக்கட்டும்.உங்களை, உங்கள் வேலையை, உங்கள் பணியாளரை நன்கு தெரிந்து வைத்திருங்கள். சந்தர்ப்பங்களைக் கூர்ந்து கவனிப்பவராய், நிலைமைகளை ஆராய்கிறவராயிருங்கள். சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தவும், நிலைமைகளைச் சாதகமாக்கிக் கொள்ளவும் தவறாதீர்கள். பிறகென்ன, வெற்றி உங்களுக்குத்தான்.--முனைவர் இளசை சுந்தரம்எழுத்தாளர், மதுரை98430 62817

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement