Advertisement

'ரொம்ப நாசுக்கான கலெக்டர்...!'

தமிழக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், கல்லுாரி மாணவர்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம், வேலுார் முத்துரங்கம் அரசு கலைக் கல்லுாரியில் நடந்தது. அதை துவக்கி வைத்த, கலெக்டர் ராமன், 'அகில இந்திய அளவில், உயர் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை, 22 சதவீதம் மட்டுமே; இது, தமிழகத்தில், 44 சதவீதமாக உள்ளது. இவ்வளவு பேருக்கும், அரசு வேலை வழங்குவது, சாத்தியமில்லை. படித்து முடித்த பிறகு, என்ன தொழில் செய்யலாம் என்ற நோக்கம், படிக்கும்போதே மாணவர்களுக்கு ஏற்பட வேண்டும். அதற்கான தேடலும், அதிகளவில் இருந்தால் தான், சிறந்த தொழில் முனைவோராக உருவாகலாம்' என்றார். மூத்த நிருபர் ஒருவர், 'உயர் கல்வி படித்தாலும், அரசு வேலை கிடைக்காது என்பதை, எவ்வளவு நாசுக்கா, கலெக்டர் சொல்றாரு பாருங்க...' எனக் கூற, மற்றவர்கள், அதை ஆமோதித்து தலையசைத்தனர்.
மாநில தலைவர் பதவியை பிடிக்க, புது, 'டெக்னிக்!'
காங்கிரஸ் நிர்வாகி, பழனியப்பன் என்பவரது இல்லத் திருமண விழா, சிவகங்கை மாவட்டம், கீழச்சீவல்பட்டியில் நடந்தது. காங்., முன்னாள் மாநில தலைவர், இளங்கோவன், 'காங்கிரசில் கஷ்டமான வேலையே, கட்சியினரை ஒன்று சேர்ப்பது தான். முன்பெல்லாம், மருமகளை வேலைக்காரியாக, மாமியார்கள் நினைத்தனர். இன்று, மருமகளிடம், எந்த மாமியாரும் வாலாட்ட முடியாது. ஆணுக்கு நிகராக, ஏன், அதை விட மேலாகவே, பெண்கள் சாதிக்கின்றனர். அதற்கு உதாரணமாக, முன்னாள் பிரதமர், இந்திராவை கூறலாம்' என்றார்.முன்னாள் மத்திய அமைச்சர், சுதர்சன நாச்சியப்பன், 'இளங்கோவன் பேசினாலே, சலசலப்பு ஏற்படும். கட்சிக்கு, அவ்வப்போது புத்துணர்வு ஊட்டும், சித்தர் அவர்' என்றார்.காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர், 'இரண்டு பேருல ஒருவருக்கு, மாநில தலைவர் பதவியை பிடிக்க ஆசை. அதனால் தான், ஒருவருக்கொருவர் பேச்சுல சளைக்கிறதே இல்லே...' எனக் கூற, மற்றவர்கள், அதை ஆமோதித்து தலையசைத்தனர்.
'மாலுக்கு போறது  அமைச்சருக்கு தெரியலை!'
திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் சார்பில், சென்னை, தி.நகரில், ரேஷன் கடை அருகிலேயே, சிறு பல்பொருள் அங்காடி துவக்க விழா நடந்தது. அதை துவக்கி வைத்த, கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு, 'கடலை எண்ணெய், நல்லெண்ணெயை, மற்ற கடைகளில் வாங்குவதை விட, எங்கள் கூட்டுறவு கடைகளில் வாங்கலாம்; மற்ற பிராண்டுகளை விட, தரமானது. பழங்காலத்தில் இருந்தது போல், செக்கு எண்ணெய் தான், துாய்மையான எண்ணெயாக, இங்கு விற்கப்படுகிறது; மற்ற பொருட்களும், குறைந்த விலையில், தரமாக விற்கப்படுகின்றன' என்றார். வாடிக்கையாளர் ஒருவர், 'அமைச்சர் சொல்றது போல், எல்லா கூட்டுறவு கடையிலும், தரமான பொருட்களை, குறைந்த விலைக்கு விற்றால், நாங்கள் ஏன், மாலில் போய் பொருட்களை வாங்க போறோம்...' என, முணுமுணுக்க, அருகில் இருந்தோர், அதை ஆமோதிப்பது போல் தலை அசைத்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement