Advertisement

டீ கடை பெஞ்ச்

கால்நடை துறை மருந்து கொள்முதலில் முறைகேடு?

''முதல்ல தப்பிச்சவங்களை, இந்த முறை விடக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''என்ன விவகாரம் பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''மின் வாரியத்துல, ஒரே இடத்துல, பல வருஷமா இருந்த செயற்பொறியாளர்கள், 158 பேரை, சமீபத்துல இடம் மாத்துனாவ... இவங்கள்ல சிலர், அரசியல் சிபாரிசுல, இடமாறுதலை ரத்து பண்ணிட்டு, பழைய இடத்துலயே வேலை பார்த்துட்டு இருக்காவ வே...
''அடுத்த கட்டமா, உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் இடமாறுதல் பட்டியலை அதிகாரிகள் தயாரிச்சிட்டு இருக்காவ... இந்த மாறுதலோட, ஏற்கனவே சிபாரிசுல தப்புனவங்களையும் சேர்த்து மாத்த, மின்வாரிய உயர் அதிகாரிகள் திட்டம் போட்டிருக்காவ வே...''
என்றார் அண்ணாச்சி.
''முதல்வரின் உறவினர் தலைமையில தான், சோதனை நடந்திருக்கு பா...'' என, அடுத்த விஷயத்திற்கு தாவினார் அன்வர்பாய்.
''வருமான வரி சோதனையை சொல்றீரா ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''ஆமாம்... முதல்வர் வசம் இருக்குற நெடுஞ்சாலை துறையில, ஒப்பந்த பணிகளை எடுத்து செய்ற செய்யாதுரை வீடுகள், அலுவலகங்கள்ல, வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை
நடத்துனாங்களே பா...
''இதுல, 180 கோடி ரூபாய் ரொக்கம், 105 கிலோ தங்கம் சிக்கியிருக்கு... இந்த சோதனை, முதல்வருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கு பா...
''அதே நேரம், இந்த சோதனைக்கு, வருமான வரித் துறையில, முக்கிய அதிகாரியா இருக்குற முதல்வரின் உறவினர் தான் தலைமை தாங்கியிருக்கார்... இது தான், கோட்டை வட்டாரங்கள்ல இப்ப பரபரப்பா ஓடிட்டு இருக்கு பா...'' என்றார் அன்வர்பாய்.
''மருந்துகள் வாங்குனதுல, பெரிய குளறுபடியே நடந்திருக்குன்னு புலம்புறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''எங்க வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
''கால்நடை மருத்துவமனைகள், கிளை நிலையங்களுக்கு, நிறைய மருந்துகள் சப்ளை செய்றாங்க... இந்த மருந்துகள், சில நாட்கள்லயே கெட்டு போயிடுதுங்க...
''மருந்து பாட்டில்கள், 'சீல்' வச்சு இருந்தாலும், உள்ள, திரிஞ்ச பால் மாதிரி திரி திரியா இருக்கு... பாட்டில்கள்ல, இன்னும் பல வருஷங்களுக்கு பயன்படுத்தலாம்னு, காலாவதி தேதி போட்டிருக்காங்க...
''ஆனாலும், கெட்டு போன மருந்தை, கால்நடைகளுக்கு குடுத்து, உயிரிழப்பு ஆச்சுன்னா, பொதுமக்கள்ட்ட யார் தர்ம அடி வாங்குறது... அதுக்கு பயந்தே, பெரும்பாலான டாக்டர்கள் மருந்துகளை கீழே கெட்டிடுறாங்க...
''மருந்துகள் வாங்குனதுல, பெரிய அளவுல முறைகேடு நடந்திருக்குன்னு, கால்நடை டாக்டர்கள் தரப்புல புலம்புறாங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
அரட்டை முடிவுக்கு வர, பெரியவர்கள் கிளம்பினர்.

வருவாய் துறை அதிகாரிகளின் வசூல் வேட்டை!

''பெண் அதிகாரி மேல, ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகமும் ரொம்பவே நம்பிக்கையா இருக்காங்க...'' என, பெஞ்ச் தகவலை பேச ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''எந்தத் துறையில பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''சென்னையின் புதிய முதன்மை கல்வி அதிகாரி, திருவளர்ச்செல்வி ரொம்ப துடிப்பானவங்க... இவங்க, கோவை, கரூர், தஞ்சையில இருந்தப்ப, ரொம்பவே கண்டிப்பா இருந்திருக்காங்க...
''தஞ்சையில, ஒரு ஆசிரியரை போன்ல கண்டிச்ச விவகாரம், ஐகோர்ட் வரை போய், இவங்களுக்கு சிக்கலை ஏற்படுத்துச்சு... ஆனாலும், பெண் அதிகாரி அசராம, காஞ்சிபுரம், சென்னைன்னு முன்னேறி வந்துட்டாங்க...
''அரசு பள்ளிகள்ல, மாணவர் சேர்க்கை சரிவு, தேர்ச்சி சதவீதம் குறைவா இருக்குற சூழல்ல, இதை எல்லாம் சரி பண்ண, உரிய நடவடிக்கை எடுப்பாங்கன்னு, மாவட்ட கல்வி அதிகாரிகள் நம்பிக்கையா இருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''அறிவாலயத்துல, அதிரடி மாற்றங்கள் நடந்திருக்கு ஓய்...'' என, அடுத்த விஷயத்தில் தடம் பதித்தார் குப்பண்ணா.
''விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்துல, பல வருஷமா வேலை பார்க்கற சில நிர்வாகிகள் மேல, தலைமைக்கு புகார்கள் போயிருக்கு... இவாளை எல்லாம் ஸ்டாலின், கண்டிச்சு வச்சிருக்கார் ஓய்...
''அதோட, அலுவலகத்துக்கு, மாநில, மாவட்ட நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள், உளவுத்துறை போலீசார்னு, யார் யாரெல்லாம் வந்துட்டு போறான்னு கண்காணிக்க, கட்சி அலுவலகத்தை சுத்தியும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்திட்டா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''தொட்டதுக்கெல்லாம் பணம் வாங்குறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''டாக்டர்கள் தான், கையை புடிச்சு பார்த்து, பணம் வாங்குவாவன்னு கேள்விப்பட்டிருக்கேன்... நீரு, யாரை சொல்லுதீரு வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
''சென்னை பக்கத்துல இருக்குற, மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளை தான் சொல்றேன்... இவங்களிடம், பணம் குடுத்தா தான், எந்த வேலையும் நடக்கும் பா...
''தாசில்தார்ல இருந்து உதவியாளர் வரை, 'டிரான்ஸ்பர்' போடுறதுக்கு, 30ல இருந்து, 50 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் வாங்குறாங்க... குறிப்பா, ரெண்டு அதிகாரிகள் கூட்டணி, இந்த விஷயத்துல கறாரா இருக்காங்க பா...
''இதெல்லாம், மாவட்ட உயர் அதிகாரிக்கு தெரிஞ்சும், கண்டும், காணாம இருக்கார்...'' என்றார் அன்வர்பாய்.
''நேத்து, நுார் முகமது, முத்து ரெண்டு பேரும், ரொம்ப நேரமா உம்மட்ட பேசிட்டு இருந்தாவளே... பாக்கியை பைசல் பண்ணிட்டாவளா...'' என அண்ணாச்சி கேட்க, நாயர், 'ஆம்' என தலையசைத்தார். பெரியவர்கள் புறப்பட்டனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement