Advertisement

இது உங்கள் இடம்

வங்கிகளே... சாமானிய மக்களை புறம் தள்ளாதீர்!எஸ்.செந்தில்குமார், தேனியிலிருந்து எழுதுகிறார்: தனி நபர், தொழில், வீடு கட்ட, மானியத்துடன் கடன் கொடுக்க, வங்கிகளுக்கு அரசு உத்தரவிட்டாலும், அத்தகைய கடன் பெறுவதற்கான வழிமுறைகளை சரியாக சொல்வதில்லை. கடன் கேட்க செல்வோரிடம், வருமான வரி கட்டியதற்கான சான்று, நிலம் மற்றும் வீட்டுமனைகள் இருப்பதற்கான பத்திரங்களை, வங்கிகள் கேட்கின்றன.

சாமானிய மக்களுக்கு எந்த வகையிலும், கடன் கிடைக்கக் கூடாது என்பதில், வங்கி அலுவலர்கள் கவனமாக இருப்பர். மானியத்துடன் கூடிய, அரசு திட்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்துவதில், வங்கிகளுக்கு துளிக் கூட அக்கறை கிடையாது. விபரம் அறிந்து கேட்போரிடம், 'அரசு ஆணை இன்னும் வரவில்லை' என பதில் அளிப்பர்!

வங்கிகளில் கடன் கிடைக்காதோர், வீடு கட்ட, கந்துவட்டி கும்பலிடம் சிக்கி, வட்டியும், முதலும் கட்ட முடியாமல், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கின்றனர். சாமானியனுக்கு கடன் கொடுக்காத வங்கிகள், நிரவ் மோடி, மல்லையா போன்றோருக்கு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாயில் கடன் தந்தது. அவர்கள் கடனை திருப்பி செலுத்தாமல், நாட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். அவர்களை பிடிக்க முடியாமல், அரசு திணறுகிறது.

சாமானியனுக்கு, வங்கிகளில் தாராளமாக கடன் கிடைக்க, மத்திய - மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். அரசு திட்ட மானிய கடன்களை, வங்கி அறிவிப்பு பலகையில், தெளிவாக எழுதி வைக்க உத்தரவிட வேண்டும். மத்திய அரசு திட்டமான, 'பீமா ஆவாஸ் யோஜனா' போன்ற, வீட்டு கடன் குறித்து, குறைந்தபட்ச தகுதிகளை, மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இவற்றையெல்லாம், ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும் ஆய்வு செய்ய வேண்டும். சாமானிய மக்களுக்கு கடன் கிடைப்பதை உறுதி செய்து, அரசுக்கு, கலெக்டர்கள் தெரியப்படுத்த வேண்டும். கடன் தராத வங்கிகள் மீது, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைத் தான் சாமானியன் எதிர்பார்க்கிறான்!

---

'போர்வை'களின் சுயரூபத்தை உரித்து காட்டிய மீனவர்கள்!எம்.பாரதி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'துாத்துக்குடி, ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது, கலவரம் ஏற்பட்டதற்கு, சமூக விரோதிகளே காரணம்' என, உரக்கச் சொன்னார், நடிகர் ரஜினிகாந்த். போராட்டத்தை துாண்டி விட்டு குளிர் காய்ந்த ஆசாமிகளுக்கு, ரஜினியின் வார்த்தைகள், கடுமையாக உரைத்தன.

'தமிழின விரோதி, அன்னிய ஏஜன்ட்' என்றெல்லாம், ரஜினியை, சமூக வலைதளங்களில், 'போர்வையாளர்கள்' திட்டித் தீர்த்தனர். இன்று, பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்ற கதை போல, 'போர்வையாளர்'களின் முகமூடியை கிழித்து எறிந்து, அவர்கள் கோர முகத்தை, உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டனர், துாத்துக்குடி மீனவர்கள்!

துாத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவிடம், அவர்கள் அளித்துள்ள மனுவில், 'மக்கள் அதிகாரம் என்ற அமைப்பை சேர்ந்த, இரண்டு வழக்கறிஞர்கள் கிராமங்களில் ஊடுருவினர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிராம மக்கள் கட்டமைப்பை உருவாக்கி, இளைஞர்களை மூளைச்சலவை செய்து, உணர்வை துாண்டினர்.

'ஊர்வலம் புறப்படும் வரை, பொதுமக்களோடு இருந்து வந்த நபர்கள், 13 பேர் படுகொலை செய்யப்பட்ட போது, எங்கே போயினர் என தெரியவில்லை. இவர்களில் ஒருவருக்கு கூட, காயம் ஏற்படவில்லை' என, தெரிவித்துள்ளனர்.

'போராட்டத்தை துாண்டி விட்டது, சமூக விரோதிகள்' என, ரஜினிகாந்த் கூறிய போது, அதற்கான ஆதாரங்கள் எங்கே என, ஊளையிட்டது ஒரு கும்பல். ஆதாரங்களை, துாத்துக்குடி மக்களே எழுத்துப்பூர்வமாக இன்று வழங்கி இருக்கின்றனர். சமூக விரோதிகளின் சுயரூபத்தையும் உரித்து காட்டி விட்டனர். நேற்று ரஜினியை பார்த்து கேள்வி கேட்டவர்களே... இன்று துாத்துக்குடி மீனவர்களை பார்த்து என்ன செய்ய போகிறீர்கள்!

---

மதுவிலக்கால் பீஹாரில் பல நன்மைகள்!எஸ்.மணியன் மைந்தன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'பீஹாரில், மது விலக்கு அமலான ஓராண்டிற்கு பின், வீட்டு உபயோகப் பொருட்களை, மக்கள் அதிகளவில் வாங்க ஆரம்பித்துள்ளனர்' என, அம்மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள, 'டெவலப்மென்ட் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடியூட்' என்ற நிறுவனம் கள ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தேன் வாங்குவோர், 300 சதவீதமாக அதிகரித்துள்ளனர். பனீர் என்ற காட்டேஜ் பாலாடைக் கட்டி, 200 சதவீதமும், பால், 28 சதவீதமும், தயிர், 19 சதவீதமும், லஸ்சி, 20 சதவீதமும் விற்பனையில் அதிகரித்துள்ளதாம்!

வங்கி கடன் தாராளமாக கிடைப்பதால், கார் வாங்குவோர் எண்ணிக்கை, 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. டிராக்டர், 29 சதவீதமும், இரு சக்கர வண்டி வாங்குவோர் எண்ணிக்கை, 32 சதவீதமும் அதிகரித்துள்ளது. ரெடிமேட் ஆடைகள் வாங்குவோர் எண்ணிக்கை, 46 சதவீதமும் அதிகமாகி உள்ளது. மதுவிலக்கு அமலுக்கு முன், ஆண்டுக்கு, 5,280 கோடி ரூபாயை 'உயிர்க்கொல்லி'யான மதுவுக்கு அம்மாநில மக்கள் செலவிட்டனர். மதுவிலக்கு அமலுக்கு பின், நல்ல பொருட்களை வாங்கி, தங்கள் வாழ்க்கையை மக்கள் மேம்படுத்தி உள்ளனர்.

மதுவிலக்கு அமலான பின், பீஹாரில் ஆள் கடத்தல், 67 சதவீதமும், கொலைகள், 28 சதவீதமும், கொள்ளைகள், 23 சதவீதமும் குறைந்துள்ளன. முதல்வர், நிதிஷ்குமாரின் முழு மதுவிலக்கு திட்டம், துவக்க ஆண்டிலேயே மாபெரும் வெற்றி என்பது, கள ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. என்ன தான் முட்டி மோதினாலும், தமிழகத்தின் நாசகார அரசியல் கட்சிகளான, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் டாஸ்மாக்கை ஒழித்துக் கட்டி முழுமையான மது விலக்கை தமிழகத்தில் கொண்டு வராது.

இரு திராவிட, 'பிராண்ட்' கட்சியினரின் பினாமி ஆசாமிகளே, 'டாஸ்மாக்' மது விற்பனை நிலையங்களுக்கு, சரக்கு சப்ளை செய்து, கோடிக்கணக்கில் பணம் அள்ளுகின்றனர். பீஹாரில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.,வும் ஒற்றுமையாக இருந்தால், அந்த கூட்டணி கட்சிகளின் ஆட்சியை அசைக்க முடியாது. நட்பு அரசியல் அமைப்பு சட்டத்தின் வழிகாட்டி கொள்கைகளிலேயே, நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  குஜராத் பிஹார் இருமாநிலங்களில் மதுவிலக்கு அமலில் உள்ளது இரு மாநிலத்திலும் முன்னேற்றம் உள்ளது.கேரளாவும் அந்த பாதையில் செல்ல வேண்டும்.

 • sagar saritha - Chennai,இந்தியா

  வங்கிகள் அரசு திட்டங்கள் பற்றி எழுதுவது இருக்கட்டும், முதலில் அவர்கள் ஒரு வரைவோலைக்கான கமிஷன் தொகை என்னவென்று வெளிப்படையாக போடுகிறார்களா? ஒவ்வொரு வங்கிகளில் ஒவ்வொரு கமிஷன் தொகை வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே வரைவோலை எடுக்க முடியும் என்பது போன்ற அசட்டு நிபந்தனைகளை தளர்த்தினால் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  தமிழகம் பீகாராக ஆகிவிட்டது என்று சொல்லவந்தேன் .... பீகார் திருந்தி வருகிறதே

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  சாமானியனுக்கு சில லட்சங்கள் கடன் கொடுத்தால் 'கைக்கு ' என்ன வரும்? ஆயிரம் கோடிகள் கொடுத்து, வசூல் செய்யாமல், தப்பி ஓடவும் உதவினால் சிலபல கோடிகளைக் கிள்ளிக் கொடுத்தாலே நாலு தலைமுறைக்கு வருமே

 • nicolethomson - bengalooru,இந்தியா

  பாரதி , அந்த போர்வையாளர்கள் பற்றி நீங்க ஏதாவது எழுதினால் அவ்ளோ தான் உங்களையும் ஜட்டி, டவுசர் என்று வசைபாடும் கூட்டம் இங்கும் உண்டு உஷாரு

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement