Advertisement

இது உங்கள் இடம்

சுயாட்சி கேட்போருக்கு சி.பி.ஐ., எதற்கு?சீ.எழில்பாபு, வானமாதேவி, கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: மாநில சுயாட்சி, கவர்னர் அதிகார வரம்பு குறித்து, அடிக்கடி சர்ச்சையை கிளப்புகிறார், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின். அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் இவை தான்...

சென்னை போரூரில், 2014 ஜூன் 29ல் கட்டடம் இடிந்து விழுந்து, 17 பேர் பலியாகினர். கட்டடம் கட்டுமான பணிகளில் ஊழல் இருந்தது. 'இந்த வழக்கை தமிழக காவல் துறை விசாரிக்க கூடாது. சி.பி.ஐ., தான் வேண்டும்' என, கவர்னரிடம் மனு கொடுத்தவர், ஸ்டாலின். இந்த கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என கூறியதும், அவரே!

தி.மு.க.,வின் மாநில சுயாட்சி அப்போது எங்கே போனது? 2015 மார்ச், 30ல், முன்னாள் அரசு அதிகாரி முத்துக்குமார சுவாமி, தற்கொலை செய்து கொண்டார். 'இது தொடர்பான விசாரணையை, மாநில காவல் துறை விசாரிக்க கூடாது; சி.பி.ஐ., விசாரணை வேண்டும்' என, ஸ்டாலின் கூறினார். அப்போது, அவரது மாநில சுயாட்சி எங்கே போனது?

காவல் துறையில், டி.எஸ்.பி., விஷ்ணு ப்ரியா, 2015 செப்., 20ல், தற்கொலை செய்து கொண்டார். 'இந்த வழக்கை, மாநில காவல் துறை விசாரிக்கக் கூடாது; சி.பி.ஐ., தான் வேண்டும்' என, தி.மு.க., போராட்டம் நடத்தியது. அப்போது, ஸ்டாலின் மாநில சுயாட்சி எங்கே போனது?

'சசிகலாவுக்கு எதிராக, ஓ.பன்னீர்செல்வம் சாட்டிய குற்றச்சாட்டுகளை, சி.பி.ஐ., விசாரணை செய்ய வேண்டும்' என கூறியவர், தி.மு.க.,வின் செயல் தலைவர் ஸ்டாலின் தான். 'தமிழகத்தில், 2017 ஜூலை, 22ல், 'குட்கா' ஊழல் வழக்கை, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும்' என, தலைமை செயலரிடம், தி.மு.க., கடிதம் எழுதி வலியுறுத்தியது. அப்போதெல்லாம், ஸ்டாலின் அண்ணாச்சியின் மாநில சுயாட்சி உரிமை எங்கே போனது?

மாணவியரை பாலியலில் ஈடுபட முயன்ற வழக்கில், உதவி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பொய் முகத்துடன் மாநில சுயாட்சி பற்றி பேசும் திராவிட கட்சிகளின் சாயம் வெளுத்து விட்டது. இனியாவது, மக்கள் நிறத்தையும், கவர்ச்சி பேச்சிலும் யாரிடமும் ஏமாந்து விடக்கூடாது!

---

நீதி, நியாயம் செத்து ரொம்ப நாளாகி விட்டது!என்.சாணக்கியன், மதுரையிலிருந்து அனுப் பிய, 'இ - மெயில்' கடிதம்: தவறு செய்தவன், தன் மகன் என தெரிந்தவுடன், பசுவின் கண்ணீரை துடைக்க, அவனை தேர்ச்சக்கரத்தில் சிக்க வைத்து மரணத்தைத் தழுவச் செய்தான், நீதி காத்த மனுநீதிச் சோழன்.

'நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே' என, சிவபெருமானிடம் வாதிட்ட நக்கீரன் வாழ்ந்த பூமி இது. ஆனால், தமிழகத்தில் நீதி, நேர்மை, நியாயம் எல்லாம் செத்து பரலோகம் போய், வெகு நாட்களாகி விட்டன. 1967க்கு பின், திராவிட ஆட்சிகளின் பிடியில் சிக்கி, காவல் துறை சீரழிந்து சின்னாபின்னமாகி விட்டது.

'ஹெல்மெட்' கட்டாயம் அணியும் திட்டம், ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தும் திட்டமெல்லாம் படுதோல்வி அடைய காரணம், போலீஸ்காரர்களால் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது தான். இந்த லட்சணத்தில், தன்மான தமிழர் என தம்பட்டம் அடிப்பதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கிறது!

'காமெடி' நடிகர், எஸ்.வி.சேகர் போலீசாரின் பிடியில் சிக்காமல் பல நாட்கள், 'தண்ணி' காட்டினார். இதுவரை, அவர் விஷயத்தில், நீதிமன்றங்களே அதிக கடுப்பானதுதான் மிச்சம்!

கேரள கவர்னரின் சொகுசு காரை, டிரைவர், 80 கி.மீ., வேகத்தில் ஓட்டிச் சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. போக்குவரத்து விதிகளை, கவர்னரின் கார் மீறியதற்கு, அபராதமாக, 400 ரூபாய் செலுத்தும்படி, கேரள மாநில நேர்மையான போலீஸ்காரர் ஒருவர், நோட்டீஸ் அனுப்பினார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து, தற்போது, கேரள கவர்னராக பணியாற்றுகிறார், சதாசிவம். அவர், 'அந்த காரில் நான் பயணம் செய்யவில்லை. என் கார் டிரைவர் செய்த குற்றத்திற்கு தார்மீக பொறுப்பேற்று அபராதம் கட்டுகிறேன்' என சொல்லி இருக்கிறார்.

இதே குற்றம், தமிழகத்தில் நடந்திருந்தால், விஷயத்தை பூசி மொழுகி, காலத்தை போக்கி இருப்பர்!ஒருவேளை, தமிழக கவர்னர் துணிந்து, நடவடிக்கை எடுத்தால், அந்த கடமை தவறாத, போலீஸ்காரர், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவார் அல்லது தண்ணீர் இல்லா மோசமான ஊருக்கு மாற்றப்பட்டிருப்பார்!

கேரளாவை போல், போக்குவரத்து விதிகளை, தமிழகத்திலும் மதிக்க, மக்களும் முன் வர வேண்டும். போலீசாருக்கு ஒத்துழைப்பு தரும் பட்சத்தில், விபத்துகளை வெகுவாக குறைக்கலாம்!

----

திருப்பதிக்கு கூடுதல் ரயில் சர்வீஸ் தேவை!எஸ்.வைத்தியநாதன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: சென்னையில் இருந்து திருப்பதிக்கு, ஏராளமான பக்தர்கள், ரயில் மற்றும் பஸ்களில் தினமும் சென்று வருகின்றனர். புத்துார், நகரி, திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர் பகுதிகளில் இருந்து செல்லும் பெரும்பாலான பயணியர், ரயிலை விரும்புகின்றனர்.

சென்னையில் இருந்து திருப்பதிக்கு, காலை, 6:25; மதியம், 2:15; மாலை, 4:35 மணிக்கு, எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன; காலை, 7:15; 9:50; இரவு, 7:10 மணிக்கு என, மூன்று விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. பெரம்பூர், ஆவடி, திருநின்றவூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, புத்துார், ரேணிகுண்டா ரயில் நிலையங்கள் வழியாக, ரயில்கள் செல்கின்றன.

திருப்பதிக்கு இயக்கப்படும் அனைத்து சேவைகளிலும், பயணியர் கூட்டம் அலைமோதுகிறது. நாளுக்கு நாள் பெருகும் பயணியருக்கு ஏற்றவகையில், ரயில் சேவை போதுமானதாக இல்லை. சென்னையில் இருந்து திருப்பதிக்கு, காலை, 10:30; மாலை, 6:00 மணிக்கு, ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் அல்லது அந்த்யோதயா ரயில்கள் இயக்க வேண்டும்.

திருப்பதியில் இருந்து, காலை, 6:45 மணிக்கு புறப்படும் கருடாத்ரி எக்ஸ்பிரஸ் காலதாமதமாக சென்னை வந்தடைகிறது. அதன் பெட்டிகளை கூடுதலாக்கி, ரயிலின் வேகத்தையும் அதிகரிக்க வேண்டும். பகல் நேரத்தில், திருப்பதிக்கு கூடுதல் ரயில் இயக்கப்பட்டால், ஏராளமான பக்தர்கள் பயனடைவர். தெற்கு ரயில்வே நிர்வாகம் கவனிக்குமா?

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement