Advertisement

சொல்கிறார்கள்

குழந்தைகளுக்கு கற்று தருவதே உயிர் மூச்சு!'நிருத்ய தர்ம டெம்பிள் ஆப் பைன் ஆர்ட்ஸ்' என்ற நாட்டியப் பள்ளியை நடத்தி வரும், 30 வயதான, டாக்டர் ரேகா: அம்மா குடும்ப நிர்வாகி. அப்பாவுக்கு பேக்கரி பிசினஸ் என்பதால், கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்த நாங்கள், பெங்களூருக்கு மாறினோம்.

அம்மா பாடும் போதெல்லாம் நான் ஆட ஆரம்பிக்க, மூன்றரை வயதில் என்னை, குரு பத்மினி ராமச்சந்திரனிடம் பரதம் கற்க அழைத்து போனார். '5 வயதுக்கு பிறகே, டான்ஸ் கற்று தர முடியும்' என்ற குரு, நான் ஆடியதை பார்த்து ஆச்சர்யப்பட்டு சேர்த்துக் கொண்டார். நான்கரை வயதிலேயே புஷ்பாஞ்சலி, வர்ணம், தில்லானா, பதம் என, முக்கால் மணி நேரம், நிகழ்ச்சி செய்துள்ளேன்.

என் அப்பா நிறைய பேருக்கு கடனுதவி செய்ததுடன், பள்ளி, மருத்துவமனை, ஆசிரமம், முதியோர் இல்லத்திற்கு, தினமும், பேக்கரியில் இருந்து, 5,000 பன், 1,000 பிரெட் இலவசமாக அனுப்புவார். சக்திக்கு மீறி அவர் செய்த உதவிகள், நிதி நிலைமையை இறுக்க ஆரம்பித்தது; ஆனாலும், தான தர்மங்களை விடவில்லை.

எனக்கு, 10 வயதான போது, மாளிகை மாதிரி இருந்த வீட்டையும் கடைசியாக இழந்து, வாடகை வீட்டுக்கு குடி போனோம். எங்கம்மா வாரக்கூலியாக வேலைக்குப் போனார். ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுள்ளோம். பல நாள் கேழ்வரகு கஞ்சி தான். பணம் கட்ட முடியாததால், பரத வகுப்பு நிறுத்தப்பட்ட அன்று, சலங்கைகளை நெஞ்சோடு அணைத்து, விடிய விடிய அழுதது, இப்போதும் ஞாபகம் இருக்கிறது.

அப்போது, மனதில் ஒரு வைராக்கியம் வந்தது. டான்ஸ் ஸ்கூல் ஆரம்பித்து, ஏழைக் குழந்தைகளுக்கு நாட்டியம் கற்று கொடுக்க வேண்டும் என முடிவு செய்தேன். அப்பா நஷ்டத்தில் இருந்து மீள ஆரம்பித்ததும். பரதத்துடன், கேரளாவின் பாரம்பரிய நடனமான மோகினி ஆட்டத்திலும் ஆர்வம் காட்டி, இரண்டு நடனங்களிலும் அடுத்தடுத்து டாக்டர் பட்டம் பெற்றேன். பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷனில், மாஸ்டர் டிகிரி முடித்துள்ளேன்.

'நிருத்ய தர்ம டெம்பிள் ஆப் பைன் ஆர்ட்ஸ்' என்ற நாட்டியப் பள்ளி ஆரம்பித்து, ஏழைக் குழந்தைகளை, கட்டணம் இல்லாமல் சேர்த்து கொண்டேன். அத்துடன், ஹெச். ஐ.வி., பாசிட்டிவ் குழந்தைகளையும் சேர்த்து கொண்டேன். ஹெச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட, 35 குழந்தைகளுக்கு நாட்டியம் கற்று கொடுத்துள்ளேன்.

ஒருசமயம் இரண்டு குழந்தைகள், சில நாட்களாக வகுப்புக்கு வரவில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் இறந்துவிட்டதாக கூறினர். அப்படி ஒரு சூழலில் இருக்கும் அந்த குழந்தைகளை, எந்தளவு முடியுமோ அந்தளவு சந்தோஷமாக வைத்துக் கொள்வேன். இந்த குழந்தைகளுக்கு நாட்டியம் சொல்லித் தருவதற்காகவே, திருமணம் செய்து கொள்வதில்லை என்ற உறுதியுடன் இருக்கிறேன். என்னைப் பார்த்தாலே துள்ளி ஓடி வரும் இந்த குழந்தைகளையும், என்னையும் பிரிக்கும் வகையிலான, வேறு எந்த உறவும், எனக்கு வேண்டாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement