Advertisement

தன்னம்பிக்கை இருந்தால் தனித்து நிற்கலாம்!மாற்றுத்திறன் மாணவி நம்பிக்கை

உடுமலை:மனதில் தன்னம்பிக்கை இருந்தால், இலக்கை எட்டுவதில் மாற்றுத்திறன் ஒரு குறையல்ல என்பதை நிரூபித்து வருகிறார் உடுமலை மாணவி கவிப்ரியா.


உடுமலை, எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில், பிளஸ்1 வகுப்பு படிக்கிறார் மாணவி கவிப்ரியா. இவருக்கு உடல்நலக்குறைவால் சிறுவயதில் கண்பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை, இந்த மாணவிக்கு உள்ள குறையை நிறையாக மட்டுமே ஏற்றுக்கொண்டு, கல்வியில் சற்றும் பின்னடையாமல், மேல்நிலை வகுப்பு வரை முன்னேறியுள்ளார்.


தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற வேண்டிய கட்டாயத்தால், மாணவர்கள், அவர்களுக்கான தனித்திறன்களை பலரும் மறந்துவிடும் சூழல்தான் தற்போது உள்ளது. இந்நிலையில், இந்த மாணவி, தற்போது 300 திருக்குறள் வரை, விளக்கத்தோடு ஒப்புவிக்கிறார். திருக்குறள் மீதுள்ள ஆர்வம், ஆசிரியர்களின் பயிற்சியோடு, இப்போது, 300 ஆக உள்ளதை விரைவில், 1,330 ஆக மாற்ற வேண்டும் என்ற இலக்கையும் நிர்ணயித்துள்ளார். மாற்றுத்திறன் இருப்பினும், மனம் தளராமல் தனித்திறன்களை மேம்படுத்தி கொண்டிருக்கிறார்.


பேச்சுத்திறனை மேம்படுத்திக்கொண்டு, பல மேடைகளிலும் திறனை வெளிப்படுத்தியுள்ளார். கல்வியில் பின்தங்குவதற்கு, பல காரணங்களை அடுக்கும், மாணவர்களுக்கு, இம்மாணவி ஒரு எடுத்துக்காட்டாகவே இருக்கிறார்.மாணவி கவிப்ரியா கூறியதாவது: மாற்றுத்திறன் என்பதன் முழுமையான பொருள், மற்றவர்களை விடவும், அதிக திறன் படைத்தவர்கள் என்பதுதான் என்பது என் நம்பிக்கை.பேச்சுத்திறன் நன்றாக இருப்பதை ஆசிரியர்கள் கண்டறிந்து, பல போட்டிகளிலும் பங்கேற்க செய்தனர். அதுவே மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. பார்வை குறைபாடு இருப்பதால், உயர்நிலையோடு படிப்பு போதும் என பலரும் கூறினர். ஆனால், பெற்றோர் எனக்கு பலமாக இருந்து, மேல்நிலை வகுப்பில் சேர்த்துள்ளனர்.


திருக்குறள் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் சிறுவயது முதல் இருக்கிறது. அதை சிறிது, சிறிதாக முயற்சி செய்து, இப்போது, 300 வரை கூற முடிகிறது. மேல்நிலை வகுப்புக்கு இந்த பள்ளியில் வாய்ப்பு வழங்கியோடு, என் திறமைகளை வெளிப்படுத்தவும் ஊக்குவிக்கின்றனர்.எப்போதுமே, ஒரு இலக்கை முடிவு செய்து, அதை எட்டுவதற்கு முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால், எந்த குறையும் நிறைதான் என்பதைபுரிந்துகொண்டேன்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • சுந்தரம் - Kuwait,குவைத்

    இவரது கண்களில் என்ன குறைபாடு.? கோவையில் எனது நண்பர் திரு. சத்யன் திறமைவாய்ந்த கண் மருத்துவர். தினமலர் அலுவலகத்தில் என் மின்னஞ்சல் முகவரி உள்ளது. இந்த மாணவிக்கு கொடுத்து என்னை தொடர்பு கொள்ள சொல்லவும். குறைபாட்டை முற்றிலுமாக நீக்க முயற்சி செய்கிறேன். ( ஆகும் செலவுகளை பற்றி கவலை வேண்டாம்) . இந்த மாணவியின் தொலை பேசி எண்ணை பிரசுரிக்கவும்.

  • ருத்ரா -

    தங்கத்தில் குறையிருந்தாலும் தரத்தினில் குறையாது.வாழ்த்துக்கள் சகோதரி. வானம் வசப்படும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement