Advertisement

11 மொழிகளில் வழங்கப்படும் 'மொபைல் ஆப்!'

மொபைல் போன் வாயிலாக, விவசாய ஆலோசனைகளை வழங்கி வரும், 'இந்தியன் பார்மர்ஸ் பெர்ட்டிலைசர் கோ - ஆப்பரேட்டிவ் லிமிடெட் என்பதன் சுருக்கமான, 'இப்கோ'வின், உழவர் தொலைத் தொடர்பு தகவல் குழும மேலாளர், டி.சந்திரலேகா: 'இப்கோ' நிறுவனம், பல்வேறு பிரிவுகள் அடங்கிய, கூட்டுறவு அமைப்பாக, 1967ல் நிறுவப்பட்டது. உரம் தயாரித்து விற்பனை செய்வது, இதன் முதன்மை நோக்கம். இதன் கீழ், 16 துணை நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான், 'இப்கோ உழவர் தொலைத் தொடர்பு நிறுவனம்!' இதன் வாயிலாக, இலவச வாய்வழிச் செய்தி, 'இப்கோ' கிசான் மொபைல் அப்ளிகேஷன், சேவை, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. சாகுபடி, பயிர் பாதுகாப்பு, கால்நடை வளர்ப்பு, மண் மேலாண்மை, விளைபொருட்களின் சந்தை நிலவரம், வானிலை முன்னறிவிப்பு, அரசு திட்டங்கள், மானியங்கள், உடல் நலம், வேலைவாய்ப்பு போன்ற தகவல்களை, தினமும் இரண்டு, மூன்று குரல் வழிச் செய்திகளை, இலவசமாக வழங்குகிறோம். கேட்கத் தவறிய செய்திகளை, மீண்டும் கேட்க, 53435 எண்ணிலும், விவசாயம் மற்றும் கால்நடை தொடர்பான சந்தேகங்களுக்கு, 534351 எண்ணிலும் அழைக்கலாம். மொபைல் அப்ளிகேஷனில், வானிலை, மண்டி விலை, விவசாய ஆலோசனை, எங்கள் நிபுணர் பகுதி, சிறந்த நடைமுறை, நுாலகம், நிபுணர் ஆலோசனை, சமீபத்திய செய்திகள் வழங்கப்படுகின்றன. இதிலுள்ள தகவல்கள், ஹிந்தி, பஞ்சாபி, மலையாளம், பெங்காலி, ஒரியா, மராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், குஜராத்தி போன்ற, 11 மொழிகளில் படிக்கும், ஆடியோ வசதி உள்ளது. இதில், 'நிபுணர் பகுதி'யில் சந்தேகங்களை, நிபுணர்கள் குழுவுக்கு அனுப்ப முடியும். கேள்விகளை எழுத முடியாதவர்கள், பாதிக்கப்பட்ட பயிர்களை, கால்நடைகளை, புகைப்படம் எடுத்து அனுப்பலாம். நிபுணர்கள், நீங்கள் அனுப்பிய படத்திற்கான தீர்வை வழங்குவர்.'மண்டிப்பகுதி'யில், ஒரே நேரத்தில் ஐந்து விளை பொருட்களின் விலையை, ஐந்து மண்டிகளில் இருந்து பெற முடியும். விவசாயிகள், சந்தை விலை நிலையை பொறுத்து, தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் முடிவை எடுக்கலாம். 'செய்தி பகுதி'யில், கிராமப்புற இந்தியா, விவசாயம் தொடர்பான விஷயங்கள், சமூக நலம், வேலைவாய்ப்பு, அரசு திட்டம், மானியம் உள்ளிட்ட செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.இந்த அப்ளிகேஷனை, உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில், 'கூகுள் ப்ளே ஸ்டோர்' இல், 'IFFCO KISAN' என, 'டைப்' செய்து, பதிவிறக்கம் செய்து, விருப்பமான மொழியை தேர்வு செய்யலாம்.அவரவர் மொபைல் எண், மாவட்டம், தாலுகா குறிப்பிட்டு, myrefferral code இடத்தில், 2201 என, 'டைப்' செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு, 534351 அல்லது 97917 35144 எண்ணில் பேசலாம். அலுவலக முகவரி, இப்கோ உழவர் தொலைத் தொடர்பு நிறுவனம், 91 துாயமேரி சாலை, அபிராமபுரம், சென்னை - 18.
மிகப்பெரிய நோய், தனிமை!
ஆதரவற்ற குழந்தை களுக்கான, 'நேசம்' மற்றும் தனித்து வாழும் பெண்களுக்கான, 'வழிகாட்டும் ஒளி' அமைப்பு நிர்வாகியான பிரேமா: விவசாய குடும்பத்தில் பிறந்து, வீட்டிற்கு முதல் பட்ட தாரி பெண் நான். முதுகலை முடித்து, வங்கி பணிக்கு தேர்வானேன். காதல் திருமணம் செய்து, 15 ஆண்டு வாழ்க்கைக்குப் பின், அதைத் தொடர முடியாமல் பிரிந்தோம்.இந்த நிலையில், டூவீலர் ஓட்டிச் சென்றபோது, கழுத்தை துப்பட்டா இறுக்கி விழுந்ததில், காலில் பலமான அடி. கிட்டத்தட்ட ஓராண்டு படுக்கையில் இருந்தேன். அப்போது, இந்த மாதிரி கஷ்டப்படுபவர்களுக்கு ஏதாவது சேவை செய்யலாமே என தோன்ற, ஆரம்பித்தது தான், 'நேசம்' அமைப்பு. என் இரு தோழியர், கணவன் ஆதரவின்றி, பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தனர். ஒருவருக்கொருவர் நாங்கள், ஆதரவாக இருந்தோம். இந்நிலையில் தான், கணவனால் கைவிடப்பட்டவர், கணவனை இழந்தவர், விவாகரத்தானவர், கல்யாணம் ஆகாதவர் என, தனியாக வாழும் பெண்களுக்கான அமைப்பாக, 'வழிகாட்டும் ஒளி'யை ஆரம்பித்தோம். தனிமை வாழ்க்கையை ஊக்கப்படுத்துவது எங்கள் நோக்கமில்லை. 'என் புருஷன் சரியில்லை; எப்படியாவது அவரிடமிருந்து என்னை பிரிச்சுடுங்க' என, நிறைய பேர், போன் செய்வர். சேர்த்து வாழ வைக்க, முயற்சி செய்வோம். பிரிவதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பையும், வாழ்வதற்கான ஆதாரத்தையும் ஏற்படுத்தி கொடுக்கிறோம். சிறு அளவில் பிசினஸ் துவங்க ஆலோசனை வழங்கி, உதவியும், படிப்புக்கேற்ற வேலை வாங்கி கொடுக்க முயற்சியும் செய்வோம்.சென்னையை அடுத்த, பொன்னேரி, கண்டிகை உட்பட, ஏழு இடங்களில் டியூஷன் சென்டர் வைத்துள்ளோம். பள்ளிப் படிப்பை முடித்ததும், கல்லுாரியில் சேர உதவி செய்கிறோம். சென்னையில் உள்ள, 38 இல்லங்களில் உள்ள குழந்தைகள், கைவிடப்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கும் உதவிகள் செய்கிறோம். அடிக்கடி வயிற்றுவலி வரவே, 'டெஸ்ட்' செய்ததில், பெருங்குடல் புற்று நோய் உள்ளதால், உடனடியாக ஆப்பரேஷன் செய்யக் கூறினர். புற்றுநோய்க்கான சிகிச்சை எடுத்து வந்த போதே, 'ஹார்ட் அட்டாக்!' இரண்டு, 'ஸ்டென்ட்' வைத்து, மறுபடியும் செத்துப் பிழைத்தேன். ஒருபக்கம் கீமோதெரபி சிகிச்சைக்கு, கலோரி அதிகமான, சத்தான உணவும், இன்னொரு பக்கம் இதய சிகிச்சைக்கு, கலோரி கணக்கு செய்து சாப்பிட வேண்டிய, முரண்பட்ட வாழ்க்கை.இப்போதைக்கு என் ஒரே கனவு, கம்யூனிட்டி சென்டர் துவக்குவது. டெய்லரிங், எம்ப்ராய்டரி, கம்ப்யூட்டர், அழகுக் கலை துறைகளில் ஏழைக் குழந்தைகளுக்கும், தனியாக வாழும் பெண்களுக்கும், பயிற்சிகள் கொடுக்க வேண்டும். அதன் வாயிலாக, அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.தனிமை, மிகப்பெரிய நோய். கூடியவரை, உங்களை நீங்கள், 'பிசி'யாக வைத்துக் கொள்ளுங்கள். பொழுதுபோக்கு, வேலை, அடுத்தவங்களுக்கான உதவி என, பிடித்ததை செய்யுங்கள். தனிமையை ஜெயிப்பது, உங்கள் கையில் தான் உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா

    விவசாயிகள் அணுகி பயன் பெறவும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement