Advertisement

இது உங்கள் இடம்

தொழில் வளர்ச்சி பட்டியலில் தேறுமா தமிழகம்!
ம.சீனிவாசன், தேனியிலிருந்து எழுதுகிறார்: எந்த வளமும் இல்லாத நாடு, சிங்கப்பூர். இன்று, உலக அளவில் பொருளாதாரத்தில் ஓங்கி நிற்கிறது. அங்கு, அரசின் திட்டங்களுக்கு, மக்கள் முட்டுக்கட்டை போட்டதே கிடையாது. அந்நாட்டு விமான நிலைய விரிவாக்கத்திற்கு, மக்கள் மனமுவந்து இடம் கொடுத்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டில், ஒருவர் மீன் பிடித்து கொண்டிருந்தார். அவர் அருகில், ஒரு அளவுகோல் வைத்திருந்தார். மீனைப் பிடித்து அளந்து, அது, 20 செ.மீ.,க்கு குறைவாக இருந்ததால், மீண்டும் ஆற்றிலே விட்டு விட்டார். அவரிடம் விளக்கம் கேட்டதற்கு, '20 செ.மீ.,க்கு, குறைவான மீன்களை பிடிக்கக் கூடாது என, அரசு உத்தரவிட்டுள்ளது' என்றார். அந்த நாடு, ஒழுக்கத்தில் எங்கே உள்ளது; இந்தியா எங்கே நிற்கிறது. எந்த திட்டங்களை அரசு போட்டாலும், அதை எதிர்க்க, ஒரு கூட்டம் இருக்கிறது. 'கூடங்குளம் அணு உலையை திறக்கக்கூடாது' என, தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையால், இன்று ஆலை திறக்கப்பட்டு, மின்சாரம் தயாரிப்பு பணி நடக்கிறது. துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, தேவாரம் நியூட்ரினோ ஆய்வு, நெடுவாசல் மீத்தேன் ஆய்வு பணிக்கு, தொடர்ந்து எதிர்ப்புகள் வருகின்றன. திட்டங்களுக்கு எதிராக மக்களை துாண்டி, 'போர்வையாளர்கள்' வேடிக்கை பார்க்கின்றனர். இது, எரிகிற தீயில் எண்ணெய் விடுவது போல் செய்யும் சதி வேலை! ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், வேலையிழந்தோர் குடும்பங்கள் குறித்து, யாராவது நினைத்து பார்க்கின்றனரா... தொழில் அதிபர்கள் எல்லாரும், தமிழகத்தை விட்டு, இன்று தலைதெறிக்க ஓடுகின்றனர். இப்படியே போனால், தொழில் துறையில் கடைசி மாநிலமாக, தமிழகம் மாறி விடும்!சமூக விரோதிகளை, 'போர்வையாளர்கள்' என அடையாளப்படுத்தி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது, 'தினமலர்' நாளிதழ். அதற்காக, மனமார்ந்த பாராட்டுக்கள்!

ஸ்டாலின் வேஷம் கலைகிறதே!
தே.தமிழ்செல்வி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: அன்று, குன்றக்குடி அடிகளார், தன் ஆசிரமத்தில், ஈ.வெ.ரா., மற்றும் அவரது சகாக்களுக்கு மதிய விருந்து அளித்தார். விருந்து முடிந்ததும், ஈ.வெ.ரா., உள்பட அனைவருக்கும், நெற்றியில் விபூதி இட்டார். ஈ.வெ.ரா.,விடம், 'அய்யா, அடிகளார் தங்கள் நெற்றியில் விபூதி பூசினாரே, மறுக்காமல் ஏன் இருந்தீர்கள்?' என, சகாக்களில் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு, 'அவர் அளித்த சுவையான விருந்தை, ருசித்து சாப்பிட்டோம். அது போல், அவர் பூசிய விபூதியையும், அவர் திருப்திக்காக ஏற்றுக் கொள்வது தான் மனிதத்தன்மை' என்றார், ஈ.வெ.ரா., அது போல், தன் கட்சிக்காரர்களுடன், திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் சென்ற ஸ்டாலினுக்கு, கோவில் யானை மாலை போட்டது. கோவிலில், பூரண கும்ப மரியாதை செய்து, நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்தனர். அதை, ஏற்றுக்கொண்டாரா, இல்லையா என்பது, ஸ்டாலினின் தனிப்பட்ட பிரச்னை! கோவிலுக்குள் வருவோர், ஆத்திகரா அல்லது நாத்திகரா என பார்ப்பது, அர்ச்சகர்களின் வேலை கிடையாது. அர்ச்சகர் நெற்றியில் இட்ட சந்தனத்தை, உடனடியாக அழித்ததன் வாயிலாக, ஸ்டாலின் பரிகாரத்தை தேடிக் கொள்ளவில்லை; கோவிலின் புனிதத்தை கெடுத்து, பாவத்தை தான் தேடிக் கொண்டுள்ளார். 'உப்பு விற்க போனால் மழை பெய்கிறது; மாவு விற்க போனால் காற்றடிக்கிறது' என்ற சொல்வடைக்கு ஏற்ப, ஸ்டாலின் நடத்தும் போராட்டங்கள் எல்லாம், கடைசியில் பிசுபிசுத்து போகின்றன.மக்கள் மத்தியில் போராட்டம் என்ற போர்வையில், ஸ்டாலின் போடும் வேஷம் எல்லாம், கலைந்து விடுகிறது. இனியாவது, மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் போராட்டங்களை, ஸ்டாலின் கைவிட வேண்டும். தன் தந்தை போல், ராஜதந்திர முறையில் செயல்பட்டால் மட்டுமே, அடுத்து வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., ஆட்சியை பிடிக்க முடியும்!
அப்பாவி உயிரை காவு வாங்குவது அறமாகாது!
ச.ஜான் பிரிட்டோ, திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - -மெயில்' கடிதம்: கூர்கா என அழைக்கப்படும், மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்தோர், பிழைப்பிற்காக, தமிழகத்தில் குடியேறி உள்ளனர். அவர்களில் பலர், தெருகளைப் பாதுகாக்க, இரவு காவலர்களாக வலம் வருகின்றனர். அவர்களை, குழந்தைகள் கடத்தும் நபராக சித்தரித்து, அடித்து, பலர் தொல்லை கொடுக்கின்றனர். குழந்தை கடத்தும் நபர் என, வட மாநிலத்துக்காரர்களை சந்தேகித்து, அவசரத்தில் ஆராயாமல், மக்கள் தாக்குகின்றனர். அதிலும், மனநலம் பாதிக்கப்பட்டவர் எப்படி சமாளிப்பார்? பிழைப்புக்கு வழியின்றி பிச்சை எடுக்கும் அரவாணிகளும், பஞ்சம் பிழைக்க தமிழகத்தில் வந்து பஞ்சு மிட்டாய் விற்கும் வட மாநிலத்தவரும், மக்களின் தவறான புரிதலினால், குழந்தை கடத்துபவர்களாக சித்தரிக்கப்படுவது, வேதனை அளிக்கிறது. ஆங்காங்கே வடமாநிலத்தவர் தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் வருவது தடுக்கப்பட வேண்டும். 'வந்தாரை வாழ வைக்கும்' என பெயரெடுத்த தமிழகம், இன்று சந்தேகக் கண்களால், தன் புகழ் மங்க தமிழர்களே காரணமாய் அமைவதே, மிகுந்த வேதனை அளிக்கிறது! குழந்தை கடத்தல் பீதியை ஏற்படுத்தி, அப்பாவிகளை சித்ரவதை செய்ய துாண்டுவதில், 'வாட்ஸ் ஆப், பேஸ் புக்' போன்ற சமூக வலை தளங்களின் பங்கு அதிகமாக உள்ளது. 'பதறிய காரியம் சிதறும்' என்ற சொலவடையைப் போல, அப்பாவிகளையும், குற்றவாளிகளையும் ஆராய, முன்கோபம் தடைக்கற்களாய் தான் அமையும் என்பதே உண்மை.சந்தேக ஆசாமிகளை கையும், களவுமாக பிடித்து, காவல்துறை வசம் ஒப்படைப்பதே அறிவுடைமை. தமிழகத்தில், தற்போது நிலவும் அசாதாரண சூழலை திசை திருப்ப, சில விஷமிகளால் பரப்பப்படும், இதுபோன்ற வதந்திகளால், அப்பாவி உயிர்களை காவு வாங்குவது அறமாகாது!
'தினமலர்' நாளிதழின் கல்வி சேவைக்கு நன்றி!
கே.ரூபன் விநாயக், பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'நீட்' தேர்விற்கு பின், அதில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், 44 ஆயிரத்து, 332 மாணவ - மாணவியர் மருத்துவக் கல்லுாரிகளில் சேர, தகுதி வாய்ந்தவர்களாகி உள்ளனர். மொத்தமுள்ள, 3,450 மருத்துவ இடங்களுக்கு, 44 ஆயிரத்து, 332 மாணவ - மாணவியர் போட்டியிடுகின்றனர்; இதை, கேட்டாலே மலைப்பாக உள்ளது. கடந்த, 1959ல், தமிழகத்தில், 950 மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் மட்டுமே, இருந்தன; 3,000 பேர் மட்டுமே, நேர்காணலுக்காக அழைக்கப்பட்டனர். அப்போது நடந்த நேர்காணலில், இரண்டு நபருக்கு ஒருவர் என்ற விகிதாச்சாரத்தில், மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதனால் தான், என்னை போன்ற குக்கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் கூட, மருத்துவர்களாக முடிந்தது. சிவகங்கை அருகே, காஞ்சிரங்காலைச் சேர்ந்த வசந்த் என்ற மாணவர், 'நீட்' தேர்வில், 384 மதிப்பெண் பெற்றுள்ளார். தபால் துறையின் அஜாக்கிரதையால், அவர் அனுப்பிய விண்ணப்பம், உரிய நேரத்தில் தேர்வு கமிட்டிக்கு சென்றடைய வில்லை. அந்த தகவல், 'தினமலர்' நாளிதழில் செய்தியாக வெளியானது. இதன் எதிரொலியாக, மாணவனின் விண்ணப்பத்தை, மருத்துவ துறையின் தேர்வு கமிட்டி ஏற்றுள்ளது. மருத்துவக் கல்லுாரியில், மாணவருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது என்ற செய்தி மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. மாணவர்களின் முன்னேற்றத்திற்காக, 'தினமலர்' பல மாவட்டங்களில் ஆண்டு தோறும், பல தொடர் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்நிகழ்ச்சிகளின் வாயிலாக, தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பல்லாயிரம் பேர் உள்ளனர். அத்தனைக்கும் சிகரம் வைத்தாற்போல், மாணவர் வசந்திற்கு, மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைக்க, வாய்ப்பை ஏற்படுத்தி தந்த, 'தினமலர்' நாளிதழை, அதன் வாசகர்கள் மட்டுமல்லாது, மாணவ சமுதாயமும், மக்களும் நிச்சயம் பாராட்டுவர்!
மக்கள் மருந்தகம்: நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்!
சொ.இந்திரா செல்வம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: சர்க்கரை நோய் பாதிப்பில், நாட்டளவில், தமிழகம் முதலிடம் வகிப்பது அதிர்ச்சி அளிக்கிறது.எட்டு கோடி மக்கள் தொகையுள்ள தமிழகத்தில், சர்க்கரை, மாரடைப்பு, இதய நோய், ஆஸ்துமா, கேன்சர் உள்ளிட்ட நோய் பாதிப்புக்குள்ளாகி வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, மருத்துவ ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில், ஒரு லட்சம் பேருக்கு, 430 பேர் வரை, இதய நோய் பாதிப்பால் இறக்கின்றனர். தற்போதிருக்கும் இறப்பு விகிதம், 24 சதவீதத்தில் இருந்து, 40 சதவீதமாக உயரும் எனவும், சர்க்கரை நோய்க்கு, 10.4 சதவீதமும், ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமனால் பாதிப்போர், முறையே, 20 மற்றும் 23 சதவீதம் எனவும் ஆய்வு கூறுகிறது. மக்களின் அத்தியாவசிய தேவையில், உயிர் காக்கும் மருந்து வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மருந்துக்காக மட்டும் ஆயிரக்கணக்கில் செலவு செய்யும் நிர்ப்பந்தத்துக்கு மக்கள் ஆளாகிஉள்ளனர். மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், டாக்டர்கள், மருந்து கடைகளை கவனித்து, விலையுயர்ந்த மருந்துகளை, நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் நிலை உள்ளது. மக்களை அழிக்கும், மது வகைகள் மலிவாக கிடைக்கின்றன; உயிர் காக்கும் மருந்துகள் மலிவாக கிடைக்கவில்லை. தரமான மருந்துகள், ஏழைகளுக்கு, எட்டாக்கனியாக உள்ளது என்ற நிலை இருந்தது.இன்று, நோய் வாய்ப் பட்டோருக்கு தரமான விலையில், மலிவான மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், மத்திய அரசு, 'பிரதான் மந்திரி பாரதிய ஜன் அவுஷதி பரியோஜனா' என்ற திட்டம் துவக்கியது.அதன் மூலம், நாடு முழுவதும் மக்கள் மருந்தகம் எனும் பெயரில் திறக்க, பிரதமர் மோடி உத்தரவிட்டார்.மத்திய அரசு, நாடு முழுக்க, 3,679 மருந்தகங்களை துவக்கியுள்ளது. தமிழகத்தில் மட்டும், 339 மருந்து கடைகள் மூலம், 700 விதமான மருந்துகள் மலிவு விலையில் விற்கப்படுகின்றன. இத்தகைய மருந்தகங்கள் எங்குள்ளது என்பது பற்றியும், ஜெனரிக் வகை மருந்துகள் பற்றிய விழிப்புணர்வும், மக்கள் மத்தியில் இல்லை என்பதே நிதர்சனம்! கம்பெனி பெயர் குறிப்பிடப்படாத, ஜெனரிக் மருந்துகள் பற்றிய விழிப்புணர்வை, மக்களிடம் ஏற்படுத்துவதற்கு, மத்திய, மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும்!
போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா பழனி?
வி.எஸ்.ராமச்சந்திரன், செம் பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழக அரசு பணியில், 2003, ஏப்., 1க்கு பின் சேர்ந்தோர், புதிய ஓய்வு ஊதிய திட்டமான, சி.பி.எஸ்., எனப்படும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.இத்திட்டத்தில் பெருமளவு இழப்பு, சலுகைகள் குறைவு என, பட்டியல் நீள்கிறது. இதை, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், 15 ஆண்டுகளாக எதிர்த்து வருகின்றனர். 'இத்திட்டம் ரத்து செய்யப்படும்' என, உறுதி கொடுத்தார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா; அதற்குள், அவர் மரணம் அடைந்தார். இன்று வரை, ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர், சி.பி.எஸ்., திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இன்று, மாநில அரசில் பணிபுரிவோரில், புதிய பென்ஷன் திட்டத்தில் உள்ளோர் தான், அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். அவர்கள், பல்வேறு போராட்டம் நடத்தியும், சி.பி.எஸ்., திட்டம் ஒழிந்த பாடில்லை! 'பழைய பென்ஷன் திட்டத்தை, நடைமுறைபடுத்தினால் போதும்' என்ற மனநிலையில், அரசு ஊழியர்கள் உள்ளனர். ஓய்வு ஊதிய சந்தாதாரர்கள் மனக்குமுறல், ஏக்கம், எதிர்பார்ப்பு, மனநிலை ஆகியவற்றை கருணையுடன் அணுகி, மாற்றத்தை ஏற்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.பி.எஸ்., திட்டத்தில் பிடித்த பணத்திற்கான கணக்கு சீட்டை, ஒவ்வொருவருக்கும், விரைவில் வழங்க வேண்டும். கடன் வசதி, பகுதி தொகை பெறுதல் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். அரசு ஊழியர்களுக்கு நல்லதொரு புதிய பாதையை காட்ட, முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுத்து, போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Darmavan - Chennai,இந்தியா

    ஜான் பிரிட்டோ சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.மேற்கு வங்கத்திலிருந்து வருபவர்கள் வங்காளிகள் அல்ல.பங்களா தேசத்து மக்கள்...பிழைப்பு தேடி வருகிறார்கள் என்றும் வந்தாரை வாழவைக்கும் என்று சொல்வதெல்லாம் தற்காலத்துக்கு உதவாது.ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடரியை ஓட்டிற்றாம் என்ற கதையாகிவிடும்.இதுதான் இந்திய நாட்டின் சரித்திரம்..முஸ்லிம்களும் ஆங்கிலேயர்களும் யார்.எப்படி வந்தார்கள்.இந்த மாதிரி தத்துவம்/பழமொழி சொல்லி நாமழிந்து போகிறோம் என்பதுதான் உண்மை....தனக்கு மிஞ்சியதுதான் தர்மம் என்பதே சரி. ..சமீப காலமாக எல்லா திருட்டு /கொலை குற்றங்களில் வட இந்தியர்கள்தான் இருக்கின்றார்கள்.இவர்கள் எங்கு வேலையில் இருந்தாலும் இவர்களை பற்றிய விவரங்கள் போலீஸிடம் கொடுக்கவேண்டும். அப்போதுதான் நாம் பாதுகாப்பாக இருக்க முடியும்...முடிந்தவரை இவர்களை வேலைக்கு வைக்காமல் இருப்பது நமக்கு நன்மை..கண் கேட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய முடியாது..

  • Darmavan - Chennai,இந்தியா

    ஜான் பிரிட்டோ

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement