Advertisement

'டவுட்' தனபாலு

கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா: கர்நாடக பட்ஜெட்டில், மின் கட்டணம் - டீசல் விலையை உயர்த்தியதால், ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
டவுட் தனபாலு: நீங்க நெருக்கடி கொடுத்ததால் தான், 32 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய, ம.ஜ.த.,வைச் சேர்ந்த முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டார்... இதுமாதிரி வருவாயை பெருக்கினால் தானே, அதை சாத்தியப்படுத்த முடியும்... அரசுக்கு பணம், மரத்திலா காய்க்கும் என்பது தான், என்னோட, 'டவுட்!'
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு:அவரவர் தாய்மொழியில், கல்வியைக் கற்க வேண்டும்.
டவுட் தனபாலு: அரசின் அனைத்து தளங்களிலும், பிராந்திய மொழிகளுக்கு, இந்தி மற்றும் ஆங்கிலத்துக்கு இணையான முக்கியத்துவம் அளிக்கப்படும்னு, மத்திய அரசு அறிவித்து, அதற்கான அங்கீகாரம் அளிப்பதில் உறுதியாக நடந்து கொண்டால், இந்த மாதிரியான அறிவுரைகளே அவசியப்படாது... மக்களுக்கு சொல்லும் இந்த அறிவுரையை, மற்ற யாருக்கும் சொல்ல மாட்டீங்களா என்ற, 'டவுட்' வருதே...!
புதிய நீதிக்கட்சி நிறுவனர் சண்முகம்: எட்டு வழிச்சாலையால், தமிழகம் பெரிய அளவில் தொழில்துறையில் வளர்ச்சி அடையும்; பல ஆயிரம் பேருக்கு, வேலை வாய்ப்பு கிடைத்து, மக்களின் பொருளாதாரம் உயரும்.
டவுட் தனபாலு: தமிழகம் வளரும்; தொழில்துறை செழிக்கும், வேலை வாய்ப்பு கிடைத்து, மக்கள் வசதியாவாங்க என்பதெல்லாம் சரிங்க... இதனால நமக்கு என்ன பயன்னு நினைச்சுத் தானே, அரசியல்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடுறாங்க... நீங்களாவது, மக்களைச் சந்தித்து, பீதியை கிளப்பி, ஓட்டுகளை பெற நினைப்போரின் முகத்திரையை, கிழித்தால் என்னங்கறது தான், என்னோட, 'டவுட்!'
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ்: பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரால், இன்னும், நான்கைந்து ஆண்டுகள் தான் அரசியலில் நீடிக்க முடியும்.
டவுட் தனபாலு: தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு, உங்க தந்தை, ஊழல் வழக்குல தண்டனை வாங்கி இருக்காரு... நீங்க, ஐக்கிய ஜனதா தள நிதிஷ்குமாரின், அரசியல் ஜாதகத்தை கணிக்கலாமா... போதாக்குறைக்கு, உங்க மீதும் பல ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கு... 'ஊருக்கு குறிசொல்லும் பல்லி, கழனிப்பானையில் விழுந்ததாம் துள்ளி'ன்னு, சொலவடை இருக்கு... அது உங்களுக்கு தெரியுமா என்பது தான், மக்களின், 'டவுட்!'
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: 'தமிழகத்தில், பா.ஜ., மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தாக வேண்டும். அரசியல் மாற்றம் முழுமையாக ஏற்பட்டாக வேண்டும்' என்ற உணர்வு, தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
டவுட் தனபாலு: போராட்டம்கற பேர்லயாவது, பொதுமக்களை, மற்ற கட்சிகள் சந்தித்து வருது... தமிழக, பா.ஜ.,வோ, மேம்போக்கா தான் இருக்கு... அப்புறம் எப்படி, மக்களின் மனசில் இருப்பதை அறிந்தீங்க... மனசுல இவ்வளவு ஆசையை வெச்சிருக்கும் மக்கள், பா.ஜ., பக்கம் தலைதிருப்பாமல் தடுப்பது எது... மாநில தலைவர்களா என்ற, 'டவுட்' ஏற்படுதே...!
தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர்: தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்து விட்டதாக, கனவுலகில் மிதந்து வருகிறது.
டவுட் தனபாலு: சமீபமா, தமிழக, காங்., தலைவர்கள் யாருக்கும் வராத வகையில், உங்களுக்கு, முதல்வராகும் ஆசை வந்திருக்கு... அது தப்பில்லை... ஏன்னா, முன்பொரு காலத்தில், நீங்களும் ஆண்ட கட்சிதான்... அப்படிப்பட்ட உங்க கட்சியைப் பார்த்து, 'காங்., தனித்துப் போட்டியிட தயாரா'ன்னு, பா.ஜ., பலமுறை, 'டவுட்' எழுப்பி வருதே... பா.ஜ.,வின் கனவை தகர்ந்து எறிய கிடைத்த நல்வாய்ப்பாக, இதை நீங்க பார்க்கத் தயாரா...!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement