Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'அதிகாரத்தை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும்' என்ற நோக்கில், புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண்பேடி பேச்சு: 'துணைநிலை கவர்னர் அதிகாரம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு, புதுச்சேரிக்கும் பொருந்தும்' என, முதல்வர் நாராயணசாமி கூறுகிறார். உச்சநீதிமன்றம் அதுபோன்று ஒரு தீர்ப்பை அளிக்கவில்லை. அந்தத் தீர்ப்பு, மிகத் தெளிவாக இருக்கிறது. டில்லிக்கு பொருந்துவது, புதுச்சேரிக்கு பொருந்தாது. காரணம், டில்லி, இந்திய அரசியல் சாசன சட்ட திருத்தத்தால் ஏற்படுத்தப்பட்ட யூனியன் பிரதேசம். புதுச்சேரியோ, பார்லிமென்ட்டிலே உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசம்.
தினகரன் ஆதரவாளரும், அ.தி.மு.க., தகுதி நீக்க, எம்.எல்.ஏ.,வுமான வெற்றிவேல் பேட்டி: முதல்வர் பழனிசாமி வகித்து வரும் நெடுஞ்சாலை துறையில், அவரது உறவினர்களுக்கு மட்டுமே கான்ட்ராக்ட்கள் கொடுப்பதையும், அதில் ஊழல் நடப்பதையும், நான் தான் முதலில் வெளிக்கொண்டு வந்தேன். ஒன்றரை மாதம் கழித்து, ஸ்டாலினும் அதைப் பற்றி பேசினார். ஆனால், என் மீது மட்டும், வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஊர் ஊராகச் சென்று, ஆய்வு நடத்தும் கவர்னர், ஏன் இதை கண்டுகொள்ளவில்லை?
தி.மு.க., முதன்மை செயலர் துரைமுருகன், 'உள்ளது உள்ளபடி' பேட்டி: தி.மு.க., தலைவர் கருணாநிதியை, சமீபத்தில் சந்தித்தேன். அவருக்கென்ன... நலமுடன் இருக்கிறார். சில சமயங்களில் தான், சோர்ந்து போய் விடுகிறார். ஒண்ணேகால் ஆண்டு ஒரே அறையில் இருந்தால், யாருக்கு தான் சோர்வாகாது... 'கடற்கரைப் பக்கம் அழைத்துச் சென்று பாருங்கள், ஜாலியாக இருப்பார்' என்று கூட, நான் சொல்லி இருக்கிறேன்.
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு பேட்டி: 'மத்தியில், பா.ஜ., ஆட்சி இருப்பதால், மதுரைக்கு எய்ம்ஸ் கொண்டு வந்தது, பா.ஜ., தான்' என, தமிழிசை சவுந்தரராஜன் கூறுவதில் தவறில்லை. ஆனால், தமிழக முதல்வருக்கும், இதில் பங்கு உண்டு. பா.ஜ., மட்டும் கொண்டு வந்தது என்றால், 2003ம் ஆண்டே கொண்டு வந்திருக்கலாமே... தற்போது வந்ததற்கு, தமிழக அரசின் முயற்சியே காரணம்.
அ.ம.மு.க., துணை பொதுச் செயலர் தினகரன் பேட்டி: எட்டு வழிச்சாலை, நல்ல திட்டம் தான்; எதிர்க்கட்சி என்பதற்காக, வேண்டாம் என, சொல்லவில்லை. ஆனால், விவசாயிகளிடம் பேசி, புரிய வைத்து, உரிய நிவாரணம் வழங்கி, அவர்களின் அனுமதியோடு செயல்படுத்த வேண்டும். முதல்வர், அவர் மாவட்ட விவசாயிகளையாவது நேரில் சந்தித்து, திட்டம் குறித்து புரிய வைக்க வேண்டும். அதை விடுத்து, காவல்துறையை விட்டு மிரட்டுவது ஏற்கத்தக்கதல்ல.

மத்திய நிதித்துறை செயலர் ஹஷ்முக் அதியா பேட்டி: பெட்ரோலியப் பொருட்களுக்கு, இப்போதைய வரி விதிப்பு முறையே சிறப்பாக உள்ளதால், அதை மாற்றவில்லை. வரி வருவாயில், அரசு கூடுதல் கவனம் செலுத்துவது, நாட்டு நலன் கருதி தான். வரி வருவாய் மூலம் தான், ஏழை மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

த.மா.கா., கட்சி தலைவர் வாசன் அறிக்கை: 'மேக்கேதாட்டு அணை திட்டத்தைச் செயல்படுத்த, முயற்சிகள் மேற்கொள்ளப்படும்' என, கர்நாடக முதல்வர் குமாரசாமி, தன்னிச்சையாக அறிவித்துள்ளது, கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற அறிவிப்பை இனி வெளியிடாமல், உச்ச நீதிமன்றத்திற்கும், மேலாண்மை ஆணையத்திற்கும், ஒழுங்காற்றுக் குழுவுக்கும் கட்டுப்பட்டுச் செயல்பட வேண்டும் என, கர்நாடகா அரசை, மத்திய அரசு கண்டிக்க வேண்டும்.

இந்திய கம்யூ., மாநிலசெயலர் முத்தரசன் பேட்டி: சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைதொடர்பாக, பொதுக்கூட்டம் நடத்த எதிர்க்கட்சிகளுக்கு, காவல்துறை அனுமதி மறுப்பது, ஜனநாயகத்தின் குரல்வளையைநெரிப்பதாகும். கனிம வளம், வேளாண்மை நிலங்கள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் தான், இத்திட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

மக்கள் நீதி மையம் கட்சியின் செய்தி தொடர்பாளரும், சினிமா பாடலாசிரியருமான சினேகன் பேட்டி: 'எங்கள் கட்சி செயலர்களையே, முழுநேர அரசியலுக்கு வர வேண்டாம்' என, தடை உத்தரவு போட்டுள்ளார் கமல். 'முழுநேர அரசியலுக்கு வந்துவிட்டால், குடும்பத்தை பாதுகாக்க, வருமானத்தை அரசியலில் இருந்தே எடுக்க வேண்டும். அது, ஊழல் ஆகிவிடும் என்பதால், தேவைகள் தன்னிறைவு அடைந்த பின்னரே, ஓய்வு நேரத்தில் அரசியலுக்கு வாருங்கள்' என, கூறிவிட்டார். இதையெல்லாம், மக்கள் பார்த்தபடி தான் இருக்கின்றனர்.

'சராசரி அரசியல்வாதி' என, புரிந்துகொள்ளப்படும் வகையில், காங்., தலைவர் ராகுல், 'டுவிட்டர்'பக்கத்தில் கருத்து பதிவு:கர்நாடக அரசு, ௩௪ ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்து, விவசாயிகளுக்கு உதவியுள்ளது. ஆனால், மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்தியாவில் உள்ள, 12 கோடி விவசாயிகளுக்கு, பட்ஜெட்டில் வெறும், ௧௫ ஆயிரம் கோடி ரூபாயை மட்டுமே, நிதியாக ஒதுக்கியுள்ளது. இதுதான், காங்கிரசின் அதிரடி நடவடிக்கைக்கும், மோடியின் சந்தைப்படுத்துவதற்கும்இடையிலான வித்தியாசம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement