Advertisement

ஐ.என்.டி.யு.சி., ஒட்டுவேலை சாத்தியமா?

''கழிவுநீர் பிரச்னையில், நீங்க, கலெக்டரிடம் புகார் செய்தாலும், கடைசியா, என்னிடம் தான் வரணும்னு, ஊராட்சி அலுவலக உதவியாளர், பெண்களை மிரட்டுறாராங்க…'' என்றபடி, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''அது யாரு பா... அவ்வளவு பெரிய ஆளு...'' எனக் கேட்டார் அன்வர் பாய்.
''சென்னைக்கு பக்கத்துல, புழல் ஒன்றியம், புள்ளிலைன் ஊராட்சி அலுவலக உதவியாளரைச் சொல்ல வந்தேன்... அங்கிருக்கிற அரிசி ஆலைகளுக்கு சாதகமாக, ராத்திரி நேரத்தில், கழிவுநீர் கால்வாயை மூடி, மொத்த கழிவுநீரும், குடியிருப்பு பகுதியில் பாயற மாதிரி, புது கால்வாய் வெட்டி விட்டாரு...''அங்கிருந்த, பெண்கள் கொதிச்சுப்போய், அவரிடம், 'ஏன் இப்படி செய்றீங்க? நாங்க, கலெக்டரிடம் புகார் செய்வோம்'ன்னு சொல்லியிருக்காங்க... அதுக்கு அவர், 'நீங்க எங்க போனாலும், கடைசியா என்னிடம் தான் வந்து கெஞ்சணும்... உங்களால் முடிஞ்சதை பாருங்க'ன்னு, அலட்சியமா பேசியிருக்காருங்க…'' என்றார் அந்தோணிசாமி.''ரொம்ப, 'இனியவரா' இருக்காரே பா...'' என, கிண்டலடித்தார் அன்வர்பாய்.''காசு இருந்தா, கொண்டாட்டம் தான் போங்கோ...'' என, அடுத்த தகவலைத் துவக்கினார் குப்பண்ணா.''யாரைச் சொல்ல வர்றீர்...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.''சில பேர், ௧௫ லட்சம், ௨௦ லட்சம் குடுத்து டிரான்ஸ்பர் வாங்கி இருக்கா... அதைச் சொல்ல வந்தேன்... கல்லுாரி கல்வி இயக்குநரகத்துக்கு கீழே, அஞ்சு இணை இயக்குநர் பதவி காலியா இருந்துது... அதுக்கு, கிரேடு ௧ காலேஜ்கள்லேர்ந்து சில பேர், கிரேடு ௨ காலேஜ்கள்லேர்ந்து சில பேர்ன்னு, போட்டி போட்டு, பணம் குடுத்து, பதவி வாங்கிட்டா... ''கேட்டதும் மனசு கொதிச்சு போயிடுத்து... பதவி உயர்வுக்கு காத்துண்டிருக்கறவாள்லாம் என்ன செய்வா பாவம்... இந்த லட்சணத்துல, கல்லுாரி முதல்வர் பதவிக்கும், எட்டு லட்சம் ரூபாய் வரை கை மாறி இருக்காம்... தெரிஞ்சுக்கோங்கோ...'' என்றார் குப்பண்ணா.''இதுல யாருக்கு காசு போச்சுங்கறது தான், மில்லியன் டாலர் க்வெஸ்டியன்...'' என்றார் அண்ணாச்சி. சரியாக ஆங்கிலம் பேசிய அண்ணாச்சியை, நண்பர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.''வெண்ணெய் திரண்டு வரும் போது, தாழி உடைந்த கதையாகிடிச்சு பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.''விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.''தமிழக, ஐ.என்.டி.யு.சி., அமைப்பு, இரண்டாக பிளவுபட்டு கிடக்குது... அந்த அமைப்புல ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக, அகில இந்திய, ஐ.என்.டி.யு.சி., தலைவர் சஞ்சீவரெட்டி தலைமையில பேச்சு நடந்துட்டிருந்தப்ப, அவருக்கு திடீர்ன்னு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, வீட்டில் ஓய்வு எடுக்க போயிட்டாரு... அவர் பூரண குணமடைந்த பின், இணைப்பு குறித்து மீண்டும் பேச்சு நடக்கும்...''சமீபத்துல, தன்னுடைய, 80 வது பிறந்தநாளை காளன் கொண்டாடிய போது, எதிர அணியை சேர்ந்த சில நிர்வாகிகளும் அவருக்கு, வாழ்த்து தெரிவிச்சிருக்காங்க... அப்பறமா, குற்றாலத்துல, வர்ற, 15ம்தேதி, 242வது மாநில செயற்குழுக் கூட்டமும், பயிற்சி முகாமும் நடத்துறாங்க... இந்தக் கூட்டத்துல, தனி அணியா செயல்படுறது சம்பந்தமா தீர்மானம் நிறைவேத்த போறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.நண்பர்கள் நடையைக் கட்டத் துவங்கினர்; நாயர், மிளகாய் பஜ்ஜி தயாரிக்கத் துவங்கினார்.

சுறுசுறுப்படைந்த ஆந்திரா காங்.,
''சும்மா போனால் கூட, 'இந்தாங்க துணிப் பை'ன்னு திணிக்கிறாங்க...'' என, முதல் தகவலுடன் நாயர் கடை விவாதத்தைத் துவக்கினார் அந்தோணிசாமி.
''எங்கே ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.''மதுரை கலெக்டர் ஆபீசுல... மதுரை மாவட்டத்துல, எல்லா அரசு ஆபீசுலயும், ௨ம் தேதியிலேர்ந்து, பிளாஸ்டிக் பொருட்களுக்கு, 'டாட்டா' சொல்லத் துவங்கிட்டாங்க... எல்லா அதிகாரிகளும், இதுக்கான ஜரூர் வேலையில இறங்கி இருக்காங்க...''கலெக்டர் வீரராகவ ராவும், டி.ஆர்.ஓ., குணாளனுடன் சேர்ந்து, எல்லா ஆபீசுக்கும் போயி, ஆய்வு செய்யிறாரு... ஆபீசுக்கு வர்ற பொதுஜனங்க கையில, பிளாஸ்டிக்கைப் பார்த்துட்டா, அதைப் பிடுங்கி வைத்து, 'இந்தாங்க துணிப் பை'ன்னு சொல்றாங்க... இந்த, 'மூவ்' நல்லா இருக்குன்னு, எல்லாருமே பாராட்டுறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.''கோவில்ல வேலை செய்யிறோமே... நல்லபடியா இருக்கணுமேன்னு யாருமே நினைக்கிறதில்லேன்னு தோணுது வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி.''எந்த கோவில் விவகாரம் இது... சிலை திருட்டு பிரச்னையா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.''திருச்சி, உறையூர் பகுதியில, நாச்சியார் கோவில் இருக்குதில்லையா... அங்கே ஆபீசுல ஒரு கண்காணிப்பாளர் இருந்தார்... அவர் மேலே, பண முறைகேடு புகார் இருக்கு... அவருக்கு மேலதிகாரிங்க, ஸ்ரீரங்கத்துல இருக்காவ... சரியா விசாரிக்கா மலேயே, டிரான்ஸ்பர் போட்டுட்டாவ...''இந்த மனுஷனோ, திருச்சி அறநிலையத் துறையில இருக்குற, சபலிஸ்ட் ஒருத்தரைப் பிடிச்சு, தன் மேலே இருந்த நடவடிக்கைலேர்ந்து தப்பிச்சிட்டார்... இடையில, இவர் பதவிக்கு பாலுன்னு ஒருத்தர் வந்தாரு... அவரோ, இங்கே நடக்குற விவகாரத்தைப் பார்த்து, 'நான் பொறுப்பேத்துக்க மாட்டேன்'னு சொல்லிட்டு போயிட்டாரு... இந்த நபரைப் பிடிச்சு விசாரிச்சா பெரியளவுல, பண முறைகேடு வெளிச்சத்துக்கு வரும்னு சொல்லுதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.''சுதர்தன மந்திரம் சொன்னா, எல்லாம் நேர்மையா நடக்க ஆரம்பிச்சிடும்... கோவில்ல இருக்கறவாளைச் சொல்லச் சொல்லுங்கோ...'' என, 'அட்வைஸ்' சொன்னார் குப்பண்ணா.''ஆந்திர மாநிலத்துல, புயலா பணியாற்ற ஆரம்பிச்சிட்டாங்க பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.''யாரை சொல்றீர்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.''ஆந்திர மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களா, கேரள முன்னாள் முதல்வரும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலருமான உம்மன்சாண்டியையும், தமிழகத்தை சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் செயலர் மெய்யப்பனையும் நியமிச்சிருக்காங்கல்ல... அவங்க ரெண்டு பேரும், பதவி ஏத்துக்கிட்டதும், முதல் வேலையா, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டியை, மீண்டும் காங்கிரசில் சேர்க்குற வேலையை ஆரம்பிச்சிட்டாங்க...''அடுத்ததா, கட்சியிலேர்ந்து பிரிஞ்சி போன எல்லாரையும் ஒண்ணு சேர்க்குற முயற்சியில இறங்கி இருக்காங்க... ஒய்.எஸ்.ஆர்., ரெட்டி கட்சியின் தலைவர்களையும் காங்கிரஸ் கட்சிக்கு இழுக்க, மெய்யப்பன் பேச்சு நடத்தியிருக்காரு... முன்னாள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் சிலர், தலைவர் ராகுல் முன்னிலையில, கட்சியில சேர விருப்பம் தெரிவிச்சிருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.''தமிழகத்துல இருக்கறவாள்ட்ட, எந்த சுறுசுறுப்பையும் காணோம்...'' என்றபடி, கிளம்பினார் குப்பண்ணா.மற்றவர்களும் கிளம்பினர்; பெஞ்ச் அமைதியானது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement