Advertisement

இது உங்கள் இடம்

வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும்ரா.சஞ்சனா, சமூக ஆர்வலர், நெல்லையிலிருந்து எழுதுகிறார்: பழநி முருகன் கோயிலில் நடந்த சிலை முறைகேடுகள் ஒவ்வொன்றாக அரங்கேறி வருவது பக்தர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

'குற்றாலத்தில் திருக்குற்றால நாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஓட்டல் நடத்தி வரும் ஒருவர் 20 ஆண்டுகளாக வாடகை செலுத்தவில்லை' என்ற தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது, 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது போலத்தான் பார்க்க வேண்டும். இப்பிரச்னை குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, ஆறுதலான விஷயம். கோயில்களில் நடக்கும் முறைகேடுகளை நேர்மையாக விசாரித்து உண்மை நிலவரத்தை வெளிக்கொணர வேண்டும்.

தமிழகம் முழுவதும் பல கோயில்களில் இதுபோன்ற கொள்ளை விவகாரங்கள் அதிகரித்து வருகின்றன. அதை கோயில் நிர்வாகங்கள் 'பஞ்சாயத்து செய்து சமாளித்து விடுகின்றன. தமிழக அரசு நடவடிக்கை எடுத்து முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர தயங்க கூடாது.

---

அதிகாரிகளின் சோம்பலை விரட்டலாம்!க.மாதேஸ்வரன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: மதுரையில் ஒரு பிரபலமான மால் அமைந்துள்ள இடத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்தது. அந்த வழியாக செல்லும் மாநகராட்சி கமிஷனர் குராலா இதனை கவனித்துக் கொண்டே இருந்தார். ஒருநாள் நகர் பொறியாளரிடம் இது பற்றி கேட்டுள்ளார்.

அதற்கு அடிக்கடி அந்த இடத்தில் தண்ணீர் வெளியேறுவது வழக்கம் என சமாளித்தார். இந்த பதிலால் கோபமான அவர், 'நீங்கள் பொறியாளர் தானே' என கேள்வி கேட்டதுடன், அந்த பிரச்னையை ஒரு நாளில் சரி செய்து அதன் மேல் ரோடு போடுங்கள் என உத்தரவிட்டார். நீண்ட நாள் பிரச்னைக்கு ஒரே உத்தரவில் தீர்வு கிடைத்தது.

இன்றைய நவீன வளர்ச்சியில் வாட்ஸ்ஆப், அலைபேசியில் புகார்களை அனுப்பினால் போதும் பிரச்னை சரியாகும் நிலைக்கு வளர்ந்துள்ளோம். ஆனாலும் பிரச்னைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன் என்ன பிரச்னை வந்ததோ, அதே பிரச்னை இப்போது வந்துள்ளது. இப்போதும் அதே நகர் பொறியாளர் தான் பணியில் இருக்கிறார். தினமும் அந்த இடத்தை பார்த்துக் கொண்டே செல்கிறார். ஆனால் அந்த கமிஷனர் இன்று இல்லை.

சோம்பேறித்தனமாகவும், ஆய்வுகளுக்கு செல்லாமலும் மக்கள் பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் கண்களை மூடிக்கொண்டு, புதிய திட்டங்களின் கனவுகளோடு அதிகாரிகள் சுயலாபங்களுக்காக காத்திருக்காலம். கஷ்டங்களும், நஷ்டங்களும் பொதுமக்களுக்கு தானே என சாதாரண மக்கள் இவற்றை கடந்து செல்வதை தவிர வேறு வழியும் இல்லை!

----

தலைமுறைக்காக தவிர்க்கலாமே!எம்.ஒளிவிளக்கு, மானாமதுரையிலிருந்து அனுப்பிய இ- மெயில்' கடிதம்: பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வரும் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசு உருப்படியாக ஒரு விஷயத்தை சத்தமின்றி செய்திருக்கிறது. பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் சட்டசபை விதி எண் 110 கீழ் 2019 ஜன., 1 முதல் தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

நமக்காக இல்லை என்றாலும் கூட வருங்கால நம் தலைமுறையினருக்காக சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை தவிர்க்க வேண்டும். இதை அரசு மட்டும் தான் செய்ய வேண்டும் என புறந்தள்ளக்கூடாது. வனப்பகுதிக்கு கொட்டமடிக்க செல்வோர் விட்டு வரும் பாலிதீன் பொருட்களை சாப்பிட்டு குரங்கு, யானை உட்பட வன விலங்குகள் இறப்பது வாடிக்கையாகி வருகிறது. பருவமழை தவறுவது ஒரு புறமிருக்க மறுபுறம் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதற்கு மண்ணில் புதையுண்ட பிளாஸ்டிக் பொருட்களும் ஒரு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே அரசு அலுவலர்கள் செய்யட்டும் என ஒதுங்கி கொள்ளாமல் நாம் எல்லோரும் இணைந்து இன்று முதல் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை பயன்படுத்த கூடாது என உறுதி மொழி ஏற்க வேண்டும். கடைகளுக்கு செல்லும் போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத துணிப்பைகளை கொண்டு செல்லவும் முடிவு செய்தால் வருங்கால சந்ததியினருக்கு வசதியாக இருக்கும். பூமித் தாயையும் காக்க முடியும். சிந்திப்போமா...

---

தமிழகத்திற்கு எண்ணிலடங்கா திட்டம்ஆர். சுபா மாலினி, குடும்ப தலைவி, காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை எதிர்ப்பதையே சிலர் குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர். நாட்டை பாதுகாக்க சென்னையில் ராணுவ தளவாட தயாரிப்பு மையம் அடிக்கல் நாட்ட வந்த அவருக்கு கருப்பு கொடி காட்டி 'மோடி கோ பேக் டூ இந்தியா' என கோஷமிட்டனர். இது போன்று மத்திய அரசின் திட்டங்களை எதிர்ப்பது நியாயம் இல்லை.

கடந்த 10 ஆண்டுகள் மத்தியில் காங்., உடன் கூட்டணி வைத்த தி.மு.க., அரசு 10 அமைச்சர்களை வைத்திருந்தும், பெரிதாக சொல்லும் அளவிற்கு வளர்ச்சி திட்டங்களை எடுத்து வரவில்லை. இக்கூட்டணி ஆட்சியில் தான் தமிழக மீனவர்கள் அதிகம் தாக்குதலுக்கு உள்ளாகினர். அவர்களை காக்கும் விதத்தில் மீனவர்களுக்கு புது படகு, கப்பல் தயாரிக்க, 1,500 கோடி ஒதுக்கியுள்ளது.

சாலை வசதி மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த ரோடு மேம்பாட்டிற்கு மட்டும் 1,200 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஒரே ஒரு எம்.பி.,யை வழங்கிய தமிழகத்திற்கு இவ்வளவு நிதியா என வியக்கும் விதத்தில் திட்டங்களுக்காக நிதியை மத்திய அரசு ஒதுக்குகிறது. தமிழகத்திற்கு நன்மை செய்பவர்கள் யார் என அறிந்து மக்கள் சிந்தித்து செயல்படுவது அவசியம்.

---

நாவை அடக்கி பேசுங்கள் சீமான்எஸ். நரேந்திரன், தர்மபுரியிலிருந்து அனுப்பிய 'இ-மெயில்' கடிதம்: தமிழகத்தில் அனுபவம் வாய்ந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு மிகுந்த பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது நானும் அரசியல்வாதி தான் என பலர் அரசியல் களத்தில் வந்து பேசுகின்றனர். அவர்கள் பேச்சு ஆரோக்கியமானதாக இல்லாமல் இளைஞர்களை உசுப்பிவிடும் வகையில் உள்ளது. இதற்கு சிறந்த உதாரணமாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை சொல்லலாம். அவரது பேச்சு வன்முறையை துாண்டுவதாக உள்ளது.

''நம் மீது வழக்கு போட்டு நாம ஜெயிலுக்கு போனால் தான் வழக்கறிஞர்களுக்கு வேலை. இல்லையென்றால் கருப்புச் சட்டை போட்டு காக்காய் ஓட்டத்தான் அவர்கள் போக வேண்டும்,'' என வழக்கறிஞர்களை வாரியுள்ளார். கூட்டம் ஒன்றில் அவர் 'ஓபன் மைக்'கில், ''யாரையும் வெட்டுவேன். பாளை அரிவாளை தான் நான் தலைக்கு வைத்தே படுப்பேன். நாங்கல்லாம் வாளோடும், வேலோடும் இருப்பவிங்க... தல, சின்ன தளபதி, பெரிய தளபதி... சந்து தளபதினு பேசிக்கிட்டு திரியிறாய்ங்க... இவங்களெல்லாம் பூட்டி வச்சு கொளுத்தனும்...,'' என அவரது பேச்சுக்கள் இளைஞர்களை வன்முறை பக்கம் திருப்பிவிடும் வகையில் உள்ளன.

அவரது சமீபத்திய பேச்சுக்கள் வன்முறையை துாண்டுவதாகவே உள்ளன. அவரது கட்சி நிர்வாகிகள், ''சீமான் ஒரு போதும் யாரையும் மிரட்டியதில்லை. மிரட்டல் வழிக்கு அவர் போக மாட்டார்,'' என யாரையோ திருப்திபடுத்தும் வகையிலும், இப்படி பேசியதற்காக சீமானை கைது செய்துவிட வேண்டாம் என்பது போல் பேசுகிறார்கள்.

ஜெ., முதல்வராக இருந்திருந்தால் சீமான் இப்படி பேசுவாரா. வைகோவையே சிறையில் தள்ளிய அவர், இப்படி எல்லாம் பேசும் சீமானை விட்டு வைப்பாரா. சீமான் வார்த்தையை அடக்கி பேசுவது நல்லது. இளைஞர்களுக்கு நல்வழிகாட்டும் அரசியல்வாதி போல் பேசுங்கள் சீமான்.இல்லையென்றால் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளுங்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    தட்டிக்கேட்க ஆள் இல்லெயென்றால் தம்பி சண்டப்பிரசண்டன் என்னும் பழமொழிக்கேற்ற ஆள் சீமான் பாரதிராஜா திருமுருகன் வேல்முருகன் போன்றோர் இவர்களை அடக்கிவைக்க ஜெ போன்றதொரு தலைவித்தமிழகத்தில் இல்லாதது தமிழகத்தின் துரதிர்ஷ்டமே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement