Advertisement

இது உங்கள் இடம்

இவர்களுக்கு கடிவாளம் போடுவது யார்?க.ஆ.பொன்னுசாமி, நிறுவனர் மற்றும் மாநிலத் தலைவர், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எதிர்மறையான, ஆபத்தான விஷயங்களை மட்டுமே, இன்று சமூக வலைதளங்கள் பரப்புகின்றன. குறிப்பாக, சமூக வலைதளங்களில், பெண்கள் நீடிப்பது என்பது, எவ்வளவு பெரும் சவாலான விஷயம் என்பதை, எனக்கு நேர்ந்த சம்பவத்தை கூறி, வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...

என் மொபைல் போனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்'கில் இருந்து, முற்றிலும் வெளியேறினேன். என் மனைவி புகைப்படத்துடன், அவரது பெயரில், புதிய கணக்கை, 'பேஸ்புக்'கில் துவக்கினேன். அப்போது தான், 'பேஸ்புக்'கில், பெண்கள் தங்கள் சொந்த அடையாளத்துடன் பயணிப்பது, எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்தேன். என் மனைவியின் பெயரில், புதிய கணக்கை துவக்கிய, ஓரிரு நாளில் மட்டும், 1000க்கும் மேற்பட்டோரிடம் இருந்து, நட்பு அழைப்புகள் வந்திருந்தன. அதன் பட்டியலை பார்வையிட்ட போது, கடும் அதிர்ச்சியாக இருந்தது.

நட்பு அழைப்பு விடுத்திருந்தோரில், 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட கணக்குகள், ஆபாச படங்களை கொண்டு செயல்பட்டு வரும், போலி கணக்குகளாகவே இருந்தன. இவற்றை எல்லாம் பார்த்து, ஒரு பெண்ணால் எவ்வாறு, சமூக வலைதளங்களில் தொடர முடியும் என்பதை உணர்ந்தேன். அதை மீறி, மன உறுதியோடு பயணிக்கும் பெண்கள், படும் மன உளைச்சலை, எளிதில் சொல்லி அளவிட முடியாது.

சோளக்காட்டு பொம்மைக்கு, அழகான புடவை கட்டி விட்டால், அந்த பொம்மையை, பெண் என நினைத்து, அவளை எப்படி அடையலாம் என, கணக்கு போடும் கலிகாலமாக மாறி விட்டது. அந்தளவிற்கு சமுதாயத்தை மாற்றியவை, சமூக வலைதளங்கள் என்பதை, ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

தற்போதைய சூழலில், சமூக வலைதளங்கள், பெண்களுக்கு வரம் அல்ல; சாபமாக இருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும், பெண்கள் வெறும் போகப் பொருளாக மட்டுமே பார்க்கப் படுகின்றனர். சபல புத்தி கொண்டோரையும், ஆபாச கருத்துகளை மட்டுமே வாந்தி எடுப்போரையும், போலி ஆபாச கணக்குகள் மூலம், பாலியல் ரீதியாக தொல்லை தருவோரையும், சமூக வலைதளங்களில் அடையாளம் காண வேண்டிய தருணம் இது. அரசும், நீதிமன்றங்களும், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்தாக வேண்டும்!

----

தமிழக அரசு நினைத்தால் எல்லாம் சாத்தியம்!எஸ்.சிதம்பரேச அய்யர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: குஜராத் மாநிலத்தில், வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர், விவசாயத்திற்கு தரப்படும் தண்ணீருக்கு அளவீடுகள் வைத்து உள்ளனர். வீடுகளுக்கு, ஒரு குறிப்பிட்ட அளவு வரை, குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட, கூடுதலாக குடிநீர் பயன்படுத்தினால், கட்டணம் உண்டு. வீடு, ஓட்டல்கள், பொது நிறுவனங்கள் குடிநீர் பயன்பாட்டிற்காக, கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

விவசாய நிலங்களுக்கு பாயும் தண்ணீரும், குறிப்பிட்ட அளவு வரை இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்கு மேல் உபயோகிப்போரிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே வழிகளை, தமிழகத்திலும் பின்பற்றலாம். அன்று காவிரியால், டெல்டா மாவட்டங்களில், மூன்று போக விவசாயம் நடந்தது. இன்று, ஒரு போக விவசாயத்திற்கே, தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

கர்நாடகா, கேரளா, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களிடையே, காவிரி நதி நீரை பங்கிடுவதில் பிரச்னைகள் நிலவுகின்றன. எத்தனையோ உத்தரவுகளை, உச்ச நீதிமன்றம் போட்டும், கர்நாடக அரசு பணிய மறுக்கிறது. கர்நாடகாவில், மழை வெளுத்து வாங்கி, அங்குள்ள அணைகள் முழுவதும் நிரம்பினால் மட்டுமே, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தமிழகத்திற்கு தண்ணீர் கேட்டால், 'எங்களுக்கே, போதுமான தண்ணீர் இல்லை. அப்படி இருக்கையில், தமிழகத்திற்கு, எப்படி தண்ணீர் திறந்து விட முடியும்...' என, கர்நாடக மாநிலத்தை ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் வாதம் செய்கின்றன.

தற்போது, காவிரி நதி நீர் மூலம், தமிழகத்தில், ஒருபோக விவசாயமே நடக்கவில்லை. தமிழகத்தில், 4,000க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய நீர்த்தேக்கங்கள் உள்ளன. மாநிலம் முழுவதும், ஆக்கிரமிப்பில் சிக்கிய நீர்நிலைகளை உடனடியாக மீட்க வேண்டும். கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளை, முற்றிலும் நீக்க வேண்டும்.

குஜராத் மாநிலத்தை போல், குடிநீரையும் முறையாக வினியோகிக்கும் பணிகளை, அரசே மேற்கொள்ள வேண்டும்.சொட்டு நீர்ப்பாசன முறையை, தமிழக விவசாயிகள் பயன்படுத்த, அரசு முயற்சிக்க வேண்டும். இவையெல்லாம் நிறைவேறினால், தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையை தீர்க்கலாம்!

---

கமிஷன் வாங்கி ஊறி போனவராக இருந்திருப்பாரோ?அ.நசிமுதீன் சித்திக், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கமிஷன் பெறுவதற்காக தான், சென்னை - சேலம் எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கப்படுகிறது' என, தி.மு.க.,வின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறிக் கொண்டிருக்கிறார்; அவர் சாதாரணமானவர் அல்லர்.

சென்னை மாநகராட்சி மேயராக இருந்தவர்; துணை முதல்வராக இருந்து, அரசு நடவடிக்கைகளில் ஊறித் திளைத்தவர். அரசு நிர்வாகமானது, எப்படி இயங்கும் என்பதை, கரைத்து குடித்தவர். அவர் சும்மா பொழுது போவதற்கோ, விளையாட்டாகவோ, வேடிக்கைக்காகவோ எதையும் கூற மாட்டார்; எதையும், கணித்து தான் கூறுவார்!

மேயராக கோலோச்சிய போதும், துணை முதல்வராக பவனி வந்த போதும், சென்னை மாநகருக்கும், தமிழகத்திற்கும் எத்தனை திட்டங்களை செயல்படுத்தி இருப்பார். அந்த திட்டங்களில், கமிஷனே வாங்காமல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் இவை என, ஒரு சில திட்டங்களைசுட்டிக் காட்ட முடியுமா?

பல திட்டங்களை கூற வேண்டாம்... ஏதாவது ஒரு திட்டத்தை, தி.மு.க., ஆட்சியிலிருந்த போதோ அல்லது ஸ்டாலின் மேயராக கோலோச்சிய போதோ, 'நிறைவேற்றினோம்' என, சுட்டிக் காட்ட முடியுமா?

'பாம்பின் கால் பாம்பறியும்' என்ற சொலவடையை போல், ஆட்சியாளர்கள் கமிஷன் வாங்கும் செயலை, இவர் சரியாக சொல்கிறார் என்றால், என்ன அர்த்தம் என்பதை, மற்ற வாசகர்களின் யூகங்களுக்காக விட்டு விடுகிறேன்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • venkat Iyer - nagai,இந்தியா

    When Stalin as Mayer,He has been visited many street to advised the public,to put it this dustbin in your messages.Don't spilt in the Road.I saw him every month AT least one time.I am photo.He has been very much interested City develop in Singara சென்னை He had visited Singapore Govt discussed the Street light and Control the Wastage Management.There was no drought Stalin Mayor period are very excellent time.I don,t know,who is the Mayor at present .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement