Advertisement

இது உங்கள் இடம்

ஸ்டாலினை கிண்டல் செய்ய வேண்டாமே!எஸ்.கல்யாணி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., தன் இறுதி நாட்களில், கர்நாடக மாநிலத்தில் உள்ள, கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றதாகவும், நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டதாகவும் செய்திகள் உண்டு. கே.ராஜாராம் என்பவர், தி.மு.க.,வில் இருந்தபோது, ஈ.வெ.ரா.,வின் தீவிர தொண்டர். அவரது மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவர் வேண்டுகோளுக்கு இணங்க, அவரை அழைத்துக் கொண்டு, திருப்பதி சென்றார். பல சமயங்களில், காஞ்சி பெரியவரை சந்தித்து, ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டார்.

காங்கிரசில், கே.விநாயகம் என்ற ஒரு, எம்.எல்.ஏ., இருந்தார். அவர் அண்ணாதுரையின் கல்லுாரி தோழர். ஒருமுறை, அவர் அண்ணாதுரையுடன், திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்றார். முருகன் சன்னதி வரை, அண்ணாதுரை சென்றார். முருகனுக்கு கற்பூரம் காட்டிய போது, அதுவரை கையெடுத்து கும்பிடாத அவர், கையெடுத்து கும்பிட்டதாக செய்திகளும் உண்டு.

ஒரு சமயம், ஈ.வெ.ரா.,வுக்கு, ஒருவர் குங்குமப் பொட்டு வைத்து விட்டார். அதை, அவர் அழிக்கவே இல்லை. சிரித்தபடியே பேசாமல் இருந்து விட்டார்.ஒரு வழக்கில், நடிகர், எம்.ஆர்.ராதா சிறைக்கு செல்ல வேண்டியதாயிற்று. விடுதலையாகி வந்த போது, தெலுங்குப் பட வசனகர்த்தா தேவ நாராயணனை அழைத்து, 'கம்பராமாயணம் முழு கதையை கூறு' என கேட்டாராம்; பின், கம்பராமாயணத்தை, எம்.ஆர்.ராதா மற்றவர்களுக்கு கூறுவாராம்!

'கடவுளே இல்லை' எனக் கூறிய பகுத்தறிவாளர்கள் பலரின் வாழ்க்கையில், இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு போனார். அவரது நெற்றியில் மஞ்சள் வைக்கப்பட்டது. உடனே, அதை அவர் அழித்து விட்டார். முதல்வர் பதவியை பெற, ஸ்ரீரங்கநாத பெருமாளை வழிபடுகிறார் என்றெல்லாம் பேசப்படுகிறது. அவரது மனைவி துர்கா, கோவில் கோவிலாக சென்று, தன் கணவர் விரைவில் முதல்வர் ஆக வேண்டும் என வேண்டுகிறார், என்ற செய்தியும் பரவலாக பேசப்படுகிறது. ஸ்டாலினை கிண்டல் செய்ய தேவை இல்லை; ஸ்டாலினும் அதை மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை!

---

'துட்டு' கொடுத்தால் எட்டு போடாமல் லைசென்ஸ்!என்.நக்கீரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மதுரை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக லஞ்சம் பெற்று அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள், கண்காணிப்பாளர்கள் கோடீஸ்வரர்களாக வாழ்கின்றனர்.

'மழைக்குக் கூட, பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர்களுக்கு, 'டிரைவிங் லைசென்ஸ்' வழங்கி, பெருமைப்படுத்தி இருக்கின்றனர். லஞ்சம் வாங்குவதில், சளைத்தவர்கள் நாங்கள் இல்லை என்பது போல், ஆண்களுக்கு இணையாக, பெண் ஊழியர்களும் லஞ்சம் வாங்கி உள்ளனர்' என, நாளிதழில் செய்தி வெளியானது.

மதுரையில் மட்டும், வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் ஊழல் பெருச்சாளிகளாக இருக்கின்றனர் என, யாரும் நினைத்துவிட வேண்டாம்.தமிழகம் முழுவதும், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணிபுரிவோர், லஞ்சம் வாங்குவதை, அங்கீகரிக்கப்பட்ட பிறப்புரிமை போல் ஆக்கிக் கொண்டனர். எட்டுப் போடத் தெரியாதவர்கள் எல்லாம், துட்டுக் கொடுத்து லைசென்ஸ் வாங்கி விட்டனர். வாகனங்கள் பெருகிவிட்டதால், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், லைசென்ஸ் பெற, லஞ்சப் பணம் கோடி கோடியாக குவிகிறது.

இந்த அலுவலகங்களில் வேலை பார்க்கும் சாதாரண பியூன் கூட, கலெக்டர் வாங்கும் சம்பளத்தை விட அதிகம் சம்பாதிக்கிறார்; இது தான், நிதர்சனமான உண்மை!தமிழகத்தில், லஞ்சம் செழித்து வளரும் அலுவலகங்களின் பட்டியலில், சார் - பதிவாளர் அலுவலகம், ஊராட்சி அலுவலகம், விற்பனை வரி அலுவலகம் போன்றவை முன்னணியில் அடங்கும். என்ன தான் லஞ்சம் ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுத்தாலும், இவற்றில் பணிபுரிவோர் திருந்த வாய்ப்பே இல்லை.

'கொன்றால் பாவம் தின்றால் போச்சு' என நினைக்கும், இந்த உத்தம சிகாமணிகள், கடவுளிடமும் லஞ்சம் வாங்காமல் காரியம் முடிக்க மாட்டார்கள்.'லஞ்சம் வாங்காமல், நேர்மையாக வாழ நினைத்தால், எங்களை மனைவி கூட மதிக்க மாட்டாள். பிள்ளைகளும், எங்களை பார்த்து காறித் துப்புவர். நாய் விற்ற காசு குரைக்காது; மீன் விற்ற காசு நாறாது; லஞ்சமாக வந்த பணம் பாவத்தில் சேராது என்பது, உத்தமபுருஷர்களின் பதில் மனுவாக உள்ளது!

---

எதிர்கால சந்ததியினருக்கு பரிசாக தருவோம்!ஏ.காதர் மைந்தன், ராமநாதபுரத்திலிருந்து எழுதுகிறார்: சாணக்கியரின், 'அர்த்த சாஸ்திரம்' என்ற பழமையான நுாலில், 'நாட்டின் நலனுக்காக, ஒரு ஊரை பலியிடலாம்' என, குறிப்பிடுகிறார். பலியிடலாம் என்பது, இன்றைய காலகட்டத்திற்கு, பாதிப்புக்குள்ளாகும் என்று பொருள்.

நாட்டின் நலனுக்காக, அபிவிருத்தி திட்டம் நிறைவேற்றப்படும் போது, நிச்சயமாக சிலர் பாதிப்புக்கு உள்ளாவர். தமிழகத்தில், எங்கும், எதற்கும் எதிர்ப்பு என்ற தவறான சித்தாந்தம், தலை துாக்கியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் மின் திட்டம், ஒரியூரில் மின் திட்டம், சேது சமுத்திர திட்டம், சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள், எதிர்ப்பின் காரணமாக செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது. தனியார் நிலங்களை அரசு கையகப்படுத்தும் போது, சவுதி அரேபியா போன்ற நாடுகளில் கடைபிடிக்கப்படுவது போல், நிலத்தின் மார்க்கெட் மதிப்பை போல், 5 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும்; அதுவும் நிவாரணத் தொகை விரைவாக வழங்கப்பட வேண்டும்.

இன்று, லஞ்ச லாவண்யத்திலும், ஊழலிலும் கொடி கட்டி பறக்கிறது, மாநில வருவாய் துறை. நிலத்தை இழக்கும் மக்கள், விட்டு கொடுக்க மனமின்றி போராடுகின்றனர். இன்று வானுயர்ந்த கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தாலும், ஒரு காலத்தில், அது விவசாய நிலமாக தான் இருந்திருக்கும். ரயில் பாதை, சாலைகள் உருவானதும், அதே பாங்கில் தான்!

நாணயத்துக்கு, இரண்டு பக்கங்கள் உள்ளது போல், ஒரு திட்டம் துவங்கும் போது, ஒரு சிலருக்கு பாதிப்பு உண்டாவது இயற்கை; இது தவிர்க்க முடியாதது. அபிவிருத்தி திட்டங்களுக்கு, மக்கள் முழு மனதுடன் ஒத்துழைப்பு தர வேண்டும். அப்போது தான், எதிர்கால சந்ததியினருக்கு, வளமான இந்தியாவை, பரிசாக விட்டுச் செல்ல முடியும்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

 • bal - chennai,இந்தியா

  வெளியில் ஒன்று உள்ளில் ஒன்று ஏன் வேஷம் போட வேண்டும்....இந்த குடும்பமே அப்படிதான்...

 • Bhaskaran - Chennai,இந்தியா

  அண்ணாதுரை முதல்வரானவுடன் ஒருபேட்டியில் சொன்னார் தேங்காயும் உடைக்கமாட்டேன் பிள்ளையாரையும் உடைக்கமாட்டேன் என்று அது அவரது கொள்கை ஆனால் மற்றவர்கள் மறைமுக யாகம் செய்துகொண்டும் வெளியில் பகுத்தறிவு வாதம் பேசுவதும் என்ன நியாயம் ஒரு காணொளி பார்த்தேன் அதில் தி.க. தலைவரின் பேரனுக்கு நடந்த திருமணத்தில் அவர் தாலியெடுத்து கொடுத்து கட்டவைத்து ஆசீர்வதிக்கிறார் ஊருக்குத்தான் உபதேசம் தனக்கு இல்லையோ

 • s.rajagopalan - chennai ,இந்தியா

  அவர் சொல்வதை கேட்பதா என்று இப்போது பகுத்தறிவாளர்கள் கேட்பார்களே ?

 • Usuf Ali - Chennai,இந்தியா

  Corruption ... Reader has written that there is rampant corruption in RTO. Corruption can be totally eliminated, if people stops giving bribe and follows the set rules and regulations. Since we have no patience to get the service or we have no eligibility to get the same, we are bargaining with the officials to get our things done by hook or crook. In Iran country, the punishment is severe to those who attempt to give bribe to govt officials. Better let us try to be honest in the interest of our future generation.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement