Advertisement

டீ கடை பெஞ்ச்

அரசு விடுதியில் தெறித்து ஓடிய மத்திய மந்திரி!''கருணாநிதியை அழைச்சிட்டு போக, போட்டி போடுறாங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.

''அவர் தான், உடம்பு சுகமில்லாம, 'ரெஸ்ட்' எடுத்துட்டு இருக்காருல்லா...'' என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

''ஆமாம்... கிட்டத்தட்ட, ஒன்றரை வருஷத்துக்கும் மேலா, சென்னை, கோபாலபுரம் வீட்டுக்குள்ள தான் இருக்கார்... அப்பப்ப, ராஜாத்தியின், சி.ஐ.டி., காலனி வீடு, அறிவாலயம்னு அழைச்சிட்டு போறாங்க பா... ''சமீபத்துல, கருணாநிதியை, கோடம்பாக்கத்துல இருக்குற தன் வீட்டுக்கு, மகன் தமிழரசு அழைச்சிட்டு போனார்... ஆழ்வார்பேட்டையில இருக்குற தன் வீட்டுக்கும், கருணாநிதியை அழைச்சிட்டு போக, ஸ்டாலின் முடிவு செஞ்சிருந்தாராம் பா...

''அழகிரி, சென்னையில இருக்குற தன் மகள் வீட்டுக்கு அழைச்சிட்டு போகணும்னு சொல்லியிருக்கார்... இப்படி, ஆளாளுக்கு கேட்டதால, தன் வீட்டுக்கு அழைச்சிட்டு போறதை ஸ்டாலின் தள்ளி வச்சுட்டாராம் பா...'' என்றார் அன்வர்பாய்.

''காசு கொடுத்தா தான் காரியம் நடக்கும் வே...'' என, அடுத்த விஷயத்திற்கு தாவினார் அண்ணாச்சி.

''எந்த துறையில ஓய்...'' என கேட்டார் குப்பண்ணா.

''பெரம்பலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில தான்... இங்க, நோயாளிகள் பணம் குடுத்தா தான், சிகிச்சை கிடைக்கும்... குளூக்கோஸ் ஏத்த, பாட்டிலுக்கு, 20 ரூபாய்; பெட்ஷீட்டுக்கு, 20; ரத்தம் ஏத்த, 200; ஆப்பரேஷனுக்கு, 1,000த்துல இருந்து, 2,000 ரூபாய் வரை வசூலிக்காவ வே...

''பிரசவத்துல, ஆண் குழந்தை பிறந்தா, 1,000, பெண் குழந்தைன்னா, 500 ரூபாய், நர்சுக்கு குடுத்துடணும்... இதுக்குன்னே, மருத்துவமனையில புரோக்கர்கள் சுத்தி வர்றாவ... இந்த வசூல் வேட்டையால, ஏழை நோயாளிகள் ரொம்பவே சிரமப்படுதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''உள்ளே போன வேகத்துல, ஓடி வந்துட்டாருங்க...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் அந்தோணிசாமி.

''யார், எங்க போனாங்க பா...'' என கேட்டார் அன்வர்பாய்.

''மத்திய விவசாய துறை இணை அமைச்சர் கிருஷ்ணராஜ், நாலு நாளைக்கு முன்னாடி, ராமேஸ்வரம் போற வழியில, மதுரை வந்தார்... ராத்திரி தங்குறதுக்காக, அவருக்கு, சர்க்யூட் ஹவுஸ் கீழ் தளத்துல அறை ஒதுக்கியிருந்தாங்க...

''அறைக்குள்ள நுழைஞ்ச அமைச்சர், 'ஷாக்' ஆயிட்டார்... ஏன்னா, அறை படுமோசமா இருந்திருக்கு... பாத்ரூம் எல்லாம் சரியா சுத்தம் செய்யாம இருந்திருக்கு... ஒரு சோப் கூட இல்லைங்க... ''வேற பெரிய அறை இல்லையான்னு ஊழியர்களிடம் கேட்டதுக்கு, 'இது தான் ப்ரீயா இருக்கு'ன்னு சொல்லிட்டாங்க... உடனே, வெளியில வந்த அமைச்சர், பக்கத்துல இருந்த பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல்ல போய் தங்கிட்டாருங்க...

''மத்திய, மாநில அமைச்சர்கள், முதல்வர், நீதிபதிகள்னு, அடிக்கடி முக்கிய விருந்தினர்கள் வந்து தங்குற சர்க்யூட் ஹவுஸ் பராமரிப்பு படுமோசமா இருக்குங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.

அரட்டை முடிய, அனைவரும் கலைந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    காசுகொடுத்தால் circut ஹவுசில் நல்ல அறைகள் கொடுக்கப்படும் என்று தெரியாதா

  • சுந்தரம் - Kuwait,குவைத்

    ஏனுங்க கருணாநிதிக்கு பல்லு வலி வந்திருக்கறதாகவும் அதுனால அவரால பேச முடியைன்னும் தொண்டர்கள் யாரும் அவரை கூட்டங்களுக்கு பேச அழைக்க வேண்டாம் என்றும் ஒரு அறிவிப்பு வந்திச்சே.

  • சுந்தரம் - Kuwait,குவைத்

    ஸ்டாலின் வேளச்சேரிலதானே பெரிய்ய வீட்டுல இருக்காரு. இப்போ எப்படி ஆழ்வார் பேட்டைக்கு வந்தாரு? ஒருவேளை சின்ன வூடா இருக்குமான்னு தனபாலு அண்ணாச்சி டவுட்டை கெளப்புதாக.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement