Advertisement

இது உங்கள் இடம்

அழிக்காமல் சிதைக்காமல் உருவாக்க முடியும்!
பா.விஜய், காட்டிகன், சுவிட்சர்லாந்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நான், சுவிட்சர்லாந்து, ஜூரிக் நகரில் தங்கியுள்ளேன். இங்கு, பல மலைகளை குடைந்து, சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சில மீட்டரில் துவங்கி, 500 கி.மீ., நீளமுள்ள குகை பாதைகளில், 100 கி.மீ., வேகத்தில் வாகனங்கள் செல்கின்றன. குகைக்குள் போதுமான வெளிச்சமும், ஆங்காங்கே ஓரத்தில் அவசரகால போன் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நேர்த்தியான சாலைகள் பார்வையாளர்களை வியக்க வைக்கின்றன.

சுவிட்சர்லாந்தின் நிலப்பரப்பு, தமிழகத்தின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு தான்; மக்கள் தொகை, 80 லட்சம் மட்டுமே. தமிழகத்தில், 7.5 கோடி மக்கள் உள்ளனர். பெருகும் மக்கள் தொகைக்கேற்ப, போக்குவரத்து வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். இதற்காக, சென்னை- - சேலம் இடையே எட்டு வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில், எட்டு மலைகள், பல ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளன. அவை அனைத்தும் அழிக்கப்பட்டு விடும் எனக் கூறி, 'கையேந்தும் போர்வையாளர்கள்' வதந்தி பரப்பி வருகின்றனர்.

மலை, ஏரி, ஆறு போன்றவற்றின் வளமும், வனப்பும் கெடாமல், சாலைகள் அமைக்க முடியும். மலைகளை குடைந்து சாலைகள் அமைக்கப்படும் போது, மலைகளின் மரங்கள், அவற்றின் கனிம வளம், இயற்கை அழகு, அங்கு வாழ்வோரின் இருப்பிடங்கள் பாதிக்கப்படாது. ஏரிகள், ஆறுகளின் மீது பாலங்கள் அமைத்து சாலைகள் நிர்மாணிக்கப்பட்டால், ஏரிகளின் கொள்ளளவோ, ஆறுகளின் ஓட்டம் மற்றும் அவற்றால் பாசனம் பெறும் பரப்போ, எவ்விதப் பாதிப்புக்கும் உள்ளாகாது.

உதாரணமாக, சென்னை, போரூரில், ஏரியின் மீது அமைந்துள்ள பை-பாஸ் சாலையை கூறலாம். மனித ஆற்றலும், இயற்கை வளமும் இணைந்தால், எதுவும் சாத்தியம். சென்னை - சேலம் இடையே அமைய போகும், எட்டு வழிச்சாலை மலை, ஏரி, ஆறுகளை பாதுகாக்கும் விதத்தில் அமையும் என, நம்புவோம்!

----

இலவச பொருட்களை 'ஓசி' கொடுக்காதீர் ஆசிரியர்களே!வி.ஆதங்கன், செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: நடப்பு கல்வியாண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புக்களுக்கு, புதிய பாடநுால் வெளியிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு, 14 வகையான இலவச பொருட்கள், பள்ளி கல்வித்துறையால் வினியோகம் செய்யப்படுகின்றன.

குறிப்பேடு, சீருடை, காலணி, புத்தகப்பை, அட்லஸ் உள்ளிட்டவை, குறித்த காலத்தில், பள்ளிகளுக்கு வழங்கப்படாததால், கடும் அதிருப்தி நிலவுகிறது. போதுமான எண்ணிக்கையில், அவை பள்ளிகளுக்கு வராததால், வட்டார கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் என, தலைமை ஆசிரியர்களும், மற்ற ஆசிரியர்களும் அலைய வேண்டியுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்கள் வினியோகம், குழப்பம் இன்றி, நடுநிலையோடு வழங்க, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன், விரைவில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி, புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு வகுப்புகளுக்கும், பாடநுால் மாதிரி, தற்போது இருப்பில் உள்ளது. அவை கிடைக்காததால், பாடம் நடத்த, மாணவர்களிடம் இருந்து தான் பாடநுாலை பெறுகின்றனர், ஆசிரியர்கள். இந்த வகுப்புகளுக்கு, ஒவ்வொரு பாடத்திற்கும், கூடுதலாக ஒரு பாடநுால், ஆசிரியர்களுக்கு வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற வகுப்புகளுக்கான பழைய பாடநுால்கள், ஆசிரியர்கள் கைவசம் உள்ளன; அதை வைத்து சமாளித்துக் கொள்வர். பாடநுால் மாறும் போது மட்டுமாவது, ஆசிரியர்களுக்கு ஒரு இலவச பிரதி கொடுக்கலாம்.

பள்ளிகளில் புத்தக வங்கியை ஏற்படுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களிடம் இருந்து பெறும் பழைய பாடநுால்களை பாதுகாத்து, தாமதம், பற்றாக்குறை ஏற்படும் காலங்களில், ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மாணவர்களிடமிருந்து பெறும் பழைய பாடநுால்களை, ஒருபோதும் ஆசிரியர்கள் எடைக்குப் போடாதீர்கள்!

உபரி இலவச பொருட்களை, பள்ளிகள் திருப்பி ஒப்படைக்க வேண்டும். தன் மகள், மகன், பக்கத்து வீட்டுக்காரர், உறவினர், நண்பர்களுக்கு என, இலவசப் பொருட்களை கொடுப்பதை, ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும். இப்படி செய்தால், அனைத்து மாணவர்களுக்கும், அனைத்து வகை இலவசப் பொருட்களையும் நிச்சயம் பெற முடியும்!

----

போலி மத சார்பின்மை வேண்டுமா ஸ்டாலின்?ஆர்.நடராஜன், தனியார் கலைக்கல்லுாரி முதல்வர் (பணி நிறைவு), திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: ஒவ்வொரு ரம்ஜான் நோன்பின் போதும், தவறாமல், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி அருந்துவார். கிறிஸ்துமஸ், ஈஸ்டர் பண்டிகைகளின் போது, கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்துகள் கூறுவார். ஆனால், ஹிந்து பண்டிகையான, விநாயகர் சதுர்த்தி, தசரா பண்டிகை, தீபாவளி போன்றவற்றிற்கு வாழ்த்துகள் கூற மாட்டார்.

பகுத்தறிவு பேசும் இவர்களுக்கு, தேர்தலின் போது மட்டும், ஹிந்துக்கள் கண்களில் தெரிவர். ஓட்டுகளை பெற, வீதி வீதியாக வரும்போது, நெற்றியில் குங்கும திலகமிட்டால் ஏற்றுக் கொள்வர். இவர்களின் பகுத்தறிவுக்கு முன் யாரும் நிற்க முடியாது!

இது மட்டுமின்றி, 'தி.மு.க., தலைமை யில், மதச் சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும்' என, ஸ்டாலின் முழங்குகிறார். 'முதல்வராகி விட வேண்டும் என்பதற்காக, திருச்சி, ஸ்ரீரங்கம், ரங்கநாத பெருமாள் கோவிலில் யாகம் நடத்தி, ஸ்டாலின் பூரண கும்ப மரியாதை பெற்றுக் கொண்டார்' என, நாளிதழ்களில் செய்திகள் வெளியாயின.

அவர் மனைவி துர்கா, தன் கணவர், முதல்வராக வேண்டும் என, கோவில் கோவிலாக சென்று, அங்கப் பிரதட்சணம் செய்து வருகிறார். மதச்சார்பற்ற கட்சி என்றால், சகல மதத்தினரின் பண்டிகைக்கும் சம மரியாதை கொடுக்க வேண்டும். அன்று, 'ஹிந்து என்றால் திருடன்' என, அவரது தந்தை கருணாநிதி கூறினார். ஹிந்து ஓட்டுகளை பெற மட்டும், இன்று, மகன் ஸ்டாலின் வருவாராம்; ஹிந்துகள் மட்டும் இளிச்சவாயர்களாக தெரிவர் போலும்!

பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் போன்ற தேசிய தலைவர்கள் கூட, அனைத்து மத பண்டிகைகளுக்கும், மக்களுக்கு வாழ்த்து கூறுகின்றனர். போலி மதச்சார்பின்மையை பின்பற்றும், தி.மு.க., எந்த முகத்தை வைத்து, ஹிந்துக்களிடம் ஓட்டுகள் பெற வருகிறது; இதற்கு, ஸ்டாலின் தான் பதில் கூற வேண்டும்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • JeevaKiran - COONOOR,இந்தியா

    ஆம். இனி எந்த நீர் வழித்தடத்தின் மீதும் சாலை அமைக்கப்படுமேயானால், பாலம் அமைத்து அமைக்கணும். அப்போதான் நீர்வளம் குறையாது. சென்னையில் சதுப்பு நில ஏரி மீதும், பல்லாவரம், கீழ்கட்டளை ஏரி மீதும் பாலம் அமைத்து சாலை போட்டிருந்தால், ஆக்ரமிப்பு குறைந்திருக்கும். நீர்வள அளவும் குறைந்திருக்காது.

  • venkat Iyer - nagai,இந்தியா

    This kind of activities,like against the Hindu,how can expect the Hindu votes. Respect the Hindu all festivals,than we(Hindu) consider the top Minister in our Assembly in future.Nowadays all Hindu person to praying God in different shape.Staline should change his stands untill active secretary in his party.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement