Advertisement

விளம்பரத்தால் உருவான பரபரப்பு!

மத்திய அரசு அளித்த விளம்பரத்தால் எழுந்த சர்ச்சை, இதுவரை இல்லாதது. மத்திய அரசின் வர்த்தக அமைச்சகம் மற்றும் சில துறைகளின் துணைச் செயலர் பதவிக்காக, 10 பேரை சேர்க்க, அரசு அளித்த விளம்பரம் அது.

சிவில் சர்வீசஸ் என்பது, நாடு சுதந்திரம் அடைந்த பின், சில மாறுதல்களை கொண்டிருக்கிறது. அந்தக்கால, ஐ.சி.எஸ்., மற்றும் ஐ.ஏ.எஸ்., போன்றோர், குதிரையேற்றப் பயிற்சியும் பெற்றது உண்டு.ஆனால், இப்போது அப்பயிற்சி முக்கியத்துவம் இல்லாதது. காலனித்துவ ஆட்சியில் இருந்து, நமது ஆட்சி வந்ததால், நிர்வாக சீர்திருத்தத்தில், இவர்கள் முக்கியமானவர்கள் ஆகின்றனர்.

நிர்வாக சீர்திருத்த கமிஷன் என்ற அமைப்பு, முதலில், 1965ம் ஆண்டிலும், பின், 2005ம் ஆண்டிலும் சிறந்த நிர்வாகத்திறன் உடையவர்களை பணியில் அமர்த்த ஆலோசனை கூறியது உண்டு.இதுவரை பணியாற்றிய, ஐ.ஏ.எஸ்.,களில் தமிழகத்தில், பி.வி.ராமகிருஷ்ணா, 'செபி' தலைவராக பணியாற்றி, அதை முறைப்படுத்தியது வரலாறு. உள்துறை செயலராக இருந்த பூர்ணலிங்கம், டிஜிட்டல் நடைமுறைகளில் புதிய பாதைகளை காட்டிய, விட்டல் போன்றவர்கள் இந்த நாட்டில் கவுரவம் காத்த, 'பாபு' என்றழைக்கப்பட்ட, உயர் அதிகாரிகள் பட்டியலில் இடம் பெற்றவர்கள்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் அகில இந்திய சர்வீசஸ் என்ற முதல் கட்ட பணியில் உள்ளவர்கள் எண்ணிக்கை குறைவானதே. இதில், இப்போது பொறியியல் அல்லது தொழில்நுட்ப உயர் கல்வியில் தேர்ந்த பலர், ஐ.ஏ.எஸ்., ஆக உள்ளனர்.வர்த்தகத்துறை, மத்திய எரிசக்தி துறை போன்ற பதவிகளில் உள்ள இணைச் செயலர் என்பவர், அத்துறையின் கொள்கை முடிவை உருவாக்குவராகிறார். இவர் என்ன கூறுகிறாரோ, அதை அமைச்சர்கள் அனேகமாக அப்படியே ஏற்க வேண்டி வரும். மக்கள் எதிர்ப்பு அல்லது கோர்ட் தீர்ப்புகள் வந்தபின், அதன் தவறுகள் மக்களால் உணரப்படும்.

தொடர்ந்து, நான்காண்டுகள் ஆட்சி புரிந்த பின், 10 பேர், இப்பதவிகளுக்கு திறமையுடன் பணியாற்றுவது தேவை என, கருதி, மத்திய அரசு விளம்பரம் தந்தது, சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.ஏற்கனவே, தனியார் நிறுவனங்கள் அல்லது ஆலோசனைக்குழு தலைவர் என்ற, மிகப்பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் வந்தால், அதிக பட்சமாக, 4 லட்சம் ரூபாய் வரை சம்பளத்துடன் இத்துறையில் சேரலாம் என்பது, அந்த அறிவிப்பில் உள்ள தகவலாகும்.

கொள்கை முடிவுகள் எடுப்பதில், தற்போதுள்ள வேகத்தை அதிகப்படுத்த அரசு விரும்புவதாக, இதற்குரிய விளக்கத்தை கூறுகிறது.ஏற்கனவே, 2011ல், அடிப்படை கட்டமைப்பு பணிக்கு, சாலை போக்குவரத்து துறை அமைச்சர், சி.பி.ஜோஷி இம்மாதிரி திட்டம் கொண்டு வந்ததாகவும், அது, 2,000 கோடி ரூபாய் வரை செலவினத்தை ஏற்படுத்தியதே தவிர, வேறு எந்த பயனும் இல்லை என்பது, எதிர் வாதங்களில் ஒன்று.

மேலும், மன்மோகன் சிங், மாண்டேக் சிங் அலுவாலியா போன்றோர், அரசு உயர் பதவிகளில் இதே பாணியில் அமர்த்தப்பட்டதும் வரலாறு.சரி, அரசு விருப்பப்படியே, இப்பணியில் தனித் திறமையாளர்களை அரசு நியமித்தால், ஏற்கனவே அதிகார வர்க்கத்தில் உள்ள, 'ரகசியம் காக்கும் நடைமுறை, சில நன்னடத்தை விஷயங்களில் மீறல்' வராதா என்ற கேள்வியை, உயர் அதிகார வர்க்கத்தில் உள்ள சிலர் எழுப்புகின்றனர்.

முன்னாள் மத்திய அரசின் கேபினட் செயலர் சந்திரசேகர், 'இம்முடிவை அமல்படுத்தும் பட்சத்தில், முதலில் இவர்கள், தேர்வு நடைமுறைகளில் கட்டுப்பாடுகள், அதற்கான வரைமுறைகளை முடிவு செய்ய வேண்டும்' என்கிறார். வேறு சிலரோ, மிகப்பெரிய அதிகார வர்க்கத்தை, 10 பேர் வந்ததால், என்ன செய்ய முடியும் என்கின்றனர். மாறாக, அதிகார வர்க்கத்தில் பணி வேகம், உலக தரத்திற்கு வரலாம் என்ற கருத்தும் உள்ளது.

ஆதார் அடையாள அட்டையை புரட்சிகரமாக மாற்றிய நந்தன் நிலகேனி போன்ற சிலர், பணத்திற்காக மட்டும் இன்றி, நாட்டிற்கு பணியாற்றியதும் எடுத்துக்காட்டு. வழக்கப்படி, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது. அக்கட்சியை சீராக்க, இப்போது தொழில்நுட்ப அறிஞர்கள் பலர் வந்திருப்பதையும், சேவா தளத்தில் இருந்து யாரும் வரவில்லை என்பதையும் உணரவில்லை.

நம் மாநிலத்தில், தி.மு.கவோ இம்முயற்சியை, 'சமூக நீதிக்கு சாவுமணி' என, வர்ணிக்கிறது.அதிகார வர்க்கத்தினர் ஊழலை குறைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள், 20 சதவீதம் வரை பலன் தந்த நேரத்தில், இந்த விளம்பரம் அடுத்த சர்ச்சைக்கு காரணமாகி இருக்கிறது. ஆனால், இந்த நியமனங்களுக்கு பின், இதில் ஏதும் வேண்டியவர்களுக்கு சலுகை இல்லை என்னும் பட்சத்தில், இப்பரபரப்பு தானாகவே குறையலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement