Advertisement

ஜெ., அணுகுமுறை மாறி வருகிறது...

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி வெளிநடப்பு உத்தியை தொடர்ந்த போதும், இந்தக் கூட்டத் தொடரில் பசுமை வழிச்சாலை மற்றும் சில உள்ளூர் சாலைத் திட்டங்கள் இந்த அரசால் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.சென்னை - மதுரை, அதைத் தாண்டி ராமேஸ்வரம் வரை, நான்கு வழிச்சாலையை, தேசிய திட்டத்தில் வாஜ்பாய் அரசு மேற்கொண்டது. அதன் பயன் இன்று பலருக்கு நேரடியாக தெரியும். ஒரு காலத்தில் மதுரையில் இருந்து சென்னைக்கு, 12 மணி நேரத்திற்குள் வந்து விட்டால், அது பெரிய சாதனை போல தெரியும்.ஆனால் பொருளாதார வசதி மேம்பட, 'தங்க நாற்கர சாலைத் திட்டத்தை'ப் போல, சாலைத் திட்டத்தை மத்திய அரசு இப்போது அமல்படுத்தி வருகிறது. அதற்கான துறை அமைச்சர் கட்கரியின் வேகம் அதிகம்; அதை மீடியாக்களும் ஏற்கின்றன.சென்னை - சேலம் இடையே, பசுமை வழிச்சாலை அமையும் என்பது வரவேற்கத்தக்க முயற்சி. மத்திய அரசு, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இதை அமைக்க முன்வந்திருக்கிறது என்பதை, சட்டசபையில் முதல்வர், பழனிசாமி தெரிவித்தது, காலம் மாறி வருவதன் அடையாளம். முன்னாள் முதல்வர், ஜெயலலிதா இருந்தால், இத்திட்டத்தை ஏற்பாரா அல்லது மத்திய அரசின் முயற்சி என்று சபையில் அறிவிப்பாரா என்பது சந்தேகமே.அதற்கு காரணம் இருக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்ட துவக்க விழாவில், அன்று வெங்கையா நாயுடுவுடன் பங்கேற்ற அவர், அதை பாராட்டினார். ஆனாலும், அவர், தான் விரும்பிய, 'மோனோ ரயில் திட்டத்தை' திரும்பத் திரும்ப கனவு கண்டார். மெட்ரோ ரயில், இன்று சென்னை வாசிகளின் வசதிக்கானது என்று தெரிகிறது. இத்திட்ட அமலாக்கத்தை இழுத்தடிக்கப்பட்டதை, தமிழக மக்கள் இனி உணரலாம்.சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை அமலாகும் பட்சத்தில், சென்னை - சேலம் பயண நேரம், இரண்டு மணி நேரம் குறையும். பயண துாரம், 60 கி.மீ., குறையும் என்பதைவிட, உளுந்துார் பேட்டை வரை வாகனப் போக்குவரத்துப் பயன்பாட்டு அளவு, 20 சதவீதம் குறையும்.திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள், அதிக பொருளாதார முக்கியத்துவம் பெறும். சுற்றுலா, விவசாயம், தோட்டத்தொழில் பொருட்கள் உற்பத்தி என, பன்முக அளவில், வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு அதிக இழப்பீட்டுத் தொகை, மரங்கள் அகற்றப்பட்டால், அதைப்போல பலமடங்கு மரம் நடுகை என்று, முதல்வர் இப்போது விளக்கியிருக்கிறார். இப்பகுதியில், அதிகாரிகள் உரிய விளக்கங்களை தர, அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று கூறியிருப்பதும், ஜெயலலிதா அல்லது கருணாநிதி கால அரசியலில் இருந்து மாற்றம் ஏற்படுவதன் அடையாளம்.எதற்கெடுத்தாலும், விவசாயிகளுக்கு பாதிப்பு என்று போராட்டம் நடத்தும் கூட்டம் உருவாகி வருகிறது. இந்த சூழ்நிலையில், விவாதத்தில் பங்கேற்ற, தி.மு.க., 'கல்வராயன் உட்பட மலைப்பகுதிகள் பாதிக்கப்படும்; பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படும்' என்று கூறியிருப்பது வழக்கமான புகார்.தி.மு.க., மிகப்பெரும் கட்சி. அதில் உள்ள துறைசார்ந்த வல்லுனர்கள், முன்னாள் சாலைப்போக்குவரத்து அமைச்சர் பாலு தலைமையில் குழு அமைத்து, இத்திட்ட வரையறைகளில் உள்ள ஓட்டைகளை அறிக்கையாக தருவதுடன், அதை மக்களுக்கு புரியும் வகையில், சமூக வலைதளங்களிலும் வெளியிடலாம். அது, அரசு ஊழல் பாதையில் செல்கிறதா அல்லது மத்திய அரசு ஒரு திட்டத்தைக் கூறி, அதற்குரிய நிதியை ஒதுக்காமல் இழுத்தடிக்கிறதா என்பது தெரியும்.அதை விட, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள், பின் தங்கிய நிலையை போக்க இத்திட்டம் உதவிடும். இப்பகுதியில் வாகனப் போக்குவரத்து ஏற்படும் போது, ஆண்டுக்கு, 700 கோடி ரூபாய், டீசல் சேமிப்பு ஏற்படும் என்பதை முதல்வர் தெரிவித்தது, சில விஷயங்களை தெளிவாக சபையில் தெரிவிக்கும் நடைமுறை வருகிறது என்பதன் அடையாளம்.திடீரென, சேலத்தில் விமானப் போக்குவரத்து வசதி, ரோடு வசதிகள் வருவதாக, குறை கூறுவது சரியல்ல. ஏனெனில், துாத்துக்குடி துறைமுக நகரம். இதில் உள்ள தொழிற்சாலைகள் அதிகம். அவை துவங்கு முன் அல்லது துவங்கிய பின் பயனடைந்த கட்சிகள் நிலை வேறு.கட்சிகளுக்கு நிதி தருவதைவிட, சில பெரிய ஆலைகள் பாதுகாப்பு அல்லது சர்ச்சைகள் வராமல் தவிர்க்க, தொண்டு நிறுவனங்கள் அல்லது உள்ளூர் பிரமுகர்களுக்கு நிதி தந்திருப்பதாகவும் பேசப்படுகிறது. அதுவும் இனி வெளிவந்தால், தமிழகத் திட்டப்பணிகள் ஒழுங்காக நிறைவேறும் காலம் வரும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement