Advertisement

நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயியின் சோககீதம்...


இடிஞ்சு போன வீட்டைக் கட்ட வழியில்லாம இடிஞ்சு போய்க்கிடக்கிறேன், வயசாயிடுச்சு, பார்வையும் குறைவாயிடுச்சு நிம்மதியா இருக்கவேண்டிய காலத்துல நிம்மதியில்லாம இருக்கிறேன் என்று சொல்லி புலம்பியவர் யாரோ அல்ல நம் எல்லோருக்கும் தெரிந்த நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயிதான் அவர்.


சிவகெங்கை மாவட்டம் காளையார் கோவில் வட்டத்தில் உள்ள கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பாயி, ஊர்ப்பெயருடன் கொல்லங்குடி கருப்பாயி என்றே பிரபலமானவர்.


பள்ளிக்கூட வாசனை கிடையாது வீட்டில் இருந்தாலும் சரி மாடு மேய்கப்போனாலும் சரி எப்போதும் பாடிக்கொண்டேதான் இருப்பார்.இவரது தந்தை மற்றும் கணவராக அமைந்த செல்லையா ஆகியோர் இவரது பாடும் ஆர்வத்தை ஊக்கப்படுத்தவே உள்ளூர் வௌியூர் கச்சேரிகளில் பங்கேற்று நாட்டுப்புற பாடல்களை பாடஆரம்பித்தார்.


மண் வாசத்தோடு கூடிய ஆயிரக்கணக்கான பாடல்களை மனப்பாடமாகவே பாடும் வல்லமை கொண்டவர் கூடுதலாக இவரும் பல பாடல்களை சொந்தமாக பாடியுள்ளார்.


இவரது பாடல்களால் ஈர்க்கப்பட்ட நடிகர் பாண்டியராஜன் 85ம் ஆண்டு வௌியான தனது ஆண்பாவம் படத்தில் பாடி நடிக்கவைத்தார்,அதன்பிறகு புகழின் உச்சம் தொட்டார், தொடர்ந்து சில படங்கள் நிறைய கச்சேரிகள் கலைமாமணி விருது என்று வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது.


கண்ணை இமை காப்பது போல காத்து வந்த கணவர் செல்லையாஒரு விபத்தில் இறந்த பிறகு ரொம்பவே இடிந்து போனார்.குழந்தையும் இல்லாததால் தனி மரமானார்.


யாருக்காக வாழ்கிறோம் எதற்காக பாடுகிறோம் என்ற விரக்தியோடு வாழ்ந்தவரை ஊடகங்கள்தான் அவ்வப்போது ஊக்கம் கொடுத்து அவரை உயிர்பித்துக் கொண்டே இருந்தது.வறுமையில் வாடும் நாட்டுப்புற பாடகரின் துயர்துடைக்க வேண்டியது.


இதன் காரணமாக அரசு சார்பில் முதியோர் மாத வருமானமும்,நடிகர் சங்கம் சார்பி்ல் மாதம் நாலாயிரம் ரூபாய் வருமானமும் வந்தது, அது போக அவ்வப்போது கச்சேரிகளில் வரும் வருமானம் என்று போதும் என்ற நிலையில் வாழ்ந்துவந்தார்.


இந்த நிலையில் இவர் வசித்துவந்த வீடு இரண்டு மாதத்திற்கு முன்பெய்த கன மழை காரணமாக இடிந்து விழுந்துவிட்டது இவரது தம்பி மகள் வாசுகியின் வீட்டில் தற்காலிகமாக அடைக்கலம் பெற்றிருக்கிறார்.


விருந்தும் மருந்தும் மூன்று நாள்தானே தம்பி, யாருக்கும் தொந்திரவு தராமல் நான் என் வீட்டில் வாழ விரும்புறேன், வீட்டை எடுத்துக்கட்ட மனு கொடுத்தேன், பசுமை வீடு திட்டத்தின் அடிப்படையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அரசு கொடுத்துள்ளது அதற்காக மிகவும் நன்றி! ஆனால் இந்தத் தொகைக்கு அஸ்திவாரம் கூட போடமுடியாது என்கின்றனர், ஆகவே கூடுதலாக நிதி கேட்டு சென்னையில் முகாமிட்டுள்ளேன் தலைவர்கள் நடிகர்களை பார்க்கலாம்னு இருக்கேன் இங்கே சென்னை கோயம்படு சின்மயா நகரில் உள்ள நாட்டுப்புற கலைகள் கற்றுத்தரும் மையத்தில் காளீஸ்வரன் சார் தயவில் தங்கியுள்ளேன் வீடு எடுத்துக் கட்ட எல்லோரும் உதவுவார்கள் என்று நம்புகிறேன் என்றார் இவரது நம்பிக்கை நனவாகட்டும்.


எல்.முருகராஜ்


murugaraj@dinamalar.inDownload for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இவர் எண்பதுகளில் சென்னைக்கு பாட வந்தகாலத்தில் செம்மங்குடிக்கு சவால் விடும் கொல்லங்குடி என்றெல்லாம் எழுதிய ஊடகங்களிடம் போய் உதவி கேட்கலாமே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement