Advertisement

கூட்டணி அரசியல் என்ன மாற்றம் வரும்?

தேர்தலுக்கு முந்தைய அடிப்படை கொள்கைகளால் அமையுமா அல்லது தேர்தல் வெற்றிகளை வைத்து, எதிர்க்கட்சிகள் கூட்டணி அமையுமா என்பது, அந்தந்த சூழலில் தான் முடிவாகும்.
இன்றைய நிலையில், 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், மீண்டும், பா.ஜ., ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பில்லை என, பல்வேறு கட்சிகள் குரல் எழுப்புகின்றன. இதற்கு ஊடக விவாதங்களில், மக்களுக்கு சம்பந்தமற்ற அல்லது அவர்களை நேரடியாக பாதிக்காத விஷயங்கள் அலசப்படுகின்றன. இதில் ஒன்று, 1977ல் ஜனதா கட்சி எப்படி ஆட்சிக்கு வந்ததோ அது போல, காங்கிரஸ் தலைமையில், 'மகாபெரிய கூட்டணி' ஆட்சிக்கு வரும் என்ற வாதம்.
இன்று மக்கள் சிந்திக்கும் நடைமுறை, வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதால், 1977ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பீடு செய்வது சரியல்ல; அன்று, 'அவசரநிலை' என்ற இருட்டு ஜனநாயகத்தை கவ்வியது என்பதால், லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நடத்திய, 'முழுமைப்புரட்சி' அடிப்படையில் அமைந்தது ஜனதா ஆட்சி.
பிரதமர் மொரார்ஜி, தன் ஆட்சியை மூன்றாண்டுகளுக்குப் பின், சரண்சிங்கிற்கு விட்டுத் தந்திருந்தால், அதற்குபின் மீண்டும் இந்திரா பிரதமராகியிருக்க முடியாது. விவசாயிகள் தலைவர் சரண்சிங், பிரதமராகும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தார். அந்த தேர்தலிலும் தமிழகம், கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்கள் இந்திராவை ஆதரித்தன.
விவசாயிகள் போராட்டம் நடப்பதை மட்டும் வைத்து, 1977 சம்பவங்களுடன் ஒப்பிடுவது சரியாக வராது. அதற்குப்பின் இந்திரா ஆட்சி தொடர்ந்ததற்கு, அரசியலில் பிளவு கருத்துகள் முன்னுரிமை பெற்றது காரணமானது.ஜனநாயக பாதிப்பு , தனிநபர் கருத்துரிமை முடக்கம் ஏற்படக் கூடாது என்ற அடிப்படையில், ஜனசங்கம் என்ற கட்சியே ஜெயப்பிரகாஷ் தலைமையில் அவசர நிலையால் உருமாறியது.
அந்தக் காலகட்டத்தில், அதிகத் தொண்டர்களை சிறைவாசம் அனுப்பியது மட்டுமின்றி, ஜனநாயக உணர்வை, தேர்தலில் பணியாற்றிக் காட்டியது, ஆர்.எஸ்.எஸ்.,அன்று காங்கிரஸ் அல்லது மாற்றாக மற்றொரு தலைமை கொண்ட கட்சி என்ற நிலை உருவானாலும், பொது அணுகுமுறை ஜனதா கட்சிக்கு இல்லை, அன்றைய சோஷலிஸ்ட் சிந்தனையாளர்கள் அதை அழித்தனர். பா.ஜ.,வில் உள்ளவர்கள், 'இரட்டை உறுப்பினர்கள்' என்று கூறி, அவர்களது, ஆர்.எஸ்.எஸ்., பின்னணியை விமர்சித்தனர். விளைவு, காங்கிரஸ், தன் இடதுசாரி சித்தாந்தத்துடன் ஆட்சியைப் பிடித்தது.
அதற்குபின் கூட்டணி ஆட்சிகள் மலர்ந்த போது, அதன் பெரிய அங்கமாக காங்கிரஸ் இருந்தது. வாஜ்பாய் தலைமையிலான, பா.ஜ., கூட்டணியில், தி.மு.க., - மம்தா ஆகியோர் இருந்தது வேறு ரகம். இன்று, மோடி தலைமையில் தனி மெஜாரிட்டி ஆட்சி இருந்த போதும், அது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசே ஆகும். சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் வெளியேறியது, முற்றிலும் நிதி விஷயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடே ஆகும்.
மேலும், மம்தா, சந்திரபாபு, சரத்பவார், அகிலேஷ், மாயாவதி ஆகியோர், 100 சீட்டுகளை ஒருவேளை கைப்பற்றினால், அது அதிக குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில், இன்றைய நிலையில், 200 சீட்டுகளை, 2019 தேர்தலில் கைப்பற்றும் அளவுக்கு காங்கிரஸ் கட்சி இல்லை. வேறுவிதமாக பார்த்தாலும், பா.ஜ., அதன் இயற்கையான கூட்டணி கட்சிகளான அகாலிதளம், சிவசேனா ஆகியவை, ஒரேயடியாக, 150 இடங்கள் கூட கைப்பற்றாது என்பதை, எப்படி இன்று யூகிப்பது?

வட கிழக்கு மாநிலங்களில், பா.ஜ., காலுான்றிய விதம், மே.வங்கம், தென் மாநிலங்களில் அதன் வளர்ச்சி ஆகியவை, பரந்துபட்ட இந்தியாவில் உள்ள மிகப்பெரும் கட்சியாக நிலைத்து நிற்க வைத்திருக்கிறது. அதன் சிறந்த தலைவராக மோடியும், அவருக்கு துணையாக, கட்சி நிர்வாகம் மற்றும் தேர்தல் உத்திகளை நன்கறிந்த அமித் ஷாவும் உள்ளனர்.

தவிரவும், சில பொருளாதார சீர்திருத்தங்களில் முன்னணி நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்திருக்கிறது. இந்துக்கள் ஆதரவு கட்சி என்று மட்டும் கூறும் காலம் முடிவடைந்திருப்பதுடன், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரை ஈர்த்து, வெளிப்படையாகி வருகிறது.ஆகவே, திடீரென, 'பெடரல் முன்னணி' அல்லது மிகப்பெரும் கூட்டணியுடன் காங்கிரஸ் இணைந்து போட்டி என்பதால், ஆட்சியை பிடிக்க முடியுமா என்பது சந்தேகமே. காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருக்கிறது.

மாறாக, வரும் லோக்சபா தேர்தலில் இடதுசாரி கட்சிகள், பார்வர்டு பிளாக், மதச்சார்பற்ற கருத்தைப் பேணும் சிறிய கட்சிகள், தேர்தல் சமயத்தில் ஏற்படும் குழப்பங்களால், கரைந்து போனாலும் வியப்பதற்கு இல்லை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement