Advertisement

தேர்தல் சீர்திருத்தங்கள் அவ்வளவு சுலபமா?

எப்போது தேர்தல் நடந்தாலும், ஏதாவது ஒரு சிறிய அல்லது பெரிய கட்சி மின்னணு ஓட்டு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு என்ற புகாரைக் கூறி, தங்கள் தோல்வியை மறைப்பது வழக்கமாகி விட்டது. 18 வயது வந்தோருக்கு ஓட்டுரிமை, பெண்களுக்கு ஓட்டளிக்கும் நடைமுறை என, பல விஷயங்களில் நமது ஜனநாயக ஆணிவேர் வலுவாக இருக்கிறது.பணம் அல்லது மற்ற சலுகைகளுக்கு ஓட்டளிப்பது அல்லது ஜாதி, மத அடிப்படையில் ஓட்டளிப்பது என்ற புகாரை வைத்து, தேர்தல் நடைமுறைகளை முற்றிலும் கொச்சைப்படுத்த முடியாது.ஏனெனில், 20 ஆண்டுகளுக்கு முன்பாக அசாம், உ.பி., போன்ற மாநிலங்களில் உள்ள சில தொகுதி களில், மொத்த வாக்காளர்களில், 10 சதவீதம் வரை மட்டுமே ஓட்டுப் பதிவாகி, அதில் வெற்றி பெற்றவர்கள், எம்.பி.,க்களாக இருந்தது உண்டு.அந்தக் கால கதைகளில் இருந்து சிறிது சிறிதாக சீர்திருத்தங்கள் அமலாகின்றன. தேர்தல் கமிஷன் சுயேச்சையான அமைப்பு என்பதும், தேர்தல்அறிவிப்பு அமலானதும், அதன் ஆணைகள் அதிரடியாக அமைவதையும் காண்கிறோம்.கிரிமினல் அரசியல்வாதிகள் போட்டியிடுவது சிரமம் ஆகிவிட்டது. தேர்தல் நேர பணப்புழக்கத்தை தடுப்பதும், ஓரளவு அமலாகிறது.சமீபத்தில் நடந்த, நான்கு லோக்சபா மற்றும் 10 சட்டசபைக்கான இடைத் தேர்தல் முடிவுகள் ஆளும், பா.ஜ.,விற்கு அதிக வெற்றியைத் தரவில்லை. உ.பி.,யில் உள்ள லோக்சபா தேர்தல்களில், கடந்த சில மாதங்களாக நடந்த இடைத்தேர்தலில், அக்கட்சி தோல்வியைச் சந்தித்திருக்கிறது. அதை அக்கட்சிப் பிரமுகர்கள் சிறிது அச்சத்துடன் பார்க்கின்றனர். ஏன், தமிழகத்தில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரன் வெற்றி அலசப்பட்ட விதம் எளிதில் மறக்கமுடியாதது.சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில், உ.பி., குஜராத் உட்பட சில தொகுதிகளில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சரியாக செயல்படவில்லை. மாற்று இயந்திரங்கள் மூலம், மறு ஓட்டுப்பதிவு நடைபெற்றது.காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள், இந்த இயந்திரங்களில் பொத்தானை அமுக்கியதும், அவை, பா.ஜ., கட்சியின் சின்னத்தில் ஓட்டுகளை போட வைக்கும் வகையில் உள்ளன என்ற புகாரைக் கூறின,ஆனால் முந்தைய தேர்தல் கமிஷனர் கிருஷ்ண மூர்த்தி உட்பட பலரும், இந்திய சூழ்நிலைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட இதில் குளறுபடி இல்லை என்றனர். அதன் அமைப்புமுறையானது, அதன் தகவல் தொகுப்பு நடைமுறைகளை மாற்ற முடியாதது என, கட்சிகளிடம் விளக்கப்பட்டது. ஆனால், இத்தடவை அதிக வெயில் தாக்கத்தால் இவை செயல்படவில்லை என, கூறப்பட்டது. ஓட்டு இயந்திரத்தில், ஓட்டுப்பதிவானதும், தாங்கள் பதிவு செய்த வேட்பாளருக்கு அந்த ஓட்டு விழுந்துள்ளதா என்பதைச் சரிபார்க்கும் துண்டுச் சீட்டு வசதி, சில இயந்திரங்கள் மட்டும் இயங்கவில்லை. இதில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்படலாம்.மேலும், தேர்தல் சீர்திருத்தம் என்பது மிகப்பெரிய விஷயமாகும். மீண்டும் ஓட்டுச் சீட்டு நடைமுறை என்பதும், நாடு முழுவதும் ஒரே நாளில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் என்பதும் எளிதானதல்ல.ஓட்டுப் பதிவு நடைபெறுவதற்கு, 48 மணிநேரத்திற்கு முன்பாக, எந்த மாதிரி பிரசாரம் செய்ய அனுமதிப்பது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. சமூக வலைதளங்கள், மற்ற ஊடக வசதிகள், பல தகவல்களை பரப்புகின்றன. இது குறித்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் விதி, 126 பிரிவில், எவ்வித மாற்றம் கொண்டுவருவது என்பதை கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்க, அமைக்கப்பட்ட, 14 பேர் குழு தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டிருக்கிறது.அதனடிப்படையில், பிரசார உத்திகள் குறித்து, சில மாற்றங்கள் வந்தால், அதன் மூலம் சில ஒழுங்குமுறைகள் அமலாகும். அதேசமயம் வெற்றி பெற்ற வேட்பாளரை எதிர்த்து, அடுத்ததாக ஓட்டுகள் பெற்றவர் வழக்கு பதிவு செய்தால், அவ்வழக்கு ஓராண்டுக்குள் முடிவடைய, சுப்ரீம்கோர்ட் கருத்து தெரிவித்திருக்கிறது. இது தேர்தல் குழப்பங்களை குறைக்க உதவும்.ஆனால், வாக்காளர் அடையாள அட்டை, பூத் லிஸ்ட், அவற்றைக் கையாளும் பலம் மிக்க கட்சியினர் மேற்கொள்ளும் உத்திகள், 100 சதவீதம் சீராக்கப்படவில்லை. அது அவ்வளவு சுலபமும் அல்ல.ஆனால் நாடு முழுவதும், 130 கோடி மக்களுக்கு லோக்சபா பிரதிநிதிகள், 543 என்ற எண்ணிக்கை குறைவு. இதை மக்கள் தொகைக்கு ஏற்ப, 800 வரை அதிகப்படுத்த, அதிக விவாதங்களும், சிறந்த முன்னேற்பாடுகளும் தேவை.ஒட்டுமொத்த தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டுவர பார்லிமென்டில் ஒருமித்த கருத்துக்கள் வராதவரை, தனியாக ஒரு கருத்தை கமிஷன் அமல்படுத்துவது சிரமமே.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement