Advertisement

பகவான் ஸ்ரீ ரமணர் நாடகம்


பகவான் ஸ்ரீ ரமணர் நாடகம்

பக்தர்களால் பகவான் என்றும் மகிரிஷி என்றும் அன்போடு போற்றப்படும் ரமணர், மதுரையை அடுத்த திருச்சுழியில் 1879ம் ஆண்டு பிறந்தவர்.

பெற்றோர்கள் அவருக்கிட்ட பெயர் வேங்கடராமன்.

ஒருநாள் உறவினர் ஒருவர் வேங்கடராமனின் வீட்டிற்கு வந்தார். அவரை அதற்கு முன் கண்டதாக வேங்கடராமனுக்கு நினைவில்லை. அதனால் நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்டான். அதற்கு அவர் 'அருணாசலத்திலிருந்து வருகிறேன்' என்றார்.
'அருணாசலம்' என்ற வார்த்தையைக் கேட்டதுமே சிறுவனுக்கு ஓர் வியப்பு உண்டானது. உள்ளத்தில் அதுவரை இல்லாத ஓர் ஆனந்தப் பரவசம் ஏற்பட்டது. ஆனாலும் அதை இன்னதென்று அறிய இயலாத வேங்கட ராமன், 'அது எங்குள்ளது?' என்று கேட்டான் அதே ஆர்வத்துடன். 'அடடா, பத்தாம் வகுப்பு படிக்கும் பையன் நீ. உனக்கு அருணாசலத்தைத் தெரியாதா? திருவண்ணாமலை என்ற ஷேத்திரத்தின் இன்னொரு பெயர்தான் அருணாசலம்' என்றார் உறவினர்.

”அருணாசலம்” என்ற அந்தப் பெயரைக் கேட்டது முதல் இன்னதென்று விளக்க இயலாத ஒரு ஆனந்த அதிர்வு நிலை அடிக்கடி ஏற்படத் துவங்கியது. பாடங்களில் மனம் ஒப்ப மறுத்தது. பெரிய புராணத்தை விரும்பிப் படித்தான். ஆன்மீக உணர்வு தலை தூக்கியது. அடிக்கடி மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குச் செல்வதும், அம்மையையும், அப்பனையும் அருள் வேண்டி வழிபடுவதும் அவன் வழக்கமானது.

ஒருநாள்… இரவுநேரம்… சிற்றப்பாவின் வீட்டின் மாடியறையில் வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்த வேங்கட ராமனுக்கு, திடீரென 'சாகப் போகிறோம்' என்ற எண்ணம் தோன்றியது. உடல் வியர்த்தது. கை, கால் நடுங்கியது. 'சாவு என்றால் என்ன, அது எப்படி இருக்கும்' என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்படியே கை, கால்களை நீட்டி, விறைத்த கட்டை போலப் படுத்துக் கொண்டான். கண்களை இறுக மூடிக் கொண்டான். மூச்சை முயன்று அடக்கினான். ”இந்த உடல் செத்து விட்டது. ஆனால் இந்த உடலையும் மீறி ஓர் உணர்வு உயிர்ப்போடு இருக்கிறதே, அது என்ன? நான் என்பது இந்த உடலன்று; நான் என்பது இந்த மூச்சன்று; நான் என்பது இந்த நினைவுமன்று. இவற்றையெல்லாம் தாண்டிய தனிப்பொருள் ஒன்று என்னுள் ஒளிர்கிறதே, அதுவே நான். ஆம் அதுவே என்றும் அழிவற்ற நித்ய வஸ்துவாகிய ஆன்மா. அது பிறப்பதுமில்லை. இறப்பதுமில்லை. எங்கும் வியாபித்திருக்கும் பிரம்மமே அது. அதுவே நான்.” - இந்த எண்ணம் உறுதிப்பட்டவுடன், தான் யார் என்ற உண்மை தெரியவந்தது. அத்துடன் அவனது வாழ்வே மாறிப் போயிற்று.


நாளாக நாளாக படிப்பின் மேல் நாட்டம் குறைந்தது. விளையாட்டிலும் ஈடுபாடு போய் விட்டது. தன்னுள் ஆழ்ந்து கண்களை மூடி அமர்ந்திருப்பதும், அல்லது எங்கோ வெறித்து நோக்கியவாறு பிரம்மத்தில் தோய்ந்திருப்பதும் வழக்கமானது. ஒருநாள் வீட்டுப்பாடங்கள் செய்து கொண்டிருந்தவன் அதில் திடீரென சலிப்பும், வெறுப்பும் தோன்ற கண்களை மூடி அமர்ந்தான். அதைக் கண்ட அண்ணன் நாகசுந்தரம், ”இப்படியெல்லாம் இருக்கிறவனுக்கு இதெல்லாம் என்னத்துக்கு” என்றார் கோபத்துடன். ”ஆமாம், இவர் சொல்வது உண்மைதானே! இப்படியெல்ல்லாம் இருக்க நினைக்கும் எனக்கு இங்கே என்ன வேலை இருக்கிறது. என் தந்தை அருணாசலம் இருக்கும் இடத்தில் அல்லவா நான் இருக்க வேண்டும்' என்ற எண்ணம் தோன்றியது.

”எனக்கு பள்ளியில் சிறப்பு வகுப்பு இருக்கிறது. ஆகவே நான் போக வேண்டும்” என்றான் அண்ணனிடம். அண்ணனும் ''அப்படியானால் கீழே பெட்டியில் ஐந்து ரூபாய் இருக்கிறது. போகும் வழியில் என் கல்லூரியில் எனக்கான மாதக் கட்டணத்தைச் செலுத்தி விட்டுச் செல்” என்று கூறினார். வீட்டினுள் சென்றான். வேக வேகமாக உணவருந்தினான். சித்தி ஐந்து ரூபாயை அவனிடம் கொடுத்தாள். தன வழிச்செலவுக்கு மூன்று ரூபாய் மட்டும் போதும் என்று நினைத்தான் வேங்கடராமன். தன் நோட்டுப் புத்தகத்தில் இருந்து ஒரு காகிதத்தைக் கிழித்தான்.

“ நான் என்னுடைய தகப்பனாரைத் தேடிக் கொண்டு, அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பி விட்டேன். இது நல்ல காரியத்தில் தான் பிரவேசித்திருக்கிறது. ஆகையால் இதற்காக யாரொருவரும் விசனப்பட வேண்டாம். இதைப் பார்ப்பதற்காக பணமும் செலவு செய்ய வேண்டாம். உன் சம்பளத்தை இன்னும் செலுத்தவில்லை. ரூ. 2 இதோடு கூட இருக்கிறது.இப்படிக்கு—————


என்று எழுதி வைத்து விட்டுக் கிளம்பி விட்டான். 'நான்' என்று ஆரம்பித்து 'இது'வாகி கடைசியில் '—-' என்று கடிதத்தை முடித்து தனக்குள்ளே தான் ஒடுங்கி, பேரும், ஊரும் அற்றிருப்பதை சூட்சுமமாக பகவான் பால ரமணர் உலகுக்கு அன்றே உணர்த்தி விட்டார். ஆனால் அதை அப்போதே உணர்வார்கள் யாருமில்லை.

ரயிலில் ஏறி விழுப்புரத்தில் இறங்கி மாம்பழப்பட்டு வரை சென்று பின்னர் அங்கிருந்து கால்நடையாகவே நடந்து அண்ணாமலையை அடைந்தார் பால ரமணர். பின் அதுவே அவரது நிரந்தர வாசஸ்தலமாயிற்று. பாதாள லிங்கக் குகை, மாமரத்துக் குகை, பவழக்குன்று, விருபாக்ஷிக் குகை, ஸ்கந்தாச்ரமம் என பல இடங்களிலும் மாறி மாறி வசித்தவர், பின்னர் தாயை சமாதி செய்வித்த அடிவாரைத்தையே தமது நிரந்தர வாசஸ்தலமாகக் கொண்டார். அதுவே பின்னர் ரமணாச்ரமம் ஆயிற்று. அவரது அருள் ஒளி தரிசனம் பெற பலரும் திரண்டு வந்தனர். ஆன்மீக சூரியனாய் அவர் தகிக்க அவரது ஒளி தரிசனத்தைப் பெற உள்நாடு மட்டுமல்லாது வெளிநாட்டில் இருந்தும் பல அறிஞர்கள் வந்தனர். பகவானின் அருளமுதம் பருகினர். அவர் புகழைப் பரப்பினர்.


மனிதர்கள் மட்டுமல்லாது காகம், பசு, மயில், குரங்கு, நாய், அணில் என மிருகங்கள் மீதும் அளவற்ற அன்பு பூண்டு ஒழுகினார். காகத்திற்கும், பசு லக்ஷ்மிக்கும் முக்தி அளித்தார். தம்மை நாடி வந்தவர்களுக்கு ஆன்மீக உணர்வைத் தூண்டி உள்ளொளி எழுப்பினார். அவர்கள் தம்மைத் தாமே உணர்ந்து உயர வழிகாட்டினார்.


நாளடைவில் பகவானை புற்றுநோய் தாக்கிற்று. பகவான் தம்மை உடல் என்று நினைக்காததால் அந்த நோய் தாக்குதல் குறித்து கவலைப்படவில்லை என்றாலும் 14-04-1950 இரவு 8.47 மணிக்கு பகவான் மகா சமாதி அடைந்தார். இவர் உயிர் பிரிந்த தருணத்தில், ஆசிரமத்திலிருந்து மிகப் பெரிய பேரொளி ஒன்று தோன்றி, தெற்கிலிருந்து வடக்காகப் புறப்பட்டு, அருணாசல மலைக்குள் சென்று கலந்தது.

தாயாரின் சமாதியை ஒட்டி அவரது உடல் திருமந்திர முறைப்படி சமாதி செய்விக்கப் பெற்றது. இன்றும் ரமணாச்ரமத்திலிருந்தபடி தம்மை நாடி வரும் அன்பர்களுக்கு சூட்சும ரீதியில் ரமணர் உதவிக் கொண்டுதான் இருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

இதுதான் ரமணரின் எளிய வரலாறு


பாம்பே ஞானம் எழுத்து இயக்கத்தில் மகாலட்சுமி பெண்கள் நாடக குழு ட்ரஸ்ட் சார்பில் பகவான் ஸ்ரீ ரமணர் என்ற தலைப்பில் நாடகமாக்கியுள்ளனர்.

ரமணரின் பள்ளிப்பருவம் பின் திருவண்ணாமலை பயணம் அங்கு பாம்பு தேள்கடிகளுக்கு அஞ்சாமல் தியான நிலை பக்தர்களால் ரமணராக உயர்த்தப்படும் நிலை பால்பிரண்டன் என்ற ஆங்கில எழுத்தாளருடனுான சந்திப்பு, நான் யார்? என்ற தத்துவத்திற்கான விளக்கம் என்று நாடகம் ரமணரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை கோர்வையாக்கி நாடகம் அமையப்பெற்றுள்ளது.


முழுக்க முழுக்க பெண்களே நடித்துள்ளனர் இருபது பெண்கள் அறுபத்தைந்து காதபாத்திரங்களில் வருகி்ன்றனர்.அதிலும் ரமணரின் பல்வேறு காலகட்டத்திற்கு ஏற்ப நடித்தவர்களின் தேர்வும் நடிப்பும் அருமை.இவர்களை அன்பால் இணைத்து இயக்கிய பாம்பே ஞானத்திற்கு கூடுதல் சபாஷ்.

நாடகத்தில் அகங்காரம் பிடித்த செல்வந்தர் அண்ணாமலையாக வருபவருக்கும் அவரது மனைவியாக பாக்கியமாக நடித்த இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் எளிமையானதும் அர்த்தமுடையுதமாகும்.மேலும் பள்ளி மாணவனாக இருந்து பாலரமணராக மாறும் காட்சி அமைப்பும் அதற்கான ஔி அமைப்பும் அருமை.

மந்திரம் செய்யாமல் மாயவித்தைகள் புரியாமல் பலரது மனதை ஆட்கொண்டு நான் யார்? என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்திய ரமணரின் இந்த நாடகம் முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது.

நாடகம் பார்த்தவர்களே ஸ்பான்சார்களாக வௌியில் வரும் போது தங்களால் இயன்றதை உண்டியலில் போடுகின்றனர் அந்த உண்டியல் வருமானத்தைக் கொண்டு அடுத்த நாடகம் நடத்தப்படுகிறது.

வருகின்ற 4,5,6/6/18 ஆகிய தேதிகளில் சென்னை நாரதகான சபாவில் நாடகம் நடத்தப்படுகிறது உங்கள் இலவச டிக்கெட் தேவைக்கு தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் :8939298790,9884779588.

எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Arunachalam Palaniappan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    இந்த நாடகத்தின் வீடியோ பதிவு கிடைக்குமா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement