Advertisement

இது உங்கள் இடம்

சோற்று கற்றாழையை இளக்காரமாக நினைக்காதீர்!டாக்டர் வி.ராஜேந்திரன், இணை இயக்குனர் (பணி நிறைவு), கால்நடை பராமரிப்பு துறை, திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: ஆப்ரிக்கா கண்டத்தை பூர்வீகமாகக் கொண்டது, சோற்றுக்கற்றாழை. கி.மு., 1500 ஆண்டிலேயே, தீக்காயம், நோய் தொற்றுக்கும் மருந்தாக, சோற்றுக் கற்றாழையை, எகிப்தியர்கள் உபயோகப்படுத்தி உள்ளனர்.

கற்றாழையை வேரோடு பிடுங்கி, வீடுகளில் தொங்க விடுவர். அப்படி தொங்க விடும் போது, ஏழு ஆண்டுகள் வரை, பசுமையுடன் இருக்கக்கூடிய தாவரம்.சித்த மருத்துவர்கள் சோற்றுக் கற்றாழையின் முதிர்ந்த செடியை மட்டுமே, மூலிகையாக கருதினர். மூலிகைகளில், சர்வரோக நிவாரணி எனும் இடத்தை வசிக்கிறது, சோற்றுக் கற்றாழை.

சோற்றுக் கற்றாழை யை, சிலர் மருந்தாகவும் உட்கொள்கின்றனர். மனிதனுக்கு மட்டுமன்றி, கால்நடைகளுக்கும், அது, மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சோற்றுக் கற்றாழையை இளக்காரமாக நினைப்பது போல், சாமானியப் பொருள் இல்லை. இத்தாவரம், 20 தாதுக்கள், 12 வைட்டமின்கள், 18 அமினோ அமிலங்கள் கொண்டது. கால்நடைகளில் நலனை பேணுவதற்கு கற்றாழை அரிய மருந்து!

கன்று போட்ட பின், மடி வீக்கம் என்ற நோய் பசுக்களுக்கு வரும். இதனால், பஞ்சு போல இருக்கும் பசுவின் மடி, பாறாங்கல் போல் மாறி விடும். மடியில், பால் வராது. 'மடியில்லை போல் மாடு இல்லை' என, கிராமிய வழக்கில் கூறுவர். இந்த மடி வீக்கத்தை குறைக்க, கற்றாழையில் உட்பொருளான, 'ஜெல்' எனப்படும், கூழ் முக்கிய பங்காற்றுகிறது.

சோற்றுக் கற்றாழையுடன், மஞ்சள், 50 கிராம், சுண்ணாம்பு, 5 கிராம் எடுத்து கொள்ள வேண்டும். சிறிது தண்ணீர் சேர்த்து இப்பொருட்களை மிக்சியில் அரைத்துக் கொள்ளலாம். மடியில் இக்கலவை யை தடவ, வீக்கம் குறையும். ஒவ்வொரு நாளும், இக்கலவையை புதிதாக தயார் செய்ய வேண்டும். கலவையை மறுமுறை பயன்படுத்தக் கூடாது.

இந்த சிபாரிசை, தமிழ்நாடு கால்நடை மருத்துவக் பல்கலை வழங்கியுள்ளது. இதை பயன்படுத்துவதன் மூலம், சித்த மருத்துவத்திலும், சிறந்த மருத்துவ முறை உண்டு என, தெரிந்து கொள்ள வேண்டும்!

----

தபால் துறையில் கொஞ்சமாவது மாற்றம் வரணும்!சுப்ர.அனந்தராமன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'நவீன இந்தியாவின் கொத்தடிமைகள் இவர்கள்' என்ற தலைப்பில், இதே பகுதியில் வாசகர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார். அதில், கிராம தபால் ஊழியர்கள் படும் பாடு குறித்து வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார். அவர் கூறியபடி பார்த்தால், கிராமப்புற தபால்காரர்களுக்கு, தபால் துறை நிர்வாகம் ஓரவஞ்சனை செய்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

நகரங்களை போல், கிராமங்களிலும், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி அதிகரித்துள்ளது. அகில இந்தியாவிலுமே, மத்திய - மாநில அரசு துறைகளில், மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன், மக்களுக்கு சேவை செய்வோர், தபால்துறை ஊழியர்கள் மட்டுமே!கடந்த, 25 ஆண்டுகளாக, தபால் துறையில் ஊழியர்கள் நியமனமே கிடையாது.

பணி ஓய்வு பெற்ற ஊழியர்களின் காலி இடங்களில், புதிய ஊழியர்களை நியமனம் செய்யாமல், ஒப்பந்த அடிப்படையில், தற்காலிக ஊதியத்தில் தபால்காரர்கள் நியமிக்கப்படுகின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களில் கூட, தபால் துறையில் இது போன்ற நிகழ்வு நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக, தபால் கார்டு, இன்லாண்ட் லெட்டர், தபால் உறைகள், ஸ்டாம்ப் விலை உயர்த்தப்படவில்லை. இன்று விண்ணைத் தொடும் பணவீக்க நிலைமையில், தபால் துறைக்கு வருமானம் எங்கேயிருந்து வரும்...

தபால் கார்டின் விலை, ஜம்பது பைசா என்பது அக்கிரமம்... ஒரு தபால் கார்ட்டை அச்சடித்து, அதைப் பயன்படுத்துபவர், கன்னியா குமரியிலிருந்து, காஷ்மீருக்கு அனுப்பினாலும் கொண்டு சேர்க்கின்றனரே... அது, 50 பைசாவில் முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள்.

தபால் கார்டுகள் மலிவு விலையில் கிடைப்பதால், ஏல கம்பெனிகள் ஆயிரக்கணக்கில் வாங்குகின்றன. மற்ற உணவு பொருட்களின் விலை, 25 ஆண்டுகளில், 30 மடங்கு விலை உயர்ந்து விட்டது. 50 பைசாவுக்கு கார்டு மட்டும் தங்குதடையின்றி கிடைக்கிறது. தபால் துறையில் பணியாற்றும் கிராம தபால்காரர்களுக்கு, குறைந்த அளவில் ஊதியம் தரப்படுவதால், அவர்களின் குடும்பம் பரிதவிக்கிறது. எனவே, தபால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காகாவது, தபால் துறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும்!

----

வாய்க்கால் சரி இல்லை என்றால் வயல் நாசமாகும்!ஆ.பி.ஆண்டிஅம்பலம், மதுரையிலிருந்து எழுதுகிறார்: எவ்வளவு சம்பளம் உயர்ந்தாலும், சலுகை அதிகரித்தாலும், அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு முடிவே கிடையாது. இது பற்றி, முன்னாள் சபாநாயகர், கா.காளிமுத்து கூறிய கருத்தை, வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...

திருவள்ளூரில், 2003, ஜூலை, 4ல் நடந்த ஒரு விழாவில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதற்கு, இரண்டு நாட்களுக்கு முன் தான், ஒரு லட்சம் அரசு ஊழியர்களை, 'சஸ்பெண்ட்' செய்ய, ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார்.

அந்த கூட்டத்திற்கு, வட சென்னை அனல் மின் நிலைய அண்ணா திராவிட பொது தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், நாங்கள் சென்றிருந்தோம். அதில், முன்னாள் சபாநாயகர் காளிமுத்து, 'ஒரு ஊரில் உள்ள கண்மாய் என்பது அரசு. அந்த கண்மாயிலிருந்து, தண்ணீர் வெளியேறி செல்லும் வாய்க்கால் தான், அரசு ஊழியர்கள். அந்த தண்ணீர் சென்றடையும் வயல்கள் தான் மக்கள். அரசு நலத்திட்டங்கள் எல்லாம், மக்களை சென்றடைய செய்யும் வாய்க்கால், நல்ல முறையில் இருக்க வேண்டும்...

'ஆனால், வாய்க்கால்கள், 'நாங்கள் இல்லாமல், தண்ணீர் வயலுக்கு செல்ல முடியாது. எனவே, எங்கள் வழியாக செல்லும் தண்ணீரை, நாங்கள் உறிஞ்சி குடித்தது போக, மீதியை தான் வயலுக்கு அனுப்புவோம்' என்கின்றனர். வயல்களாகிய மக்கள் என்ன ஆவர்... 'அதைப் போல், அரசு ஊழியர்கள் ஆகிய நாங்கள் இல்லாமல், நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய முடியாது. எனவே, எங்களுக்கு தேவையானது போக, மீதியை தான் மக்களை அடைய செய்வோம் என்றால், அரசு என்ன செய்ய முடியும்' என பேசினார்.

அவர் கூறியதை போல் தான், இன்று வரை, ஓய்வு இன்றி, அரசு ஊழியர்கள் போராட்டம் செய்து, நாட்டை கெடுத்துக் கொண்டிருக்கின்றனர். எந்த கட்சி ஆண்டாலும், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி, நிர்வாகத்தை கெடுப்போர், அரசு ஊழியர்கள் தான். இதில், எந்தவித மாற்று கருத்தும் எனக்கு இல்லை!-

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement