Advertisement

பாசப்பறவைகளாம் பச்சைக்கிளிகளுக்காக உருகுது ஒரு உயிர்...

பச்சைக்கிளிகளுக்கு உணவு ஊட்டும் சேகர் என்றால் இன்றைக்கு உலகம் முழுவதும் தெரிகிறது ஆனால் அன்றாடம் அவர்படும் மனஉளைச்சல் யாருக்குமே தெரியவில்லை.

சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே உள்ள பாரதி சாலையை மாலை ஐந்து மணியளவில் கடப்பவர் என்றால் அங்கு சத்தமிட்டபடி பறக்கும் ஆயிரக்கணக்கான கிளிகளே காட்டிக்கொடுக்கும் சேகர் வீடு எது என்பதை.

சேகர் ஒரு கேமிரா மெக்கானிக் 62 வயதாகும் இவர் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக இப்போது குடியிருக்கும் இதே வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.மூன்றாவது மாடியில் குடியிருக்கும் இவர், வீட்டின் ஒரு பகுதியில் மனைவி மகன் பேத்திகளுடன் வசித்து வருகிறார் இன்னோரு பகுதியில் இவரது கேமிரா மெக்கானிக் உலகம் இயங்கிவருகிறது.

தனது வீட்டின் மொட்டை மாடி பகுதியில் எப்போதுமே காக்கை புறாக்களுக்கு சாப்பாடு வைக்கும் பழக்கம் இவருக்கு உண்டு .2014 சுனாமிக்கு பிறகு மொட்டை மாடியில் வழக்கமாக சாப்பாடு வைக்கும் போது எங்கிருந்தோ பத்து பதினைந்து கிளிகள் வந்து இவர் வைத்த சாப்பாட்டை சாப்பி்ட்டு சென்றன.

சரி இவைகளும் சாப்பிடட்டும் என்று சந்தோஷத்துடன் அவைகளுக்காக மறுநாள் கூடுதலாக அரிசி உணவை சாப்பிடவைத்தார் கிளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.இப்படியே நாளாக நாளாக கிளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போய் ஒரு கால கட்டத்தில் இரண்டாயிரம் கிளிகளுக்கு மேல் வரஆரம்பித்தது.

சேகரும் சோர்ந்து போகவில்லை இவ்வளவு நெரிசலான பகுதியில் சென்சிடிவான கிளிகள் நம்மை நம்பி சாப்பிட எங்கிருந்தோ வருகின்றது என்றால் அவற்ளை நாம் ஏமாற்றக்கூடாது என்பதில் திவீரமானார்.

வெய்யில் மழை குளிர் என்று வருடம் முழுவதும் கிளிகள் வருகின்றது வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் இரண்டு மடங்கு அதிகம் வருகின்றது.

அதிகாலை ஆறு மணியளவில் ஒரு முறையும் பின் மாலை நான்கு மணியளவில் ஒரு முறையும் என இருமுறை சாப்பாடு வைக்கிறார்.ஊறவைத்த அரிசியை தண்ணீர் பதத்தோடு குறுக்கு கட்டையில் கூறு வைப்பது போல கொஞ்சம் கொஞ்சமாக வைக்கிறார்.

குனிந்து நிமிர்நது கொதிக்கும் வெயிலில் காய்ந்து என்று தவம் போல ஒரு மணி நேரம் உணவை கட்டைகளிலும் மாடிச்சுவர்களிலும் வைத்துவிட்டு யாரும் அந்த இடத்திற்கு வந்துவிடாதபடி எல்லாபக்கத்திலும் தடு்ப்பு வைத்துவிட்டு அவரும் காவல் காத்தபடி தள்ளி நின்று கொள்கிறார்.

இவர் உணவு வைத்து முடிந்ததும் அதற்காக காத்திருந்தது போல கூட்டம் கூட்டமாக கிளிகள் பறந்து வருகின்றன. வரும் கிளிகளில் பல நேரடியாக தங்களுக்கு பிடித்த இடத்தில் உட்கார்ந்து அரிசி உணவை ரசித்து சாப்பிட ஆரம்பிக்கின்றன.சில கிளிகள் மாடியை ஒட்டி தொங்கும் வயர்களி்ல் உட்கார்ந்து சிறிது நேரம் நோட்டம் பார்த்துவிட்டு வந்து சாப்பிடுகின்றன.

கிழே ரோட்டில் ஏதாவது வாகனங்கள் சத்தமாக ஹாரான் ஒலி எழுப்பும் போது மட்டும் அதிர்ச்சியுடன் அங்கு இருந்து பறந்து களைவதும் பின் திரும்பவந்து சாப்பிடுவதுமாக இருக்கின்றன.இருட்டும் வரை நடக்கும் இந்த விருந்தி்ல் இப்போது புறாக்களும் கலந்து கொள்கின்றன.

காலையில் மூன்று மணி நேரம் மாலையில் மூன்று மணி நேரம் கிளிகளுக்காக தனது நேரத்தை ஒதுக்குகிறார்.மீதமிருக்கும் நேரத்தி்ல் தனது மெக்கானிக் தொழிலை தொடர்கிறார்

கிளிகளுக்கு உணவு கொடுப்பது தடைபட்டுவிடக்கூடாது அவைகள் பசியால் பரிதவித்துவிடக்கூடாது என்பதற்காக இந்த இடத்தைவிட்டு எங்கும் செல்வது கிடையாது நல்லது கெட்டது எல்லாம் இவருக்கு கிளிகளோடுதான்.

இவரைப்பற்றி கேள்விப்பட்ட நாகலாந்து கவர்னர் அரசு விருந்தினராக வந்து பறவைவிருத்தி பற்றி பயிற்சி வகுப்பு நடத்தும்படி கேட்டிருக்கிறார் கவர்னர் அழைப்பு என்றால் அடித்துபிடித்து யாராக இருந்தாலும் பறந்திருப்பர் ஆனால் இவரோ கிளிகளை பிரிந்து இருக்கவேண்டுமே என்பதற்காக பயணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டேவருகிறார்.

இந்தியாவின் சிறந்த மனிதர்கள் என மும்பையில் ஒரு உயர்நிறுவனம் இவரை தெரிவு செய்து வருட காலண்டரில் முதல் பக்கத்தில் படம் பிரசுரித்து கவுரவித்துள்ளது.

நோய்வாய்ப்பட்ட சில கிளிகளையும் மருந்து மாத்திரை உணவு கொடுத்து பராமரித்துவருகிறார்.இவைகள் குணமாகி இறக்கை வளர்ந்து பறக்கும் நிலைக்கு வந்ததும் சுதந்திரமாக பறக்கவிடுகிறார்.

இவரது இந்த சேவை ஊடகங்கள் வாயிலாக உலகம் முழுவதும் தெரிந்து போயிருக்கிறது.இதன் காரணமாக பலர் கிளிகளின் உணவான அரிசியை நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.யார் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் ஒரு நாள் செலவான ஆயிரத்து ஐநுாறு ரூபாயை தனது வருமானத்தில் இருந்து எடுத்துவைத்துவிடுகிறார்.

எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் இவரைக்காலி செய்யச் சொல்லி இப்போது பல விதங்களின் நெருக்கடி கொடுத்துவருகிறார் இதனால் சேகர் தற்போது தாங்கமுடியாத மனஉளைச்சலில் தவிக்கிறார்.இவருக்கு என்ன செய்வது என்பது புரியவில்லை கிளிகளோடு உணர்வுபூர்வமாக ஒன்றிவிட்ட நிலையில் அவைகளை விட்டு விலகிச்செல்வது என்பதை அவரால் நினைத்துக்கூட பார்க்க இயலவில்லை.

கிளிகளோடு இருக்க வேண்டும் என்பதற்காக இவர் கடந்த முப்பத்தைந்து வருட காலமாக சேகரித்து வைத்துள்ள கேமிரா மற்றும் அது தொடர்பான புகைப்படக்கருவிகள் அனைத்தையும் விற்க முடிவு செய்துவிட்டார்.

எனது சேகரிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள் அது போதாது என்றால் எனது பூர்வீக சொத்து முழுவதையும் எடுத்துக்கொள்ளுங்கள் ஆனால் என்னை மட்டும் கிளிகளிடம் இருந்து பிரித்துவிடாதீர்கள் என்று கேட்கிறார் சரியாகச் சொல்வதானால் கெஞ்சுகிறார்.

நான் என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை ஆனால் நான் குடியிருக்கும் இ்ந்த வீட்டைவிட்டு மட்டும் வௌியேற்றிவிடாதீர்கள்

இதையும் எனக்காகவோ என் குடும்பத்திற்காகவோ கேட்கவில்லை என்னையும் நான் தரும் உணவையும் நேசித்துவரும் பாசப்பறவைகளுக்காக, பச்சை கிளிகளுக்காக என்கிறார் உருக்கமாக...

சேகருடன் பேசுவதற்காக எண்:7338866007.

எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Cauvery - CHENNAI,இந்தியா

    சென்னையில் மற்றும் ஒரு இடத்தில, சாஸ்திரி நகர் முதல் நிழல் சாலை கார்பொரேஷன் வங்கி மாடியில் தினமும் பச்சை கிளிகள் கூட்டமாய் வந்து விளையாடுகிறது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement