Advertisement

ஆஸ்பத்திரி கழிப்பறைகளை சுத்தம் செய்யும் சேகர்

அரசு ஆஸ்பத்திரி கழிப்பறைகளை சுத்தம் செய்யும் சேகர் விஸ்வநாதன்.


அரசு ஆஸ்பத்திரி என்றாலே சுத்தமும் சுகாதாரமும் இருக்காது என்பது அதன் இலக்கணம் அதிலும் அங்குள்ள கழிப்றைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
இப்படிப்பட்ட சூழலில் பல தனியார் ஆஸ்பத்திரிகளை மிஞ்சும் வகையில் சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியின் புற்று நோய் சிகச்சை பிரிவு விளங்குகிறது.


ஏழை எளிய நோயாளிகள் புழங்கக்கூடிய கழிப்பறைகளை கருவறை போல சுத்தம் செய்யும் மகத்தான பணியை விஸ்வாஜெயம் தொண்டு நிறுவனம் இலவசமாக செய்து வருகிறது.

யாரும் செய்ய தயங்கும் இத்தகைய சேவையை செய்துவரும் இந்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் சேகர் விஸ்வநாதன், சென்னைக்காரர்,தனியார் நிறுவனம் ஒன்றின் மேலாளர்.

இவருக்கு வேண்டிய ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ராயப்பேட்டை புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார், அவரைப் பார்ப்பதற்காக வந்தபோது ஆஸ்பத்திரியின் சுற்றுச்சுழல் சொல்லிக்கொள்வது போல இல்லை.

மற்ற நோயாளிகளை விட புற்று நோயாளிகள் சுத்தமான சூழலில் இருக்கவேண்டியது அவசியம் என்ற நிலையில் நிலமை நேர்மாறாக இருக்கிறதே? என்று மனம் வருந்தியவர் மறுநாளே தீர்க்கமான முடிவு எடுத்தார். ஆஸ்பத்திரியின் சுத்தம் மற்றும் சுகாதாரத்திற்கான பொறுப்பை முறைப்படி ஏற்றுக்கொண்டார்.

தனது மாத வருமானத்தில் இருந்தும் கையிருப்பில் இருந்தும் பணத்தை போட்டு கடந்த 2012ல் ஆஸ்பத்திரியை சுகாதாரமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றார்.

ராயப்பேட்டை புற்று நோய் மருத்துவமனை 90 ஆயிரம் சதுர அடியில்,ஆறு மாடிகளுடன் உள்ளது.ஒவ்வாரு நாளும் வரக்கூடிய,
வெளிநோயாளிகள்,உள்நோயாளிகள்,நோயாளிகளின் உதவியாளர்கள் மற்றும் மருத்துவமனையைச் சார்ந்தவர்கள் என சுமார் 700 பேர் இங்குள்ள கழிப்பறைகளை உபயோகிக்கின்றனர்.ஒரு நாளைக்கு எட்டு முறை கழிப்பறைகளும், தரைப்பகுதியும், நோயாளிகள் புழங்கும் வார்டு அறைகளும் சுத்தம் செய்யப்படுகிறது.

பதினைந்து ஊழியர்கள் ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் வருடத்தில் 365 நாட்களும் பணிபுரிகின்றனர்.சுத்தம் செய்ய நாட்டு மாட்டின் ஹோமியம் உள்ளீட்ட சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்கள் உபயோகிக்கப்படுகிறது.

ஆஸ்பத்திரியின் எந்த பக்கம் போனாலும் மூக்கை பொத்திக் கொள்ள வேண்டியதில்லை, ஆஸ்பத்திரி வாசம் நம் உடலிலோ உடையிலோ உடன் வருவதும் இல்லை.

சேகர் விஸ்வநாதனின் இந்த 'சுத்தமான' நேர்மையான சேவையை பார்த்து குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் பலர் நன்கொடையாளர்களாக இவரது சேவையில் தங்களையும் இணைத்துக்கொண்டுள்ளனர்.ஊழியர்கள் சம்பளம் மற்றும் உபகரணங்களின் தேவை என மாதம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.

நன்கொடையாளர்களின் ஆதரவு காரணமாக, தரையை விரைந்தும் ஈரமில்லாமலும் சுத்தம் செய்யக்கூடிய,நோயாளிகளின் படுக்கை விரிப்புகளை மழை நேரத்திலும் துவைத்து காயவைத்து தரக்கூடிய,24 மணி நேரமும் சுகாதாரமான குடிநீர் வழங்க்கூடிய,அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் உபகரணங்களை ஸ்டெரிலைஸ் செய்துதரக்கூடிய எந்திரங்கள் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது.

முகமறியா ஏழை எளிய மக்களின் சுத்தத்தில் சுகாதாரத்தில் மருத்துவத்தில் அக்கறை கொண்டு செயல்படும் சேகர் விஸ்வநாதனின் சேவையை அங்கீகரித்து மேலும் ஊக்கமும் உற்சாகமும் தந்தால் இவர் தன் சேவையை இன்னும் பல அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு விரிவுபடுத்த எண்ணியுள்ளார், இவருடன் பேசுவதற்க்கான எண்:93800 22773.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • appavi - coimbatore,இந்தியா

    வாழ்க வளமுடன்

  • vidhuran - chennai,இந்தியா

    தெய்வம் மனுஷ ரூபேண கடவுள் சேகருக்கு நீண்ட ஆயுளை யும் ஆரோக்கியமான வாழ்க்கை யையும் கொடுக்கட்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement